தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 22: மியுனிக் அக்டோபர் ஃபெஸ்ட் என்கின்ற பீர் திருவிழா!

மத்திய ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி. இந்த நாட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். தொன்மை வாய்ந்த கலாச்சாரம், அழகிய இயற்கையின்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:09 pm

சாந்தகுமாரி சிவகடாட்சம்


"கடவுள் நம்மை நேசிக்கிறார், நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறார் என்பதற்கு ஆதாரம் பீர்' 
- பென்ஜமின் பிராங்லின்

பீர் விரும்பிகளின் இத்தகைய முழக்கங்களையும், ஆனந்தக் கூத்தாட்டங்களையும் காணவேண்டுமா, செல்லுங்கள் மியுனிக்குக்கு. அங்கே அக்டோபர் ஃபெஸ்ட் என்று வருடம்தோறும் கொண்டாடப்படுகின்ற பீர் திருவிழாவில் இத்தகைய காட்சிகள் சர்வசாதாரணமாக அரங்கேறும்.

மத்திய ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி. இந்த நாட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். தொன்மை வாய்ந்த கலாச்சாரம், அழகிய இயற்கையின் வெளிப்பாடுகள், இவைகளோடு உலகின் மிக முக்கியமான பொருளாதார சக்தி என்கின்ற பெருமைகளோடு தலைநிமிர்ந்து நிற்கும் ஜெர்மனி என் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தது.

பிளாக் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படுகின்ற கருப்பு காடுகள், சூரிய ஒளி உள்ளே ஊடுருவி செல்லமுடியாத அளவிற்கு பைன், ஓக், எல்ம் (Elm) மரங்களினால் சூழப்பட்டிருப்பதால் இந்த பெயர். இந்த காடுகளின் வழியாக பயணப்பட்டபொழுது எல்லாம், அந்த பகுதிகளின் அழகில் என் சிந்தையைத் தொலைத்திருக்கிறேன்.

சென்ற வருடம் ஒரு பதினைந்து நாட்கள் விடுமுறையில் எங்கே செல்லலாம் என்ற முடிவை எடுக்கும்பொழுது, ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான மியுனிக்கில் நடக்கும் பீர் திருவிழாவை முதல் நாள் தொடங்கி ஒருவாரம் பார்த்துவிட்டுப் பிறகு பிளாக் ஃபாரஸ்டில் இருக்கும் கென்கென்பேஷ் (Gengenbach) என்கின்ற அழகிய கிராமத்தில் ஐந்து நாட்கள் தங்கி, சுற்றியுள்ள இடங்களைப் பார்ப்பது என்று திட்டமிட்டோம்.

""பீர் திருவிழாவா! அங்கே போய் நீ என்ன செய்யப்போகிறாய்?'' என்று என் மகன் என்னை கிண்டல் அடித்தான்.

தண்ணீர், பழரசங்களைத் தவிர மதுபானங்களை கைகளினால்கூட தொட்டத்தில்லை. அதனால் இப்படி கலாய்க்கப்பட்டேன்.

பீர் திருவிழாவில் நடக்கும் கேளிக்கைகளைக் கண்களால் ரசிக்கின்றேன். பெவேரியன் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தும் அக்டோபர் ஃபெஸ்ட் பீர் திருவிழாவில் கலந்துகொள்வேன் என்று சூளுரைத்துக் கிளம்பினேன்.

உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் இந்த அக்டோபர் ஃபெஸ்ட் முதல் இடத்தில் நிற்கிறது. பெயர் என்னவோ அக்டோபர் விழா என்றாலும், தொடக்கம் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரக் கடைசியிலும், முடிவு அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறிலும் இருப்பது ஏன் என்கின்ற கேள்வியை எழுப்புகின்றது. 

1810-ஆம் ஆண்டில் இந்த பீர் திருவிழா ஆரம்பமானது. முதலில் அக்டோபர் மாதம் தொடங்கிய விழா, வானிலை, மற்றும் அதிக உல்லாசப் பயணிகளைக் கவர்ந்து இழுக்க வேண்டும் என்ற காரணங்களினால் செப்டம்பர் மாதமே கொண்டாட்டங்களைத் தொடங்கியது.

