தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆலயம்: கல்லூரிக்குள் கலைக் கோயில்!

கிறிஸ்தவர்களின் எதிர்ப்பை மீறி கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று இன்று எல்லோரும் போற்றும் கலைக் கோயிலாகத் திகழ்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லை!. அந்த ஆச்சரியத்திற்கு காரணம், அது தேவாலயமாக மட்டும் இல்லாமல் இந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:08 pm

கிறிஸ்தவர்களின் எதிர்ப்பை மீறி கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று இன்று எல்லோரும் போற்றும் கலைக் கோயிலாகத் திகழ்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லை!.

அந்த ஆச்சரியத்திற்கு காரணம், அது தேவாலயமாக மட்டும் இல்லாமல் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என மும்மத கட்டடக் கலை அழகியலையும் கொண்ட சமத்துவ திருத்தலமாக திகழ்வதுதான்.

"தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' என அழைக்கப்படும் பாளையங்கோட்டையின் அடையாளச் சின்னங்களில் ஒன்று தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி. அக்கல்லூரியின் பிரதான வாயில் வழியாக நுழைவோர் கண்ணில் முதலில் தெரிவது இந்த தேவாலயமாகத்தான் இருக்கும்.

இயேசு சபையோரால் தொடங்கப்பட்ட தூய சவேரியார் கல்லூரியை சவேரியார் கலைமனைகளின் அன்றைய அதிபர் தந்தை கே.ஏ. சூசை 1958-ல் தொடங்கினார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் இருக்கும் இடங்களில் தேவாலயமும் இருப்பது மரபு. கல்லூரி தொடங்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே  ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் முன்னாள் மறை மாநிலத் தலைவர் அருள்தந்தை டி. கோர்டன்.

அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் கட்டடக் கலையை மட்டுமே முன்னிறுத்தி தேவாலயங்கள் கட்டப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆலயமானது, இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களின் கட்டடக் கலைகளின் அழகியலையும் சேர்த்து கட்டப்பட்டது.

தேவாலயத்தை இப்படி இந்துக் கோயில் போலவும், மசூதி போலவும் கட்டுவதாகக் கூறி அன்றைய கிறிஸ்தவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. அன்று ஆலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்களின் வாரிசுகளில் சிலர் இன்றும் இந்த ஆலயத்திற்கு செல்வதில்லை என்றால் எதிர்ப்பின் தீவிரத்தை பார்த்துக் கொள்ளுங்களேன்.

12-வது சுதந்திர தினமான 1959 ஆம் ஆண்டில் இந்த விண்ணரசி அன்னையின் ஆலயம் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் முனைவர் டி.ஆர். அக்னிசுவாமியால் அர்ச்சிக்கப்பட்டது.

பொதுவாக தேவாலயங்களின் முகப்பில் ஒரே ஒரு பெரிய கோபுரம் இருக்கும். ஆனால் இந்த தேவாலயத்தின் முகப்பில் "சராசெனிக்' என்ற இந்திய மொகலாய பாணியில் 87 அடி உயரமுள்ள இரண்டு பெரிய கோபுரங்கள் அழகுற அமைந்துள்ளன. அவற்றின் எல்லாப் பக்கங்களும் தூபி மாடங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை ஆலயத்திற்கு எழிலூட்டுவதாக உள்ளன.

ஆலயத்தின் உள்ளே தலைமைப் பீடமானது, கோவில்பட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட மெருகூட்டப்பட்ட சிவப்பு நிறக் கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் தாமரைப் பூவின் மீது அமர்ந்துள்ள பெலிக்கன் பறவையானது தனது ரத்தத்தையே (இயேசு நாதரின் கடைசி ராப் போஜனத்தை நினைவு கூறுவதாக கொள்ளலாம்) தனது குஞ்சுகளுக்கு உணவாகத் தரும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. தாமரைப் பூவில் இந்துக் கடவுள்கள் அமர்ந்திருப்பது இயல்பான காட்சி. அதில் இருந்து இந்த காட்சி சற்று மாறுபட்டுள்ளது.

பீடத்தின் மேல் பகுதியில் வியாகுல அன்னை மற்றும் இயேசு நாதரின் கல்வாரிக் காட்சியை நினைவுபடுத்தும் 11 அடி உயர திருச்சிலுவை சிற்பக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாகக் காட்சி அளிக்கிறது.

தேவாலயத்தின் உள்புற தூண்களின் மேற்பகுதிகள் இதழ்விரிக்கும் தாமரை மொட்டுகளைப்போல அழகாக அமைந்துள்ளன. இந்த கல்தூண்களின் சிற்பக் கலையானது இந்திய முறையிலானது. தூண்கள் அனைத்தும் மொகலாய பாணியில் அமைந்த வளைவுகளினால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சமத்துவம் பேண வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார்கள் பாருங்கள்!

ஆலயத்தில் உள்ள ஒன்பது மரக் கதவுகளும் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. துயரம் மிகுந்த உலக வாழ்வில் நம்பிக்கையூட்டும் விதமாக ஜன்னல்களின் கீழ்ப்பகுதியானது கடலில் நங்கூரமிட்டது போன்று காட்சி அளிக்கிறது.

சிலுவைப் பாதைக்கான பதினான்கு ஸ்தலங்களும் களிக்கல் தூளினால் (பிளாஸ்டர் ஆப் பாரீஸ்) சுவர்களின் உட்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமரலாம்.

இந்த சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பு சேர்க்கிறது ஆலயத்தின் மணி. திருவழிபாட்டுக் காலங்களுக்கு ஏற்ப இசைக்கப்பட தகுந்த இசைக் கட்டைகளை உடைய ஆறு ஒத்திசைப்பு மணிகள் உள்ளன. இந்த மணிகள், பிரான்சு நாட்டைச் சேர்ந்த பக்கார்டு மற்றும் அவரது மகன்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி ஆலயத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அதைவிட ஒரே ஒரு முறை நேரில் பார்த்து விட்டால் பரவசம் பற்றிக் கொள்ளும் போங்கள்!

ஆலயம் எப்போதும் திறந்திருக்கும். திருவிழா நாள்களில் சிறப்பு வழிபாடும் நடைபெறும். இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடியுள்ள இந்த ஆலயம் இப்போது புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

திரைப்பட பிரியர்கள் அண்மைக் கால திரைப்படங்களான அறுவடை நாள், கற்றது தமிழ், உதயா, சாது, தாமிரபரணி, ஜென்டில்மேன் உள்ளிட்டவற்றில் அழகிய தேவாலயம் ஒன்றைப் பார்த்திருக்கலாம். இந்த ஆலயம் எங்கே இருக்கிறது? என சிலர் வியந்திருக்கலாம். அது இந்த தூய விண்ணரசி ஆலயம்தான். சந்தேகம் வேண்டாம்.

இந்த ஆலயத்தின் அழகைப் பார்த்து வியந்த திரைப்பட இயக்குநர்கள் பலர் தங்களின் கதைக் களத்தை இங்கேயும் விரியவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த ஆலயத்தின் சிறப்பிற்கு "திரைப்பட புகழ்' மட்டும் காரணம் அல்ல. அன்றைய "கிறிஸ்தவ தந்தையர்'களின் முற்போக்கான சிந்தனை, சமூக நல்லிணக்க விருப்பம், கலை ரசனை ஆகியவை இங்கே ஒட்டுமொத்தமாக பளிச்சிடுவதுதான் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.