மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா!
திருவிழாக்கள் எல்லாம் மக்களின் உள்ளார்ந்த உணர்வோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகின்றனவா என்றால் ...


நாட்டில் திருவிழாக்களுக்கு பஞ்சமே இல்லை. வறுமையானாலும், செழிப்பானாலும் ஏதேனும் ஒரு திருவிழாவை அவ்வப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த திருவிழாக்கள் எல்லாம் மக்களின் உள்ளார்ந்த உணர்வோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால் இங்கே ஒரு திருவிழா, ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை முழு நிலவு நாளன்று மலை உச்சியில் உற்சாகமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுதான் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா.
சிலப்பதிகாரத்தின் காவிய நாயகியான கண்ணகி, மதுரையில் தனது கணவன் கோவலனை அநீதிக்கு பறிகொடுத்த பிறகு, தனக்கு நீதி கிடைக்காததால் அந்த நகரை தனது கோபத் தீயால் எரித்துவிட்டு மேற்கு நோக்கி தலைவிரி கோலமாக சுமார் 90 மைல் தூரம் நடந்தே செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (மங்கலதேவி மலை) செல்லும் கண்ணகி, அங்கு வானுலகிலிருந்து பூப்பல்லக்கில் வந்திறங்கிய கோவலனுடன் விண்ணுலகம் சென்றாள் என்கிறது சிலப்பதிகாரம்.
கண்ணகி விண்ணுலகம் சென்ற அந்த மங்கலதேவி மலை உச்சியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவன் என்ற மன்னரால் கண்ணகி கோட்டம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள மேலக்கூடலூர் அருகே பளியங்குடி மலைக் கிராமத்துக்கு தெற்குப் பகுதியில் வண்ணாத்திபாறை சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4386 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த கண்ணகி கோட்டம்.

இமயமலையில் கல்லெடுத்து அதை கங்கை நதியில் நீராட்டி தலைச் சுமையாக இங்கு கொண்டு வந்து அதில் கண்ணகி சிலையை வடித்து கோட்டத்தில் வைத்து வணங்கினான் மன்னன் என்பது வரலாறு. மன்னன் கட்டியெழுப்பிய கண்ணகி கோட்டம், கால ஓட்டத்தில் சிதிலமடைந்து அடையாளம் தெரியாமல் அழியும் நிலைக்கு சென்றுவிட்டது. மக்களும் மறந்துவிட்டார்கள்.
சிலப்பதிகாரத்தை தெளிவுற கற்ற தமிழ் அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் கண்ணகி நடந்து சென்ற பாதையை கண்டறிந்து அதன் மூலம் கோட்டத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவ்வாறு ஈடுபட்டவர்களில் ஒருவரான தஞ்சையைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வறிஞர் பேராசிரியர் சி. கோவிந்தராசனார், 1950-களில் கண்ணகி கோட்டத்தை கண்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கோட்டம் சீரமைக்கப்பட்டு 1959-ஆம் ஆண்டு முதல் சித்திரை முழுநிலவு நாளன்று கண்ணகி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா என்றால் மேள-தாளம், ஆட்டம்-பாட்டம், வானவேடிக்கை, கச்சேரி எல்லாம் கிடையாது. கண்ணகி தரிசனம் மட்டுமே. இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகமும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.
மதில் சுவர்களுடன் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கண்ணகி கோட்டமானது தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. வளாகத்தில் நிரந்தரமான மேற்கூரை கூட இல்லை. மொட்டை மலையில் ஒற்றை மரம் மட்டும் கொஞ்சம் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. திருவிழா நாள்களில் மட்டும் புல் பூண்டுகளை அகற்றிவிட்டு சுத்தம் செய்து கண்ணகியை வழிபட சீரமைத்து வைத்துள்ளனர்.
அந்த வளாகத்தில் கண்ணகி கோயில் மற்றும் சிவன் கோயிலுடன் பிற்காலத்தில் கேரளத்தவர்கள் நிர்மாணித்த துர்க்கை, விநாயகர் கோயில்களும் உள்ளன. இங்கு வரும் பெண்கள் பொங்கலிட்டும், பாரம்பரிய பூஜைகளை செய்தும் கண்ணகியை வழிபட்டு செல்கின்றனர்.