Story image

எந்த ஒரு திருவிழாவுக்கும் தொடக்கத்துக்கு என்று ஒரு காரணம் இருக்குமே, இந்த அக்டோபர் பீர் திருவிழா மட்டும் இதற்கு விதிவிலக்காகுமா!

1810-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, இளவரசர் (LUDWIG) லுட்விக், இளவரசி (THERESE) டிரியசை கரம்பிடித்தார். இந்த கோலாகலத்தைக் கொண்டாட மியுனிக்கின் மக்களை அரச குடும்பத்தினர் இருகரம் நீட்டி வரவேற்றனர். டிரிஸ்ஸியன் வீஸ் (Theresienwiewse) என்று அழைக்கப்பட்ட மிகப்பெரிய புல்வெளி மைதானத்தில் மக்கள் ஒன்றுகூடினர். பலவிதமான கேளிக்கைகளுக்கு இடையே மியுனிக்கில் தயாரிக்கப்பட்ட மிக உயர்ந்த ரக பீர் பேரல், பேரல்களாக மக்களுக்காக கொண்டுவரப்பட்டு பரிமாறப்பட்டது. ஆறாக ஓடிய பீரில் மக்கள் நீந்தி குளித்தனர் என்றே சொல்லலாம். இப்படி உற்சாகத்தின் உச்ச கட்டமாக அரங்கேறிய விழாவின் முடிவில் குதிரை பந்தையங்கள் நடைபெற்றன.

1811-ஆம் ஆண்டில் மீண்டும் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவோடு விவசாய கண்காட்சியும் சேர்ந்துக் கொண்டது. இன்றைக்கு பீர் கூடாரங்களை அமைத்து இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள். குதிரைப் பந்தையங்கள் மறைந்து இங்கே மிகப்பெரிய பொருட்காட்சியும், அதில் பலவிதமான விளையாட்டு அம்சங்களும், உணவு ஸ்டால்களும் ஆக்ரமித்துக் கொண்டுள்ளன. விவசாயப் பொருட்காட்சி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் செயல்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து மியுனிக்கில் நாங்கள் தங்கப் போகும் ஹோட்டலை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். மறுநாள் அக்டோபர் ஃபெஸ்ட் திருவிழாவின் தொடக்க நாளாக இருந்தது. ஜெர்மனியின் தென்கிழக்கு மாநிலமான பெவேரியாவின் தலைநகர் மியுனிக் என்பதால், அங்கே பெவேரியன் கலாச்சாரமே அதிகமாகக் காணப்படுகிறது.

அக்டோபர் பீர் திருவிழாவுக்கு என்றே ஸ்பெஷலாக பெண்கள் அணியும் பெவேரியன் ஆடையான டென்டல்லும், ஆண்கள் அணியும் லிடர்ஹோசன்னும் ரயில் நிலையங்களின் வெளியிலும், துணிக்கடைகளிலும், பஜார்களிலும் விற்பனைக்காக கடைவிரிக்கப்பட்டிருந்தன. மக்கள் மகிழ்ச்சி பொங்கும் முகங்களோடு, கைகளில் ஷாப்பிங் பைகளை ஏந்திய வண்ணம் கும்பல், கும்பலாக நடைபயின்று கொண்டிருந்தனர்.

இந்த பீர் திருவிழாவிற்காக சுமார் ஆறு மில்லியன் மக்கள் உலகின் பல பகுதிகளில் இருந்தும், ஜெர்மனியின் பிற மாநிலங்களில் இருந்தும் மியுனிக்கில் வந்து குவிகிறார்கள்.

"நல்ல நேரம் அருகில் இருக்கு வாருங்கள்
இங்கே அதிகமான சாப்பாடும்
அதிகமான பீரும் இருக்கும்
எங்களோடு வருடாந்திர
அக்டோபர் ஃபெஸ்டில் கலந்துகொள்ளுங்கள்'
இப்படிப்பட்ட வாசகங்கள் எங்கும் காணப்பட்டன.

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.