உலா: "பேருந்துக் குயில்' ராயப்பன்!
வயல் வெளிகளில்... கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில்... இப்படி உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் மனிதர்கள் களைப்பு தெரியாமல் இருக்க பாடப்படுவதுதான் நாட்டுப்புறப் பாடல்கள். மண் மணம், இலக்கிய நயத்துடன் இ


வயல் வெளிகளில்... கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில்... இப்படி உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் மனிதர்கள் களைப்பு தெரியாமல் இருக்க பாடப்படுவதுதான் நாட்டுப்புறப் பாடல்கள்.
மண் மணம், இலக்கிய நயத்துடன் இத்தகைய பாடல்களைப் பாடுவோர் இன்று அரிதாகிவிட்டனர். திரைப்படங்களில் இதுபோன்ற பாடல்கள், கொச்சையான வரிகள் மிகுந்து, இசை இரைச்சல்களிடையே நசுக்கப்பட்டு பொருள் விளங்காத நிலையிலேயே மக்களைச் சென்றடைகின்றன.
ஆனால், பஸ் இரைச்சலில், பயணிகளின் சத்தத்தில், தனது இனிய குரலால் மக்கள் பிரச்னைகளைப் பாடி.. கேட்போரை வியக்க வைக்கிறார் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரான மதுரையைச் சேர்ந்த ராயப்பன்.
நாற்சந்தி, நண்பர்கள் கூட்டம், போராட்டம் நடைபெறும் இடம் ஆகியவற்றை தனது பாட்டுக்கு உரிய தளங்களாகவே பாவித்து வருகிறார் ராயப்பன். காற்றில் ராகத்தைக் கலக்கவிட்டு, கேட்போர் இதயத்தைத் திருடும் திறமையுள்ள பாடகருக்கோ, நாலு வார்த்தை தொடர்ச்சியாகப் பேசக்கூட முடியாது என்பது ஆச்சர்யமான விஷயம். இனிமையான இசையால், கேட்போர் மனதைக் கட்டிப்போடும் ராயப்பனைச் சந்தித்து அளவளாவினோம்.
உங்களின் சொந்த ஊர், படிப்பு, வேலை பற்றி சொல்லுங்கள்?
எனது தந்தை, தாய் இருவரும் தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் உள்ள பச்சைக்காமாட்சி தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்தனர். அங்குள்ள நடுநிலைப் பள்ளியில்தான் படித்தேன். அப்பள்ளித் தலைமை ஆசிரியர் அருள்சாமிதான் இசை ஆர்வத்துக்கு வித்திட்டவர். தொடர்ச்சியாக பேசமுடியாமல் திக்கும் எனக்கு, ஊக்கமளித்து மேடை ஏற்றி பாடவைத்தவரும் அவரே. பின்னர், போடியில் மேல்நிலைப் பள்ளியை முடித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த நிலையில், மதுரை போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகச் சேர்ந்தேன்.
உங்கள் பாடல்களின் கருத்துகள் எதைக் குறித்து இருக்கும்?
பஸ் டிரைவராக இருப்பதால், பல்வேறு தரப்பினரையும் சந்திக்க முடிகிறது. பயணிகள் தங்கள் வீட்டுப் பிரச்னையிலிருந்து, உலகப் பிரச்னைகள் வரை பேருந்துப் பயணத்தின் போது அலசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் வாய்ப்பு எனக்கு இருப்பதால், அதையே பாடலாக வடிக்கிறேன்.
உங்களின் பாடல் வரிகள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் சென்றடைகிறதா?
எளிய வார்த்தைகள் மூலம் மக்கள் பிரச்னைகளை விளக்குகிறேன். அதாவது, இதுவரை 300 பாடல்களை எழுதிப் பாடியுள்ளேன். புதூர் கலையிரவுக் குழு மூலமே மக்களுக்காக பாட ஆரம்பித்தேன்.
முதன்முதலில் 1993-ல் போக்குவரத்துக்கழக ஊழியர் சார்பில் போராட்டம் நடந்தபோது, அதில் கைதாகி சிறை சென்றேன்.
அப்போது, அத்துறை அமைச்சரை நையாண்டி செய்து பாடியதே எனது முதல் பாடல். "குயில் தோப்பு' எனும் அமைப்பின் மூலம், இப்போதும் எனது பாடல் பயணம் தொடர்கிறது.
