ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சப்பாத்தி...தண்ணீர்!
நான் ஒரு சர்க்கரை நோயாளி. இரவில் சுத்தமான கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி 3 - 4 மட்டுமே சாப்பிடுகிறேன். இருந்தாலும் மறுநாள் காலை வரை சாப்பிட்ட சப்பாத்தி எளிதில் செரிக்காமல், வயிறு மந்தமாகவே உள்ளது.


நான் ஒரு சர்க்கரை நோயாளி. இரவில் சுத்தமான கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி 3 - 4 மட்டுமே சாப்பிடுகிறேன். இருந்தாலும் மறுநாள் காலை வரை சாப்பிட்ட சப்பாத்தி எளிதில் செரிக்காமல், வயிறு மந்தமாகவே உள்ளது. இது எதனால்? எப்படி சரி செய்வது?
ஞானசேகரன், நாகர்கோவில்.
அஷ்டாங்க சங்கிரகம் எனும் ஆயுர்வேத நூலில் கோதுமையைப் பற்றி குறிப்பிடுகையில், அது குளிர்ச்சியான வீர்யம் கொண்டது, எளிதில் செரிக்காதது, குடலுக்கு மிகவும் தேவையான எண்ணெய்ப் பசையைத் தரக்கூடியது. உயிரை உடலில் சுகமாகத் தங்கச் செய்வது. வாதம் மற்றும் பித்த தோஷங்களின் சேர்க்கையால் ஏற்படக் கூடிய வயிற்று உபாதைகளை நீக்கக் கூடியது. ஆணின் விந்தணுக்களை வளரச் செய்யும் சக்தி உடையது. முறிந்து போன எலும்புகளை விரைவில் ஒன்று சேர்க்கும் தன்மை உடையது. இனிப்புச் சுவை கொண்டது. உடற்கட்டை வலுவாக்கக்கூடியது என்றெல்லாம் வாக்படர் முனிவர் அதன் பெருமைகளை எடுத்துக் கூறுகிறார். அதனால் நீங்கள் மிகச் சிறந்த உணவுப் பொருளைத்தான் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டு வருகிறீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
எளிதில் செரிக்காதது என்ற ஒரு குணம் நடுவில் வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அந்தக் குணம்தான் தங்களை படுத்துகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும், அந்த உணவு விரைவில் செரிமானம் ஆவதற்கு ஆயுர்வேதம் சில நீர்ப் பொருட்களை உபதேசம் செய்கிறது. அதற்கு அனுபானம் என்று பெயராகும். அந்த வகையில் தயிர், தேன், கோதுமை, மதுபானம் ஆகியவற்றில் எதைச் சாப்பிட்டாலும் இறுதியில் வாயை நன்றாக அலம்பிய பிறகு, கொதித்து ஆறிய அல்லது குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதிக அளவில் அல்லாமல் குறைந்த அளவுதான் குடிக்க வேண்டும். அனுபானம் பலவிதங்களில் இருந்தாலும் தண்ணீருக்கு நிகராக எதையும் குறிப்பிட இயலாது. அறுசுவைகளின் உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பதாலும், சகலஜீவராசிகளும் அதைக் குடித்துப் பழகியதாலும், தாகத்தைத் தீர்ப்பதாலும் உயிருக்குப் பாதுகாப்பளிப்பதாலும் தண்ணீர் உயர்ந்த அனுபானமாக விளங்குகிறது.
சப்பாத்தி சாப்பிட்ட பிறகு தண்ணீரை அருந்துவதால் குடலில் என்ன விதமான மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதையும் ஆயுர்வேதம் விளக்குகிறது. கோதுமையை அது குடலில் நுண்ணியதாக உடைப்பதால் உடலுக்குப் புஷ்டியை ஏற்படுத்துகிறது. புஷ்டியினால் உற்சாகமும், மெலிந்த உடலைப் போஷிக்கச் செய்வதால் உடலுக்கு வலுவும் ஏற்படுகிறது. தண்ணீரின் சேர்க்கையால் உண்ட கோதுமை உணவு மிருதுவாகி, நீர்ப்பசை ஏற்படுவதால் எளிதில் செரித்து, கோதுமையின் அற்புதமான குணங்களையும் செயல்களையும் உடலெங்கும் பரவச் செய்கிறது.
அனுபானத்திற்கு இத்தனை உயர்ந்த குணங்கள் இருந்தாலும் கழுத்திற்கு மேலே உள்ள பகுதிகளில் ஏற்படும் நோய்களிலும், ஆஸ்த்மா எனும் மூச்சிரைப்பு, இருமல் ,வாயில் கோழையுடன் எச்சில் ஊறுதல், விக்கல், குரலில் ஏற்படும் உபாதை, இருமலில் கோழையுடன் ரத்தம் கலந்து வெளியேறுதல், அதிகமான அளவில் பேசுபவர்கள், பாடுபவர்கள் போன்றோர், அனுபானமாக எந்த திரவப் பொருளையும் உணவிற்குப் பிறகு சாப்பிடக் கூடாது. வயிறு மற்றும் நெஞ்சுக் கூட்டினுள் கெடுதல் ஏற்படுத்தி, தொண்டைப் பகுதியில் நீர்க் கசிவை அதிகமாக்கி, பசித்தீயினருகில் எடுத்துச் சென்று அதை மட்டுப்படுத்துவதால் ஏற்படும் சேறு போன்ற நுதநுதப்பு வாந்தி மற்றும் வேறுபல நோய்களையும் தோற்றுவிக்கும். இந்த உபாதைகள் ஏதும் தங்களுக்கு இல்லாததால் நீங்கள் அனுபானத்திற்கு லாயக்கானவர்தான். இருந்தாலும் அனுபானமாக தண்ணீரைக் குடித்தவுடன் அதிகம் பேசுவது, பாடுவது, அதிக தூரம் நடப்பது, உடனே படுத்துத் தூங்குவது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...