/

கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 3

உலகின் வேறு எப்பகுதியில் கிடைக்கும் கைக்கோடாரிகளைவிட, இந்தியாவில் கிடைக்கும் கைக்கோடாரிகள் நேர்த்தியாகவும், வலிமையாகவும் உள்ளன

News image
Updated On :28 ஜூலை 2025, 4:15 am

ச. செல்வராஜ்

பழய கற்கால மனிதனும் கற்கருவி தொழில்நுட்ப வளர்ச்சியும்

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், கற்களை மட்டும் தங்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் பயன்படுத்திய பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பழைய கற்கால மக்களின் வாழ்விடங்களான பூண்டி, குடியம், அத்திரம்பாக்கம், பரிக்குளம் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுச் சான்றுகள், பழைய கற்கால மனிதன், தன் வாழ்வியல் சூழலுடன், தன் தேவைக்குப் பயன்படுத்திய கற்கருவிகளின் உற்பத்திக்கு வளர்த்தெடுத்த தொழில்நுட்பங்களின் வழி அவனது அறிவு வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, அண்மையில் அத்திரம்பாக்கம் மற்றும் பரிக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளும், மண்ணடுக்கு வாரியாகக் கண்டறியப்பட்ட கற்கருவிகளின் குணங்களும், நமக்கு எவ்வித குழப்பமுமின்றி பழைய கற்கால மனிதன் வளர்த்துக்கொண்ட தொழில்நுட்பத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. அவ்வளர்ச்சியைப் பெற அவன் எடுத்துக்கொண்ட வெகு நீண்ட காலத்தையும் நன்கு வெளிப்படுத்துகின்றன.

மூலக் கருவிப் பயன்பாடு (அல்லது) கூழாங்கற்கருவிப் பண்பாடு

பழைய கற்கால மக்கள் எடுத்தவுடனே கற்கருவிகளைச் செய்து பயன்படுத்தும் அறிவைப் பெற்றிருக்கவில்லை. துவக்கத்தில் நாடோடிகளாகக் காடு மேடுகளில், கொடிய விலங்குகளுடன் ஒன்றாகத் திரிந்து வாழ்ந்தான். முதலில் பழங்களையும், காய்கனி, கிழங்குகளையும் மட்டும் உணவாகக்கொண்டிருந்த அவன், அவை கிடைப்பது அரிதான காலத்தில் மாமிசப்பட்சியாக மாறினான். அந்நிலையிலான உணவுத்தேடுலின்போது, விலங்குகளுடன் போட்டிப்போட்டு தனக்கு வேண்டிய உணவைப் பெறுவதற்காக அவற்றுடன் கடுமையாகப் போராடியுள்ளான்.

அந்நிலையில் எளிதாகக் கிடைத்த வழவழப்பான கூழாங்கற்களைக் (Pebbles) கொண்டு விலங்குகளைத் தாக்க முற்படுகிறான். இவ்வகையான இயற்கையான உருளைக்கற்களே மனிதன் பயன்படுத்திய கல் ஆயுதங்களாகும். பூண்டி, குடியம், அத்திரம்பாக்கம் ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுவது உருளைக்கற்களும், கூழாங்கற்களுமே (Cobble and Pebbles) ஆகும். இவ்வகையான உருண்டையான வழவழப்பான கற்களைப் பயன்படுத்திய இக்காற்காலப் பண்பாட்டை, கூழாங்கற்கருவிப் பண்பாடு (Pebble Tool Culture) என்று அழைப்பர். இவ்வகைக் கற்கருவிகள், மூலக்கற்கள் (Core) என்று குறிக்கப்பெறும்.

இவ்வகைக் கூழாங்கற்களையும் உருண்டையான கற்களையும் பயன்படுத்திய பழைய கற்கால மனிதன், இக்கற்களில் காணப்படும் வழவழப்பான, உருண்டையான அமைப்பு காரணமாக, விலங்குகள் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவாகவும், கொடிய விலங்குகளிடம் இவன் அகப்பட்டு உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகரித்தும் இருந்தது. எனவே, அவன் இக்கற்களின் பயன்பாடு அதாவது மூலக்கற்களின் பயன்பாடு மிகுந்த பயனுடையது அல்ல என்பதைக் கற்றுக்கொண்டான்.