கண்ணகி கோட்டத்துக்கு செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. பளியன்குடி வரையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்திலும், பேருந்துகளிலும் சென்று பின்னர் அங்கிருந்து சுமார் 6.6 கி.மீ. தூரம் காட்டுப் பாதையில் நடந்து சென்று கோயிலை அடையலாம். இது வன விலங்குகள் வாழும் பகுதி என்பதால் கவனம் தேவை. திசை மாறியும் சென்றுவிடக் கூடாது. நடந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன.
மற்றொன்று, கேரள மாநிலம் குமுளி சென்று தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயம் வழியாக சுமார் 13 கி.மீ. தூரம் புழுதி பறக்கும் குறுகிய மண் சாலையில் 4 சக்கர வாகனங்களில் மட்டுமே செல்லக் கூடிய பாதை. சித்திரை முழுநிலவு நாளன்று அதிகாலை 5 மணிக்கு குமுளி பேருந்து நிலையத்திலிருந்து கேரள ஜீப்புகள் செல்கின்றன. கட்டணம் கொடுத்து செல்லலாம். ஐந்தாறு மலைகளை தாண்டி செல்லும் இந்த பயணத்தை கேரள போலீஸார் ஆங்காங்கே ஒழுங்குபடுத்துகின்றனர். இது பாதுகாப்பான பயணம்.
இந்த இரு வழித்தடங்களும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் என்பதால் திருவிழா நாளன்று மட்டுமே பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். கேரள வனத்துறையினரின் கெடுபிடிகள் அதிகம். அதையும் தாண்டி இந்த திருவிழாவில், தமிழ்நாடு மற்றும் கேரளத்திலிருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரவுக்குள் பக்தர்கள் அனைவரும் கோயிலைவிட்டு வெளியேறிவிட்டதை அதிகாரிகள் உறுதி செய்து கொள்வர்.
மலை உச்சியில் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவுகளை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் அளிக்கப்படுகிறது. மருத்துவ வசதிகளும் உண்டு.
கண்ணகி கோட்டம் அமைந்துள்ள வனப் பகுதி தமிழ்நாட்டுக்கே சொந்தம் என கல்வெட்டு உள்ளிட்ட பல ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன. ஆனாலும், அங்கு கேரள அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. கோயிலுக்கு வருவோர் முதலில் கேரள கோயிலுக்கு சென்றுவிட்டு பின்னர் கண்ணகி கோயிலுக்கு வரும் வகையில்தான் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்புறம் உள்ள கண்ணகி கோயிலின் வாசல்தான் பிரதான வாசல் என்பது ஆய்வறிஞர்களின் கருத்து.

தமிழ்நாடு-கேரளம் இடையே முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தீராமல் இருந்தாலும் இந்த கண்ணகி திருவிழாவை இரு மாநில மக்களும் இணைந்து கொண்டாடி வருவது ஒரு வகையில் சிறப்புதான்.
பளியன்குடி வழியாக கண்ணகி கோயிலுக்கு செல்ல தமிழக அரசு சாலை அமைத்தால் அது இங்குள்ள பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி சென்று வரலாம். ஆனால் அரசு ஏனோ அதில் ஆர்வம் காட்டுவதில்லை. தஞ்சை பெரிய கோயில் குறித்து சிலருக்கும் இருக்கும் மனத்தடை போன்றே கண்ணகி கோயிலுக்கு சென்றால் ஆட்சிக்கும், பதவிக்கும் ஆபத்தாகிவிடும் என்ற நம்பிக்கையால் ஆட்சியாளர்கள் இந்த கோட்டத்துக்கு செல்லவோ, அதை மேம்படுத்தவோ ஆர்வம் காட்டுவதில்லை என்கின்றனர் உள்ளூர் மக்கள். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவுக்காக மலைப் பகுதியில் சாலை அமைக்கவும், கோட்டத்தை புதுப்பிக்கவும் பல கோடி ரூபாய்களை செலவு செய்ய வேண்டுமா என்ற எண்ணம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் தடை பல தாண்டி தமிழக மக்கள் ஆண்டுதோறும் உணர்வுப்பூர்வமாகவும், உற்சாகமாகவும் கண்ணகி கோட்டம் சென்று திருவிழாவை கொண்டாடி தமது உரிமையை நிலைநாட்டி வருகின்றனர்.
படங்கள்: ரா. ரஞ்சித்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...