நீங்கள் பாடிய பாடல்களில் உங்களைக் கவர்ந்தது..?
எனது குழந்தைகளில் எந்தக் குழந்தை பிடிக்கும் என்பதுபோல உள்ளது உங்கள் கேள்வி..? என்றாலும் சில பாடல்கள் என்னை மட்டுமல்ல; கேட்போர் இதயத்தையும் கவர்வதாக உள்ளது.
நெல் மணிகள் உழவனைப் பார்த்துப் பாடுவதுபோல அமைந்த ஒரு பாடலில், ""ஏர் முனை தேய்ஞ்சாலும், உன்நேசம் தேய்வதில்லை, வான்மழை ஓய்ந்தாலும், உன் வேர்வை மழை ஓய்வதில்லை'' எனும் வரிகள் சிறப்பாக உள்ளதாக நினைப்பேன்.
அதேபோல, ""செந்தமிழே சித்திரமே.. செந்தாழம் பூவே...'' என்ற காதல் வர்ணனை பாடலில் வரும் வரிகள் என்னையே ஆச்சரியத்துக்குள்ளாக்கின.
நீங்கள் போலீஸ், போக்குவரத்து அதிகாரிகள் என அனைத்துத் துறை அதிகாரிகளையும் கிண்டலடித்தும், கேலி செய்தும் பாடுகிறீர்களே?
சாலையோர வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் போலீஸôரை பற்றி நான் எழுதிய பாடல் வரிகளை பல நேர்மையான போலீஸôரே ரசித்துப் பாராட்டியிருக்கின்றனர். அதேபோல, போக்குவரத்துத் துறை குறித்த விமர்சனப் பாடல்களையும் கோபம் மறந்து அதிகாரிகள் ரசித்துக் கேட்கின்றனர். கலையைக் கலையாக ரசிக்கும் நம்மவர்கள், சிந்தித்துச் செயல்பட்டால், குறைகளைக் களைந்து மக்கள் பயன் பெறுவர். ஆனால், யாரும் அப்படி இருப்பதில்லை.
அரசு மருத்துவமனைகளைப் பற்றிய உங்களது பாடல்கள் பலராலும் பாராட்டப் பெறுகிறதே?
அரசு பஸ்களில் பயணிப்பவர்களில் பெரும்பாலானோர் கிராமத்தினர்தான். அவர்களில் பலர் அரசு மருத்துவமனைக்குப் போகிறவர்களாகவே இருப்பர். அவர்களின் பேச்சைக் கேட்டால், அரசு மருத்துவமனைகளின் உண்மை நிலையை உணரலாம். அப்படிக் கேட்ட தகவல்களை வைத்துத்தான் "காசு கொடுத்து பெட்டுலதான் சேருரான்... அங்கே காச நோயை வாங்கி வீடு திரும்பறான்... படுக்க பாயின்றி நோயாளி சாகுறான்..' என்ற வரிகளைப் போட்டு எழுதியிருப்பேன்.
சினிமா வாய்ப்புகள் ஏதேனும்..?
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் நாடகத்தில் நடிப்பதுடன், அதில் பின்னணிப் பாடலையும் பாடுகிறேன். மக்கள் பிரச்னைகளை உரக்க எதிரொலிக்கும் வார்த்தைகளுக்குப் பின்னணியில் இருக்கும் இசையே எனக்கு வேண்டும். இசைக்கு பின்னால் எனது உயிரோட்டமுள்ள வார்த்தைகள் ஒளிந்துவிடுவதை விரும்பவில்லை. தெருவோரங்களும், போராட்டக் களங்களுமே எனக்கான இசைத்தளமாக கருதுகிறேன்.
- பஸ் நிலையத்தில் ராயப்பன் இயக்க வேண்டிய பஸ் நிற்கிறது. அதில், பயணிகள் நிரம்பி வழிகிறார்கள். டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன் பஸ்ûஸ கிளப்புகிறார். அதற்கு முன்னதாகவே, அவரது இசை பஸ்ஸில் பரவுகிறது. ஊர் வம்பு பேசுவதை நிறுத்திவிட்டு, அவரது இசையில் பயணிகளின் கவனம் குவிகிறது. சக மனிதர்கள், தங்களது அன்றாடத் துயரங்களை கொஞ்ச நேரமாவது மறந்திருக்கும்படி,பஸ்ஸின் வேகத்தைவிட வேகமெடுத்து ஒலிக்கிறது ராயப்பனின் குரல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...