/

கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 2

முதல் பழைய கற்காலத்துக்கு உரிய கற்கருவிகளாக எல்லா இடங்களிலும் பொதுவாக கைக் கோடாரிகளும், வெட்டுக் கத்திகளும் மட்டுமே காணப்படுகின்றன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் கைக்கோடாரிகளும் வெட்டுக் கத்திகள் மட்டுமே காணமுடிகிறது.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:15 am

ச. செல்வராஜ்

பழைய கற்கால மக்கள், தங்களைச் சுற்றி எளிதில் கிடைக்கக்கூடிய கற்களைக் கொண்டுதான் முதலில் இக் கற்கருவிகளைத் தயாரித்துள்ளனர். சிக்கிமுக்கிக் கல், மிகவும் எளிதில் சில்லுகளைப் பெயர்த்து எடுக்கக்கூடிய நிலையில் இருக்கும். எனவேதான், இடைக் கற்காலத்தில், பழைய கற்கால மக்கள் தங்களது கைக் கோடாரிகள் செய்வதில் முழுமையான வளர்ச்சியாக, கருக்கற்கள் (core-stones) வெளிப்படாத வகையில் 180 டிகிரி அளவில் அதிலிருந்து சில்லுகளைப் பெயர்த்து எடுத்து பயன்படுத்தியுள்ளனர். கருக்கற்களில் இருந்து முழுமையாக சில்லுகளைப் பெயர்த்தெடுக்கும் தொழில்நுட்பத்தையே இது குறிக்கும்*32.

இயற்கையாகக் கிடைக்கும் கல்லில் இருந்து பெரிய பெரிய சில்லுகளை உடைத்து எடுத்தும் (Flakes), அக்கற்கருவியின் முனைப்பகுதி கூர்மையானதாக வடிவமைக்க, முனைகளில் மேலும் சில சில்லுகளைத் தட்டி எடுத்து கற்கருவிகளை செய்துள்ளனர். அவ்வாறு ஆழமான சில்லுகளைப் பெயர்த்து எடுத்தமையும், அவ்வாறு பெயர்த்து எடுக்கும்போது ஏற்பட்ட அதிர்வுகளால் உருவாகும் பிசுருகளையும் அகழாய்வில் கிடைத்த கைக் கோடாரிகளை நுணுக்கமாகக் காணும்பொழுது அறிய முடிகிறது. மேலும், சில்லுகளை ஒரே அளவில் உடைத்து எடுத்து, முக்கோண வடிவில் அமைத்து, அதன் மேல்பகுதியைக் கூர்மையானதாகவும் அமைத்துள்ளனர். இதை, நன்கு வளர்ச்சி அடைந்த நிலையாகக் கருதலாம்.

Story image

ஆரம்பக் காலகட்டங்களில், அடிப்பகுதியை (Butt) விடுத்து, உடல் பகுதியில் முதுகுப் பக்கம் (Dorsal) சில்லுகளைத் தட்டி எடுப்பர். இவை கரடுமுரடானதாக இருக்கும். இவற்றில், இரண்டாவது முறையாகச் சில்லுகளை உடைத்து எடுப்பதில்லை. எனவே பின்னர், இடைக் கற்காலத்தில்தான் இரண்டாவது முறையாகச் சில்லுகளைப் பெயர்த்து, முக்கோண வடிவமைத்து பயன்பாட்டு வடிவில் மாற்றியுள்ளனர்.

இதனைத் தயாரிப்பதும் ஓர் அழகிய கலைப்பாணி. இத்தொழில்நுட்பம், பழைய கற்கால மக்களில் சிலருக்கே அமைந்ததால், அவர்கள் ஆற்றங்கரைப் பகுதியில் இருந்து கற்கருவிகள் செய்து குவித்தனர். இதனையே, பழைய கற்காலத் தொழிற்கூடம் (Tool Industry) என அழைத்தனர். சென்னையில் இப்பகுதி காணப்படுவதால், இதனை சென்னை தொழிற்கூடம் (Madras Industry-Factory site) எனக் குறித்தனர்.