முதல் வகை கற்கருவி உற்பத்தி

அவன் இவ்வகை கொடிய விலங்குகளைத் தாக்க எறிந்த உருண்டை வடிவ மூலக்கற்கள் பாறைகள் மீதும், தரையில் விழுந்தும் உடைந்தன. விலங்குகளுடனான போராட்டத்தில் விலங்குளைத் தாக்க இவ்வாறு உடைந்து விழுந்த கற்களை மீண்டும் எடுத்து வீசும்போது, கற்களின் உடைந்து கூர்மையான பகுதிகளால் தாக்கப்பட்டு விலங்குகள் மாய்வதைக் காண்கிறான். அப்பொழுதுதான் உருளை வடிவக் கற்கருவிகள் பயனற்றவை; அவற்றை உடைத்துப் பயன்படுத்தும்போது மிகுந்த பயனளிக்கிறது என்ற அறிவைப் பெறுகிறான். இவ்வறிவுடன், இவன் உடைத்துப் பயன்படுத்திய கற்கருவிகளே வெட்டுக் கருவிகளாகும் (Choppers Tool). இவ்வகைக் கற்கருவிகளே பழைய கற்கால மனிதன் தன் கைகளைக் கொண்டு தயாரித்த முதல் வகை மிகப்பழைமையான கற்கருவிகளாகும். இவ்வகைக் கற்கருவிகளே பொதுவில் கைக்கோடாரிகள் என்று அழைக்கப்பெறுகின்றன.

Story image

இவ்வகை முதல்வகை பழைய கற்காலக் கருவிகள் பெரும்பாலும், செம்மண் படிவப்பாறைகளால் (Laterite Rocks) செய்யப்பட்டு மலையடிவாரத்திலும், பள்ளத்தாக்குகளிலும் காணக்கிடைப்பதை உலகப் பொதுக் குணமாக அறியமுடிகிறது. குடியம், அத்திரம்பாக்கம் பகுதிகளும் செம்மண் படிவப்பாறைகளைக் கொண்டதே ஆகும். ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் இவ்வகைக் கைக்கோடாரிகளைவிட, இந்தியாவில் காணப்படும் கைக்கோடாரி கற்கருவிகள், நேர்த்தியாகவும் வலிமையாகவும் உள்ளதாக ஒப்பாய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வகை செம்மண் படிவப்பாறைகளில், பலவிதமான வண்ணங்களில் காணப்பட்ட உருளைக் கற்களைக் கொண்டு இவ்வகைக் கைக்கோடாரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அவை சாம்பல், பழுப்பு மற்றும் காவி வண்ண படிவப்பாறைகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளன.

கற்கருவி தொழிலில் நுட்ப வளர்ச்சி

பழைய கற்கால மனிதன், கற்கருவியாக உருளை வடிவ மூலக்கற்களைப் பயன்படுத்துவதை விடுத்து, அடுத்த நிலையில் கிடைக்கக்கூடிய உருளைக்கற்களைச் சேகரித்து, அதனை இரண்டாக உடைத்துப் பயன்படுத்தத் துவங்குகிறான். அவ்வாறு உடைத்த கற்கள் அளவில் பெரியதாக இருப்பதால், அக்கருவியை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதில் அவனது சிந்தனை ஈடுபட்டது. இதன் விளைவாக, மூலக்கற்களை ஒரு முகமாக உடைத்து (Unifacial) அதனை மேலும் கூர்மையாக்க, விளிம்புகளில் பக்கவாட்டில் தட்டி சில்லுகளைப் பெயர்த்தெடுத்துப் பயன்படுத்துகிறான். இதற்கு அடுத்த நிலையில், மூலக்கல்லின் இரண்டு பக்கமும் (Bifacial) தட்டி எடுத்து, முன்பு போலவே பக்கவாட்டில் சில்லுகளை இருபுறமும் வெட்டி எடுத்து, கைக்கோடரிக்கு ஒரு முழுமையான வடிவம் கிடைக்கச் செய்கிறான். இதுவே, கற்கருவிகள் செய்வதற்குப் பழைய கற்கால மனிதன் தன் அறிவு வளர்ச்சியோடு புகுத்திய தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டுகிறது. இதனை, கற்கருவிகளின் பரிணாம வளர்ச்சி எனவும் குறிப்பிடலாம்.

