நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இட்லி சாப்பிட்டு மோர் குடியுங்கள்!

எனது வயது 42. அரசு ஊழியை. பரபரப்பான வாழ்க்கை. சென்ற ஒரு வருடமாக மாதவிடாய் நின்றுவிட்டது. குறைந்த ரத்த அழுத்தம் தவிர, வேறு பிரச்னைகள் இல்லை. என் பிரச்னை எது சாப்பிட்டாலும் வயிறு 'திம்' என்று உள்ளது. தூ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:01 pm

எஸ். சுவாமிநாதன்

எனது வயது 42. அரசு ஊழியை. பரபரப்பான வாழ்க்கை. சென்ற ஒரு வருடமாக மாதவிடாய் நின்றுவிட்டது. குறைந்த ரத்த அழுத்தம் தவிர, வேறு பிரச்னைகள் இல்லை. என் பிரச்னை எது சாப்பிட்டாலும் வயிறு "திம்' என்று உள்ளது. தூக்கம் தூக்கமாக வருகிறது. உற்சாகம்,சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறது. உடல் உள் உறுப்புகள் தளர்ந்து விட்டது போல் உள்ளது. இவை எதனால் ஏற்படுகிறது? இவை மாற என்ன வழி?

உஷா சுகுமார்,வேலூர்.

தங்களுடைய நீண்ட கடிதத்தில் காலையில் 1கப் டீ, இரண்டு இட்லி அவசரமாக சாப்பிட்டு வேலைக்குப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆயுர்வேதம் வகுத்துள்ள உணவுத் திட்டத்தின்படி உங்கள் உணவு அமையவில்லை. காலையில் இட்லி சாப்பிடுகிறீர்கள். அதில் உப்பு இருக்கிறது. உடனே ஒரு கப் டீ குடிக்கிறீர்கள். அதில் பால் இருக்கிறது. உப்புடன் கூடிய இட்லியில் பாலுடன் கூடிய டீ சேரும்போது, அது ஒரு விஷப்பொருளாக மாறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். ஆக, எது ஆரோக்கியத்தைத் தர வேண்டுமோ, அது விஷமாக மாறி உடலை உபாதைக்கு உள்ளாக்குகிறது. அதனால் இட்லியுடன் டீ குடிப்பதைவிட, மோர் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் மோர், இட்லியை வயிற்றில் கரைத்து, வேகமாகச் செரிக்க வைத்துவிடும். அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவாக இது அமையும்.

நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும், பிராண வாயுவின் மூலமாகத்தான் உணவுக்குழாய் வழியாக, கீழ்நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, வயிற்றிற்கு வந்து சேருகிறது. "க்லேதகம்' எனும் கபத்தால் உணவில் நீர் சேர்க்கப்பட்டு கூழ் போன்று ஆகிறது. வயிற்றிலுள்ள பசியைத் தூண்டும் "ஸமானவாயு' என்னும் வாயுவினால் உணவை செரிக்கச் செய்யும் "பாசகபித்தம்' எனும் திரவம் தூண்டப்பட்டு, உண்ட உணவு செரிமானம் ஆகிறது. செரிமானத்தில் முதல் பாகத்தில் நுரையுடன் கூடிய ஒரு நிலையை அடைந்து இனிப்பாக மாறி கபத்தை தோற்றுவிக்கிறது. வயிற்றிலிருந்து நழுவி, சிறு குடலில் நுழைந்து செரிமானத்தின் நடுநிலையில், உணவில் ஒரு வகையான புழுக்கம் ஏற்பட்டு, புளிப்பாக மாறி பித்தத்தை உற்பத்தி செய்கிறது. அதன்பிறகு, பெருங்குடலில் நுழைய அங்குள்ள நெருப்பினால் அதிலுள்ள நீர் முழுவதும் சுண்டப்பட்டு, வரளச் செய்து பக்குவப்படுத்தி, கெட்டியான மலமாகிறது. அந்த நிலையில் காரமான தன்மையைப் பெற்று குடலில் வாயு வெளிக்கிளம்புகிறது. உணவிலுள்ள நீர்த்த பகுதி சிறு நீராகவும் கனத்த பகுதி கெட்டியான மலமாகவும் மாறுகிறது.

இந்த செரிமான நிலைகளில் உற்பத்தியாக வேண்டிய கப-பித்த-வாதங்கள் சரியான வகையில் அமைந்தால் அவை "தோஷங்கள்' என்று பெயர் பெற்று சீராக இயங்கும். உணவில் குடல் பாதையிலுள்ள வேக வைக்கும் தன்மையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு விட்டால் அவை தோஷங்களாக மாறாமல் "மலங்களாக' மாறி நீங்கள் குறிப்பிடும் அதிக தூக்கம், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்புக் குறைவு, உள் உறுப்புத்தளர்ச்சி போன்றவை காணும்.

சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால் அதன் செரிமானத்தின் இறுதியில் உற்சாகம் சுறுசுறுப்பு போன்றவை வளர வேண்டும். உங்களுடைய விஷயத்தில் பிராணவாயு -க்லேதகபம்-பாசகபித்தம்-ஸமான வாயு போன்றவை அவசர வாழ்க்கையின் விளைவாக திறம்பட வேலை செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அதிலும், முதல் நிலை செரிமானத்தில் ஏற்படும் நுரை மற்றும் இனிப்புச்சுவை, உங்களை மந்தமான நிலைக்குத் தள்ளுகிறது. அதை சரிசெய்ய, உங்களுடைய கைப்பையில் ஒரு சிறிய டப்பாவில் அரை ஸ்பூன் சீரகம், ஓமம்,சோம்பு,4-6 ஏலக்காய் விதை, 2-4 கிராம்பு, ஒரு சிறிய லவங்கப்பட்டை, சுண்ணாம்பு தடவி காம்பும், இலையின் அடிப்பகுதியும் நீக்கப்பட்ட இரண்டு கொழுந்து வெற்றிலை ஆகியவற்றை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லவும். மதிய உணவிற்குப்பிறகு, வெற்றிலையில் மற்றவை அனைத்தையும் சிட்டிகை பாக்கும் சுருட்டி, வாயில் போட்டு மெல்லவும். அதிலிருந்து வரும் சாற்றை, எச்சிலுடன் விழுங்கி, சக்கை இருந்தால் துப்பிவிடவும்.

இவற்றிலுள்ள சூடான வீர்யம், உணவை வயிற்றில் அதிக நேரம் தேங்கவிடாமல் விரைவாக செரிக்கச் செய்வதால், தூக்கத்தைத் தடுத்து, உற்சாகம், சுறுசுறுப்பைத் தரும். உள்உறுப்புகளின் செயலாக்கத்தைக் கூட்டும். சக ஊழியர்கள் வியக்கும் வண்ணம் உங்களின் வேலைத்திறன் மேம்படும்.

ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு உதவக் கூடும். ஜீரகாரிஷ்டம் 15 மிலி +முஸ்தாரிஷ்டம் 15 மிலி கலந்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். வில்வாதி லேஹ்யம் 5 கிராம், காலை மாலை 6 மணிக்கு, வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடலாம்.  

(தொடரும்)



பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.