முதல் பழைய கற்காலக் கற்கருவிகளின் குணங்களான, இரண்டு அல்லது மூன்று சில்லுகள் மட்டுமே எடுக்கப்பட்டவை, கரடுமுரடானவை, ஒழுங்கற்ற நிலையில் உள்ளவை, வேலைப்பாடு இல்லாதவை என்பதை இங்கு கண்டறிந்த கற்கருவிகளைக் கொண்டும் தெளிவாக உணரமுடிகிறது. பரிக்குளம் அகழாய்வில், பழைய கற்காலப் பண்பாட்டின் மூன்று காலகட்டங்களைச் சார்ந்த கற்கருவிகளும், அதாவது முதல் பழைய கற்காலம், இடை பழைய கற்காலம் மற்றும் கடை பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது*33.

முதல் பழைய கற்காலக் கருவிகளின் குணங்கள்

கருக்கற்களில் இருந்து இரண்டாகப் பிளந்து பயன்படுத்தப்பட்ட கற்கருவி, ஆரம்ப காலகட்டத்தைச் சார்ந்த கற்கருவியாகும். முதன்முதலில் பயன்படுத்தத் துவங்கியபோது, கருக்கற்களை இரண்டாகவும், ஒழுங்கற்ற நிலையிலும் உடைத்துப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்க்கப்படவில்லை. பெயர்த்த சில்லுகளும் ஆழமாகப் பெயர்த்தெடுக்கப்பட்டவையாக உள்ளன. இதற்கென ஓர் ஒழுங்கான வடிவமும் காணமுடியவில்லை என்பதை, கற்கருவிகளைக் காணும்பொழுதே அறியமுடிகிறது. இந்த வகையில் பெரும்பாலும், முதல் பழைய கற்காலக் கைக் கோடாரிகளில் ஒன்றிரண்டு சில்லுகளைத் பெயர்தெடுக்கும் குணம் தவிர பிற குணங்களைக் காண இயலவில்லை.

மேலும், இவ்வகைக் கற்கல், இயற்கை மண்ணுக்கு மேல்தட்டில்  மிகவும் ஆழத்தில் காணப்படுவதாலும், அதன் மீது படிந்த மென்பாசிப் படலத்தையும் கருத்தில் கொண்டு, இம்மண்ணடுக்கில் முதன்முதலாகக் காணப்பட்ட கற்கருவிகளின் அமைப்பை ஒட்டியும், இதனை முதல் பழைய கற்காலக் கருவிகள் என ஆய்வாளர்கள்  குறித்தனர்*34.

முதல் பழைய கற்காலத்துக்கு உரிய கற்கருவிகளாக எல்லா இடங்களிலும் பொதுவாக கைக் கோடாரிகளும், வெட்டுக் கத்திகளும் மட்டுமே காணப்படுகின்றன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் கைக்கோடாரிகளும் வெட்டுக் கத்திகள் மட்டுமே காணமுடிகிறது. பரிக்குளம், அத்திரம்பாக்கம் போன்ற அகழாய்வுகளில் மட்டுமின்றி, தென்னிந்தியாவில் பிற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் இதுபோன்ற கற்கருவிகளே கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பரிக்குளம் அகழாய்வில், அகழ்வுக் குழி 1-ல், 2.70 மீட்டர் ஆழத்தில் உள்ள மண்ணடுக்கின் மேல்பகுதியில் இவை சேகரிக்கப்பட்டன*35.

கற்கருவிகளின் வகைகள்

கைக் கோடாரி (Hand Axe)

முதல் பழைய கற்காலப் பண்பாட்டு நிலைக்குரிய கைக் கோடாரிகள், முன்னர் விளக்கப்பட்டதுபோல் இக்காலத்துக்குரிய கைக்கோடாரிகள் கருக்கற்களில் இருந்து பெயர்த்த எடுத்து, ஒழுங்கற்ற வடிவமும், கைப்பிடியின் புறப்பகுதியில் (Butt) சில்லுகள் பெயர்க்கப்படாமல், அதன் மேல்பகுதியில் மட்டுமே இரண்டு அல்லது மூன்று சில்லுகள் ஆழமாகப் பெயர்த்த நிலையிலும், அளவில் மிகப்பெரியதாகவும் காணப்படுகின்றன*36.

