கடும் போராட்டங்களுக்கு இடையே 1960-ல் இருவரும் திருச்சி அருகே மலைக்கோட்டையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்த ராஜாம்பாள், மலைக்கோட்டை கோயிலுக்கு வரவில்லை. பின்னர் அருகில் உள்ள முருகன் கோயிலில் வையாபுரியும், ராஜாம்பாளும் திருமணம் செய்து கொண்டனர். புதுமணத் தம்பதி இருவரும் ஊர் திரும்பியதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேற்று சாதியைச் சேர்ந்த பெண்ணை ஏற்பதில் வையாபுரியின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இருந்தபோதிலும் இருவரும் தனியாக ஒரு வீட்டில் குடியேறினர். இந்த திருமணத்துக்கு அப்போதைய காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி, சத்யமூர்த்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் அரசு வேலைக்கு சேர்ந்த ராஜாம்பாள், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி ஒன்றியங்களில் பணியாற்றி வந்தார்.