இப்படி ருசிகரமான பதார்த்தங்களை காலை உணவாக உங்களால் சாப்பிட முடியாமற் போனது வேதனையான விஷயம்தான். வேறு என்னதான் சாப்பிடுவது? என்று நினைக்கத் தோன்றும். வயிற்றில் உள்ள புண் ஆற வேண்டும். பித்தத்தின் மேல் நோக்கிய விபரீத செயல் மாறி தன் நிலைக்குத் திரும்ப வேண்டும். உணவும் ருசியாக இருக்க வேண்டும். அந்த வகையில் காலை உணவாக ஜவ்வரிசி, நெல் பொரி, புழுங்கலரிசி, தனியா, நெல்லி முள்ளி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சியை வெதுவெதுப்பாகக் குடித்தால் மிகவும் நல்லது. இதில் நெல்பொரியும் அரிசியும் சம அளவாக அரை டம்ளரும், ஜவ்வரிசியை அரிசிக்குக் கால் பங்கும், தனியா, நெல் முள்ளியை வகைக்கு 2 கிராம் வீதமும், 5 டம்ளர் தண்ணீர் கஞ்சி காய்ச்சிப் பயன்படுத்துவது சிறந்தது.