Story image

வெட்டுக் கத்தி (Cleavers)

கைக் கோடாரிகளில் இருந்து சில்லுகள் வெட்டி எடுக்கும்பொழுது வெளிப்படும் கோண வடிவச் சில்லுகளை வெட்டுக் கத்திகளாகப் பயன்படுத்தியுள்ளனர். இவற்றில், ஒரு பக்கம் கூர்மையான அமைப்பையும், மறுபக்கம் தட்டையான தடித்த அமைப்பையும் காணலாம். இவற்றில், இரண்டாவது முறை சில்லுகளை வெட்டி எடுக்கும் வேலைப்பாடு இல்லை. இதுபோன்ற வெட்டுக் கத்திகளே, முதல் பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெட்டுக் கத்திகள் ஆகும்*37.

கல் சுத்தி (Stone Hammer)

கற்கருவிகள் தயாரிக்க, நீள் உருண்டையான கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவையே பின்னர், கல் சுத்தி என அழைக்கப்பட்டன. இவை, இயற்கையாக அமைந்ததாகவும், ஒருசிலவற்றில் மேல்பகுதி மட்டும் தட்டி எடுத்த நிலையிலும் காணமுடிகிறது. பரிக்குளம் அகழாய்வில், முதல் பழைய கற்காலத்தைச் சார்ந்த மூன்று கல் சுத்திகள், மண்ணடுக்கிலேயே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது*38. இவை, நீண்ட கைப்பிடி போன்ற அமைப்பும், தலைப்பகுதி உருண்டு திரண்ட அமைப்பும் கொண்டு காணப்படுகின்றன.

Story image

இடைப் பழைய கற்காலம் (Middle Palaeolithic)

அதிக அளவில் கற்கருவிகள் காணப்பட்ட காலம் இடைப் பழைய கற்காலம்தான். இடைப் பழைய கற்காலத்தில் காணப்படும் கைக் கோடாரிகள், அளவில் சிறியனவாகவும் முழுமை பெற்ற நிலையிலும் இருப்பதைக் காணலாம். இக் கற்கருவிகளில், வேலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. சுற்றிலும் சிறிய ஆழமற்ற சில்லுகளைப் பெயர்த்து, அதனை ஒழுங்கான வடிவில் தயார் செய்த பாங்கும், இக்காலகட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாகக் கருதலாம். இரு பக்க கூர்முனை அமைப்பையும், இக் கற்கருவிகளைத் தயாரிக்க மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட முயற்சியையும் இவற்றில் தெளிவாகக் காணலாம். மேலும், கற்கருவிகளை ஒரு சிறந்த கலைப் படைப்பு போன்று உள்ளன. அதனால் குறிப்பிட்ட ஒரு சிலரே இக்காலகட்டத்தில் கற்கருவிகளைச் செய்திருத்தல் வேண்டும் என்பதையும் இவை தெளிவுபடுத்துகின்றன. இவை அனைத்தும், பரிக்குளம் அகழாய்வில் சேகரித்த கற்கருவிகளை ஒப்பிடுகையில் தெளிவாகிறது*39.

இக் கால கட்டத்தில், கைக் கோடாரிகளுடன் வட்டுகள், வெட்டுக் கத்திகள், கிளிப்பான்கள், சுரண்டிகள், துளையிடு கருவிகள், அறுப்பான் என பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்த கற்கருவிகளைக் கொண்டு தெரிந்துகொள்ள முடிகிறது.

இடை கற்காலக் கைக் கோடாரிகளின் குணங்கள்

இக்காலத்துக்குரிய கைக்கோடாரிகள் சிறிய சிறிய சில்லுகளைத் தேவையான அளவில் உடைத்து எடுத்து முக்கோண வடிவில் அமைக்கப்பட்டவை. இவற்றின் முனைகள் கூர்மையாகவும், சில்லுகள் பெயர்த்ததால் காணப்படும் பகுதிகள் ஆழமின்றியும், அழகிய வடிவில் சிறிய அளவு உருவம் கொண்டதாகவுகம் கைக் கோடாரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முக்கோண வடிவம், ஈட்டி போன்ற அமைப்பிலும், இலை போன்ற வடிவிலும் பல்வேறுவிதமாகக் கிடைத்துள்ளன. இவையே, இடைப் பழைய கற்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியாகும்.

