நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குளிர்ச்சி... ஆனால் குளிர்ச்சியில்லை!

சர்க்கரை உபாதையினால் எனக்குப் பாதத்தில் எரிச்சல் இருக்கிறது. சந்தனத்தை அரைத்து பாதத்தில் இரவில் பூசி, மறுநாள் காலை பாதத்தைக் கழுவுகிறேன். ஆனாலும் எரிச்சல் குறையவே இல்லை. கூடிக்கொண்டேதான் இருக்கிறது. இ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:33 pm

எஸ். சுவாமிநாதன்

சர்க்கரை உபாதையினால் எனக்குப் பாதத்தில் எரிச்சல் இருக்கிறது. சந்தனத்தை அரைத்து பாதத்தில் இரவில் பூசி, மறுநாள் காலை பாதத்தைக் கழுவுகிறேன். ஆனாலும் எரிச்சல் குறையவே இல்லை. கூடிக்கொண்டேதான் இருக்கிறது. இது ஏன்?

பத்மநாபன், பொள்ளாச்சி.

தண்ணீர் சேர்த்து அரைத்த சந்தனக் கட்டையின் விழுது, பாதத்திலுள்ள தோலின் மீது ஈரமாகவும் கனமாகவும் பூசினால் தோலின் எரிச்சல் உடனே மறையும். ஆனால் சந்தன விழுது ஈரமாய் இருக்கும் வரையில்தான் எரிச்சல் இருக்காது. சந்தன விழுது உலர உலர எரிச்சல் மறுபடியும் தோன்றும். குளிர்ச்சியான சந்தன விழுது தோலின் மீது காய்ந்து போனால் உடலில் உள்ள வெப்பத்தைத் தோலிலுள்ள ஓட்டைகள் வழியே வெளிவர முடியாத வகையில் உள்ளேயே அடக்குகிறது. அடக்கப்படுவதால் உஷ்ணம் சந்தனப் பூச்சுக்கு முன்பிருந்ததைவிட உள்ளெரிச்சலை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் நீங்கள் சந்தன விழுது உலரும் முன்பே கழுவிவிடவும்.

குளிர்ச்சியான ஒரு பொருள், உடல் சூட்டை அதிகரிப்பதும், சூடான பொருள், குளிர்ச்சியைத் தருவதுமான விசித்திரமான வித்தியாசங்களை ஆயுர்வேதம் சில உதாரணங்களோடு எடுத்துக் கூறுகிறது. அவற்றை நன்றாகத் தெரிந்து உபயோகிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. உதாரணத்திற்கு, "எள் உள் உபயோகத்தினால் புத்தியின் ஞாபக சக்தியை வளர்க்கிறது. குளிர்ந்த வீரியத்தை உடையது. குளிர்ச்சியும் செய்கிறது. ஆனால் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் புத்தியின் ஞாபக சக்தியை வளர்க்கும் தாய்க் குணத்தை மட்டும் கொண்டுள்ளது. ஆனால் வீரியத்தில் உஷ்ணமாக மாறிவிடுகிறது, உள்ளுக்குச் சாப்பிடும்போது. இது மட்டுல்ல, எள்ளுக்கும் அதில் பிறக்கும் எண்ணெய்க்கும் வித்தியாசம். எள் உள் உபயோகத்தில் உடலில் கபத்தை அதிகப்படுத்துகிறது. ஆனால் அதன் எண்ணெய் நேர்மாறுதலாக கபத்தைக் குறைக்கிறது.

தயிர் நெய்ப்பு குணம் அதிகம் கொண்டுள்ளதால், உடல் வீக்கம் உள்ளவர்களுக்கு வீக்க உபாதையை அதிகமாக்குகிறது. தயிரிலிருந்து வரும் மோரும் வெண்ணெயும் வீக்க வியாதியைக் குணப்படுத்துகிறது.

தேன் பச்சையாகச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது செய்கிறது. தாதுக்களுக்குக் கெடுதி செய்யும் விஷங்களைக் கண்டிக்கும் விசேஷ குணம் உடையது. ஆனால் தேனை சூடு செய்தோ, சூடான பொருட்களுடன் கலந்து சாப்பிட்டாலோ, உடல் தாதுக்களைக் கெடுத்து விடுகிறது.

கோதுமை மாவைப் பூரியாகவோ ரொட்டியாகவோ சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. ஆனால் அதை நல்லெண்ணெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் கண்களுக்குக் கெடுதல் செய்யும். நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய்களில் பொரித்துச் சாப்பிட்டால் கண்களுக்குக் கெடுதி கிடையாது. கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து அனலில் கெட்டி மாவாகக் கிளறி, கண்களின் மேல் இமையின் மேல் சில மணி நேரம் கட்டி வைத்தால், கண்ணிலுள்ள சிவப்பு நிறம், நீர் வடிதல், வலி சேர்ந்த நோய் சீக்கிரம் குணமாகிறது. கண்ணுக்கு நல்லெண்ணெயும் நன்மையே. கோதுமையும் நன்மையே. இரண்டும் சேர்ந்தால் கெடுதி.

அகில் கட்டையும் சந்தனம் போல் நல்ல வாசனைத் திரவியம். உள் உபயோகத்தில் சந்தனம் குளிர்ச்சியைத் தருகிறது. ஆனால் அகில் கட்டையை அரைத்து விழுதை உடலில் எரிச்சல் உள்ள இடத்தில் மேலே கனமாய்ப் பூசினால் விழுது உலர உலர உள்ளெரிச்சல் குறைகிறது. அதாவது சந்தன விழுது உலர்ந்தால் எரிச்சல் கூடுகிறது. அகில் விழுது உலர்ந்தால் எரிச்சல் குறைகிறது. காரணம், உஷ்ண வீர்யம் கொண்ட அகில் கட்டையின் பூச்சு, தோலின் உள்ள வெப்பத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறது. உள் வெப்பம் வெளிப்பட்டுவிடுவதால் உள் எரிச்சல் வேதனையும் குறைகிறது.

அதனால் சந்தனத்தை நீங்கள் உலரவிட வேண்டாம். அகில் கட்டையின் விழுதை உலர வைத்து அதன் பிறகு கழுவி வர உங்கள் பிரச்னை தீர வாய்ப்பிருக்கிறது.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.