பருவகாலம் மனிதர்களுக்கு வசப்படாதவை. அதற்குத் தக்கவாறு நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். கடும் கோடையில் கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, தர்பூஸ், கிர்ணிப்பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு, உடல் நீரை வற்றிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் செயல்களில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்தவும். வெளியே தெரியும் இந்தக் கால மாற்றத்தைப் போல, நீங்கள் உங்களுடைய உடல் உட்புற மாற்றங்களை மலம், சிறுநீர், வியர்வை ஆகிய கழிவுகளின் வழியாக நன்றாக அறியலாம். இவற்றில் ஏற்படும் நிறமாற்றம், வாசனை, அளவு, நேர அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவு மற்றும் செயல்களில் செய்யப்படும் மாற்றத்தின் வாயிலாக, நாம் இழந்த ஆரோக்கியத்தை மறுபடியும் பெறலாம். உதாரணத்திற்கு இவை அனைத்தும் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றம் கொண்டவையாகவும், அளவில் அதிகமாகவும், அடிக்கடி வெளியேறினால் பித்ததோஷத்தின் சீற்றம் ஏற்பட்டிருப்பதை ஊகித்து, அதற்கு எதிரான கசப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவைகளின் மூலம் பித்தத்தைக் கீழடக்கி, உடல் ஆரோக்கியம் பெறலாம். இதுபோன்ற மாற்றங்களை நீங்கள் கூர்ந்து கவனித்து அவற்றை ஏற்படுத்திய காரணங்களைத் தவிர்த்து ஏற்பட்டுள்ள சீற்றத்தைத் தணிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.