Story image

இடை கற்காலக் கருவிகளின் வகைகள்

வட்டுகள் (Ovates)

பரிக்குளம் அகழாய்வில், அதிக அளவில் கல்வட்டு என்ற முட்டை வடிவ ஆயுதக் கருவிகள் கிடைத்துள்ளன. இக்கருவியில், பலமுறை சில்லுகள் பெயர்த்ததற்கான தடயங்களைக் (Bulp - அதிர்வலைகள்) காண முடிகிறது*40. இதுவே, முதல் பழைய கற்கால கற்கருவிக்கும், இடைப் பழைய கற்காலக் கருவிக்கும் காணப்படும் வளர்ச்சியின் வேறுபாடாகும் என்பது முன்னரும் விளக்கப்பட்டுள்ளது.

Story image

வெட்டுக் கத்திகள் (Cleavers)

கருக்கற்களில் கைக் கோடாரிகள் செய்ய முற்படும்பொழுது பெயர்த்து எடுக்கப்படும் சில்லுகளைப் பயன்படுத்தி செய்யப்பட்டவை இவை. அரை வட்ட வடிவம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களில் பரிக்குளம் அகழாய்வில் இவ்வகைக் கற்கருவிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றுள் ஒரு முனை கூர்மையாகவும் மறுமுனை தட்டையாகவும், சிலவற்றில் இரு முனைகளும் கூர்மையாக செய்யப்பட்ட கற்கருவிகளும் காணப்படுகின்றன*41.

Story image

சுரண்டிகள் (Scrapers)

இவ்வகைக் கருவிகள் அரை வட்ட வடிவிலும், மேல்பகுதி தடித்தும், கைப்பிடி போன்ற அமைப்பு கொண்டும், கீழ்பகுதி மெலிந்தும் கூர்மையாகவும் காணப்படும். வட்ட வடிவிலும், அரை வட்ட வடிவிலும், அதன் கூர்மையான பகுதிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி, மரப்பட்டைகளை உரிக்கவும், விலங்குகளின் தோலை உரிக்கவும், மரக்கம்புகளைச் சீவி கூர்மைப்படுத்தவும் பயன்படுத்தியுள்ளனார் என ஊகிக்கலாம்*42.

துளையிடும் கருவி (Borer)

இவ்வகைக் கருவிகளைப் பெரும்பாலும் கருக்கற்களில் இருந்து சிறிய வடிவிலான கற்கருவிகளைப் பெயர்த்து எடுக்கும்போது கிடைக்கும் சில்லுகளைக்கொண்டே செய்துள்ளனர். இக்கருவிகள் அளவில் சற்று சிறியவை. சிறிய அல்லது பெரிய அளவிளான சில்லுகளைப் பயன்படுத்தி, சில தேவையற்ற பகுதிகளைப் பெயர்த்து எடுத்து கூர்மைப்படுத்தி, இதுபோன்ற துளையிடும் கருவியை உருவாக்கியுள்ளனர். பிடித்துக்கொள்வதற்கு ஏற்ப மேல்பகுதி அமைக்கப்பட்டிருக்கும். வடிவத்தில் இவை இலை வடிவ அமைப்பில் கூர்மையான அடிப்பகுதியும், தட்டையான அகன்ற மேல்பகுதியும் கொண்டவை.

Story image
Story image

பிறை வடிவ கற்கருவி (Lunate)

இவ்வகைக் கருவிகள் பிறைச் சந்திரன் வடிவில் அமைந்தவை. இக் கற்கருவிகள் அறுவாள் அமைப்பிலும் இருக்கும். கீழ்புறம் அரை வட்ட வடிவிலான கூர்மையான பகுதியும், மேல்பகுதி தடித்தும் தட்டையாகவும் காணப்படும் இவை, பிடித்துக்கொண்டு அறுப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை, இடைப் பழைய கற்காலத்தைச் சார்ந்தவை ஆகும்.

கல் சுத்திகள் (Stone Hammer)

இடைப் பழைய கற்காலத்துக்கு உரியதாகவும் பல கல் சுத்திகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப கல் சுத்திகளின் அளவுகள் வேறுபடுகின்றனவே தவிர, அவற்றின் குணங்களில் வேறு சிறப்பான மாற்றங்களைக் காணமுடியவில்லை.

முதல் மற்றும் இடைப் பழைய கற்காலக் கருவிகள், தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவில் பல இடங்களில் கிடைத்துள்ளன. அவற்றில், நாகார்ஜுனகொண்டா, சுபானமுகிபடுகை (ஆந்திரா), கிருஷ்ணா படுகைகள், மலப்பரபா படுகை (கர்நாடகம்), மேல் கிருஷ்ணா படுகை, பீமா படுகை, கோதாவரி படுகை (ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா) ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்கவை*43.

கடைப் பழைய கற்காலம்

பழைய கற்காலத்தின் இறுதியான நன்கு வளர்ச்சி அடைந்த கற்கருவிகள் காணப்படும் நிலையையே கடைப் பழைய கற்காலம் என குறிப்படுகிறது. இந்தக் காலகட்டங்களில் காணப்படும் கற்கருவிகள், அளவில் மிகவும் சிறியவை. அதுமட்டுமின்றி, இவை கருக்கற்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட சில்லுகளே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story image

அத்திரம்பாக்கம் அகழாய்வுகளிலும், பரிக்குளம் அகழாய்விலும் முதல் மண்ணடுக்குகளில் காணப்பட்ட சிறிய அளவிலான கற்கருவிகள், கடைப் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவை என்பதை அவை காணப்படும் மண்ணடுக்குகளே தெரிவிக்கின்றன. இதேபோல், ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நூல் மாவட்டங்களில் பல இடங்களில் நன்கு வரையறுக்கப்பட்ட வளர்ச்சி அடைந்த நிலையிலான கற்கருவிகள் கிடைத்துள்ளன. இந்த நுண் கற்கருவிகள் கடைப் பழயை கற்காலத்தைச் சார்ந்தவை என்பதே சரியானதாகும்.

கூர்முனை, கிழிப்பான், சுரண்டிகள் என பலவிதமான அறுப்பான்களும் கிடைத்துள்ளன. இவை அளவில் மிகச் சிறியவை; மெல்லிய வடிவினைப் பெற்றவை. இவை, மரப்பட்டைகளை உரிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதுவே, பழைய கற்கால மக்களில் இருந்து நன்கு வளர்ச்சி அடைந்த பருவமாகக் காணப்பட்டதால்தான், இதனை கடைப் பழைய கற்காலம் எனப் பகுத்தனர். இதன் காலத்தை வரையறுக்கும்பொழுது பொ.ஆ.மு. 20000 - 10000 எனக் குறிக்கின்றனர்*44.

அகழாய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்படும் செய்திகள்

தமிழகத்தில் பழைய கற்காலம் தொடர்பான அகழாய்வுகள், பல அரிய செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. அவற்றை அகழாய்வு செய்த இடங்களுடன் இனி காண்போம்.

அத்திரம்பாக்கம்

அத்திரம்பாக்கம் அகழாய்வில், மேலிருந்து கீழ் வரை உள்ள மண்ணடுக்குகளில் காணப்படுபவை, முதலில் நுண் கற்கருவிகள். அதனை அடுத்து, சரளைக் கற்கள் மற்றும் துளைப்பான்கள், கிளிப்பான்கள், அறுப்பான்கள் போன்ற சில்லுக் கருவிகள். இதனை அடுத்து, மஞ்சள் நிற களிமண் கலந்த நிலை. இவற்றில், கைக் கோடாரிகள் மற்றும் கிளிப்பான்கள் கலந்து காணப்பட்டன. அடுத்து, இயற்கை மண் படிமம். இங்கு காணப்பட்ட முதல் இரண்டு மண்ணடுக்குகளில் கைக் கோடாரிகளும், பழைய கற்கருவிகள் மற்றும் சில்லுக் கருவிகளும் கலந்தே காணப்பட்டன. கீழே செல்லச் செல்ல, கைக் கோடாரிகள் குறைந்தும் அளவில் சிறியதாகவும் காணப்பட்டன*45.

குடியம்

குடியம் அகழாய்வில், வண்டல் மண் படிவினை அடுத்து, கூழாங் கற்கள் மற்றும் சரளைக் கற்கள் களிமண் கலந்து காணப்பட்டன. சில குழிகளில், அடிப்பகுதி முழுவதும் சில்லுகள் பெயர்த்த நிலையில், வேலைப்பாடுகள் செய்த கருவிகள் கிடைத்துள்ளன. சில, நிறைவுபெறாத கற்கருவிகளும், சில்லுகளும் மற்றும் கருக்கற்களும் இங்கு கிடைத்துள்ளன.

இது, தொழிற்கூடம் அமைந்த பகுதிதான் என்பதற்குச் சான்றாக, சரியாகச் சில்லுகள் பெயர்க்காத, முழுமை அடையாத கற்கருவிகளும் இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று, வடமதுரை அகழாய்விலும் காணப்படுகின்றன*46.

பரிக்குளம்

பரிக்குளம் அகழாய்வில், மேல் பகுதியில் சில்லுகளும் கற்கருவிகளும், சிறிய அளவிலானவை கிடைத்துள்ளன. பின்னர் சரளைக் கற்களும், கற்கருவிகளும், நன்கு சில்லுகள் பெயர்த்த இடைப் பழங் கற்காலக் கைக் கோடாரிகள், நன்கு சில்லுகள் பெயர்த்த நிலையில் கிழிப்பான்கள், துளைப்பான்கள் காணப்படுகின்றன. அடுத்து, முதல் பழைய கற்காலத்தைச் சார்ந்த அதிகச் சில்லுகள் உடைத்து எடுக்காத நிலையில் கைக் கோடாரிகள் மற்றும் கல் சுத்திகள் போன்றவை கிடைத்துள்ளன. இறுதியாக, களிமண் மற்றும் சரளைக் கற்களும் கூழாங்கற்களும் கலந்த கன்னி மண் பகுதி ஆகும்*47.

Story image

பிள்ளையார்பட்டி

தஞ்சை மாவட்டம், தஞ்சை வட்டம், திருக்கானூர் பகுதியில், 2007-ல் கள ஆய்வு மூலம் கற்காலக் கருவிகளைப் பேராசிரியர் வீ. செல்வகுமார் கண்டறிந்து பட்டியல் ஒன்றை, ஆவணம் இதழ் 2008-ல் வெளியிட்டுள்ளார்*48. 2009-ல், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் இராம்ஜி, இராஜன் ஆகியோர், அரியலூர் பகுதியில் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர்*49.

இவற்றைத் தொடர்ந்து, இப் பகுதியில் வீ. செல்வகுமார் தலைமையில் 2010-11-ல் ஓர் அகழாய்வு நடத்தப்பட்டது*50. இங்கு, பழைய கற்காலக் கற்கருவிகளான கூர்முனைகள், துளையிடும் கருவிகள் காணப்பட்டன. இங்கு காணப்படும் மண்ணடுக்கில், இரும்புச் செறிவுள்ள சரளைக் கற்களும் (Ferricrete), நுண் கற் செதில்களும் நிறைந்து காணப்பட்டன. இப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம், இடைப்பழைய கற்காலம், நுண் கற்காலம், இரும்புக் காலம் என தொடர்ச்சியாக மண்ணடுக்குகள் காணப்படுவதாகக் குறித்துள்ளனர்.

பழைய கற்கால மக்கள், முதன்முதலில் கருக்கற்களில் இருந்து பெரிய பெரிய சில்லுகளைப் பெயர்த்து எடுத்து கற்கருவிகளைச் செய்தனர். பின்னர், வேலைப்பாடு மேற்கொண்ட கற்கருவிகளில் மேலும் சில பகுதிகளைத் தட்டி எடுத்து, இரண்டாவது முறை வேலை செய்து, அக்கற்கருவிகளை மேலும் பொலிவூட்ட முயற்சி செய்து வெற்றிபெற்றுள்ளனர். கருக்கல்லில் இருந்து வெளியே பெயர்ந்த கற்சில்லுகளையும் மீண்டும் வேலை செய்து, அதனையும் கற்கருவிகளாக மாற்றிப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு, காலப்போக்கில் கற்கருவிகளை அழகுற வடிவமைக்க முயன்று, சிறிய சிறிய சில்லுகளைப் பெயர்த்து எடுத்து, தன் கைக்கு அடக்கமான ஒன்றாக மாற்றி, வடிவில் சிறியதாக்கி, தனது தொழில்நுட்பத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

கற்கருவிகளைக் கூர்மையாக்கவும், சில்லுகளைப் பெயர்க்கவும், இரண்டுவிதமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அவை, நீள் உருண்டை வடிவ கல் சுத்தியைப் பயன்படுத்தி (Cylinder Hammer Technique) கடினமான சில்லுகளைப் பெயர்த்து எடுத்துச் செய்தல்; நீள்உருண்டையாக (Bone or Wooden Hammer Technique) மரசுத்தியைப் பயன்படுத்தி அல்லது எலும்புகளைப் பயன்படுத்திச் செய்தல். அடுத்து, அழுத்தம் கொடுத்துச் செய்தல் முறை (Pressure Technique). இவ்வாறு, கற்கருவிகளுக்கு ஏற்ப தன் தொழில்நுட்பத் திறமையை வெளிப்படுத்தியவர்கள், பழைய கற்கால மக்களே*51.

கற்களைக் கொண்டு கற்கருவிகளை செய்யும் திறன் படைத்த இவர்கள், அறிவு நுணுக்கமும் கொண்டவர்களாக இருந்துள்ளனர். கைக் கோடாரிப் பண்பாடும், சில்லுக் கருவிகள் பண்பாடும், தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து, அதுவே நுண் கற்கருவிகள் காலம் என்றும் கடைப் பழைய கற்காலமாகவும் வளர்ந்தது. எனவே, கடைப் பழைய கற்காலத்தையே நாம் நுண் கற்கருவிக் காலம் எனக் கொள்ளலாம். ஏனெனில், முதல், இடை பழைய கற்காலத்தில் காணப்பட்ட பரிணாம வளர்ச்சியே, நுண் கற்காலக் கருவிகள் காலத்துக்கு அடிகோலியது.

ஆரம்பக் காலகட்டங்களில், பெரிய பெரிய கைக் கோடாரியைப் பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடிய பழைய கற்கால மக்கள், நாளடைவில் விலங்குகளுடன் போராடுதல், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அவர்களைச் சிந்திக்கத் தூண்டியது. அதன்விளைவே, விலங்குகளை வேட்டையாடுவதைத் தவிர்த்தான். பின்னர், தீங்கு விளைவிக்காத, வீட்டு விலங்குகளை மட்டுமே வேட்டையாட எத்தனித்தான். வீட்டு விலங்குகளை வேட்டையாட பெரிய கற்கருவிகள் தேவைப்படவில்லை. தேவைக்கேற்ப, கற்கருவிகளின் அளவைக் குறைத்து, சிறிய நுண் கற்கருவிகளைத் தயாரித்து வேட்டைக்கும், தன் தேவைக்கும், பயன்படுத்த ஆரம்பித்தான். இதுதான், நுண் கற்காலம். ஏனெனில், கற்கால வரலாற்றிலேயே சிறிய சிறிய சில்லுகளைக் கொண்டு மிகவும் நுண்ணிய கற்கருவிகளை மட்டுமே தயாரித்து, தங்களது வாழ்க்கைக்குப் பயன்படுத்தி சில காலம் வாழ்ந்துள்ளனர். அத்தகைய காலகட்டம், வரலாற்றில் ஒரு தனியிடத்தைப் பெறுவதில் தவறில்லை.

நுண் கற்காலம், இந்தியா முழுவதும் பரந்து காணக் கிடைக்கிறது. தமிழகத்தில், பல இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை, தேரிருவேலி*52, மாங்குடி*53, மாங்குளம்*54, பூதலூர், பிள்ளையார்பட்டி*55 போன்ற இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பல நுண் கற்கருவிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை மட்டுமின்றி, பல இடங்களிலில் மேற்பரப்பு ஆய்வில், நுண் கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் காணும்பொழுது, நுண் கற்காலப் பண்பாடு தமிழகம் முழுவதும் காணப்படுவதும், குறிப்பாக தென் தமிழகத்தில் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவதும் ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது*56.

இங்கு பெரும்பாலும், அறுப்பான் (Blade), துளையிடும் கருவி (Borer) போன்றவையே அதிக அளவில் கிடைத்துள்ளன. மேலும், இப்பண்பாட்டைப் பற்றி குறிப்பிடும்பொழுது, கடைப் பழைய கற்காலம் (Upper Paleolithic/Mesolithic Culture) என்பர். இதுவே, நுண் கற்காலப் பண்பாடு என்பதும் தெளிவே. இக்காலகட்டத்தில், பெருமளவில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமானது, அறுப்பான் மற்றும் துளைப்பான் செய்யும் தொழில்நுட்பமே (Blade and Borer Technique) எனலாம்.

மாங்குடி அகழாய்வில், பெருங் கற்காலப் பண்பாட்டின் மண்ணடுக்குகளுக்கு அடுத்தநிலையில், மஞ்சள் நிறக் களிமண் சாயலில், நுண் கற்கருவிகள் கிடைத்தன. இவற்றுடன் கருக்கற்களும், செதுக்கப்பட்ட கற்களும் இம்மண்ணடுக்கில் சேகரிக்கப்பட்டன*57. தேரிருவேலியிலும் இதேபோன்ற மண்ணடுக்கில்தான் நுண் கற்கருவிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன*58.

சான்றெண் விளக்கம்

32. M.C. Burkitt - The Old Stone Age, a Study of Paleolithic Times Rupa & co, Bowes & Bowes, 1977.

33. Sitaram Gurumurthy - opp. Cit. pp. 17-24.

34. Sitaram Gurumurthy - Excavation of Archaeological Sites in Tamil Nadu, Parikulam. Department of Archaeology, Chennai, 2006.

35. H.D. Sankalia - The pre history and proto history of India and Pakistan, Deccon College of Post Graduate and Research Institute.

36. H.D. Sankalia - Stone Age Tools, Their technique, Name and probable Functions, Deccon College, Poona 1964, p. 48.

37. Sitaram Gurumurthy - opp. cit. p. 21.

38. V.D. Krishnaswamy - Ancient India, Vol.3, p. 34.

39. Sitaram Gurumurthy - Excavation of Archaeological sites in Tamil Nadu, Parikulam. Department of Archaeology, Chennai, 2006.

40. Ibid – p. 18-22.

41. V.D. Krishnaswamy - Ancient India, Vol.3, p. 34.

42. H.D. Sankalia - Stone Age Tools, Their technique, Name and probable Functions, Deccon College, Poona, 1964, pp. 62-63.

43. H.D. Sankalia - The Beginning of Civilization in South India, Science Today, April, 1968, pp. 28-30.

44. Ibid - pp. 20-30. 

45. A. Gosh - opp. cit. p. 26.

46. Ibid - p. 25-26.

47. H.D. Sankalia - Stone Age Tools, Their Technique, Name and probable Functions, Deccon College, Poona, 1964, p. 18-30.

48. வீ. செல்வகுமார் – திருக்கானூர் ஆவணம்

49. ராம்ஜி - பெரம்பலூர்

50. வீ. செல்வகுமார் - தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் அகழாய்வு ஆவணம் இதழ் 21, 2010, பக். 158-160.

51. T.S. Sridhar - Archaeological Excavations of Tamil Nadu, Vol – I, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai, 2011, pp. 99-144.

52. Ashok Vardan Shetty - Excavations at Mangdi, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai, 2003.

53. Sitaram Gurumurthy - Mangulam Excavation, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai, 2008.

54. வீ. செல்வகுமார் – தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் அகழாய்வு - பிள்ளையார்பட்டி, ஆவணம் இதழ்

55. H.D. Sankalia - Beginning of Civilization in South India, Science Today, April, 1968, pp. 28-30.

56. Ashok Vardan Shetty - opp. cit.

57. T.S. Sridhar - opp.cit. p. 99-144.

58. Ibid.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.