அடுத்த நிலையில், மேலும் தனது வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முற்படுகிறான். அதுவே அவன் வளர்த்தெடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறிப்பதாக உள்ளது. இந்நிலையில், உடைத்த கற்களில் இருந்து மேலும் பல சில்லுகளைப் பெயர்த்தெடுத்து செம்மைப்படுத்தி கருவிகளை உருவாக்குகிறான். இத்தகைய தொழில்நுட்பத்தை (Chopper-Chopping Tool) சில்லுகள் பெயர்த்தெடுக்கும் தொழில்நுட்பம் என குறிக்கப்பெறுகிறது.

இவ்வகையிலான கற்கருவிகளின் பரிணாம வளர்ச்சி நிலைகளை நாம் பரிக்குளம் அகழாய்வுகளில் கிடைத்த கற்கருவிகளின் வகை மாதிரிகளைக் கொண்டும், அவை கிடைக்கும் மண்ணடுக்கின் அமைப்பில் இருந்தும் அறியமுடிகிறது. அகழாய்வுகளில் மண்ணடுக்குகள்தாம் காலக்கணிப்பையும், அப்பகுதியில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றத்தையும் எடுத்துக்கூறும் காலக் கண்ணாடியாக விளங்குவது ஆகும். இந்த வகையில், பரிக்குளம் அகழாய்வு, மண்ணடுக்குகள் பழைய கற்கால மனிதனின் கற்கருவிகளைச் செய்யும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் துல்லியமாகக் காட்டுவதாக உள்ளது.

Story image
Story image

(பரிக்குளம் மண்ணடுக்கில் கல்லாயுதங்கள் காணப்படும் விதம்)

கற்கருவிகளைக் கூர்மை ஆக்கவும், சில்லுகளைப் பெயர்க்கவும் இரண்டுவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1. நீள் உருண்டை வடிவ கல்சுத்தியைப் பயன்படுத்தி (Cylinder Hammer Technique) கடினமான சில்லுகளைப் பெயர்த்து எடுத்தல், இதன் தொடர்ச்சியாக, நீள் உருண்டையாக மரசுத்தியை அல்லது எலும்புகளைப் பயன்படுத்தி (Bone or Wooden Hammer Technique) செய்தல். 2. அழுத்தம் கொடுத்து செய்தல் முறை. (Pressure Technique).

கற்கருவிகளை தயாரிக்கப் பயன்படுத்திய கருவிகள்

பழைய கற்கால மனிதன், இவ்வகைக் கைக்கோடாரிகளைத் தயாரிக்க சில கருவிகளின் துணையைக் கொண்டிருந்தான். முதல் நிலையில், மூலக்கற்கலான உருளைக்கற்களைப் பிளக்க, அவற்றைப் பாறைகளின் மீது மோதியிருக்கிறான். இருமூலக் கற்களை, ஒன்றுடன் ஒன்றை மோதியிருக்கிறான். அடுத்த நிலையில் எலும்புத்துண்டுகளையும், மரக்கழிகளையும் கொண்டு பிளந்திருக்கிறான். மோதிப் பிளப்பதைவிட இம்முறை கூடுதல் பயனையும், தேவையான வடிவத்தையும் வழங்கியது. சில்லுகளைப் பெயர்த்தெடுக்கும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் இதுவே வித்திட்டது. சில சுத்தியல் வகைக் கைக்கோடாரிகளைப் பார்க்கும்போது, சில்லுகளைப் பெயர்த்தெடுக்க உருவாக்கப்பட்டவைபோல் உள்ளன. இதுவும் அவனது அறிவு வளர்ச்சியைக் காட்டுவதாகும். எலும்புத்துண்டு, மரக்கழி போன்று இயற்கையாகக் கிடைக்கும் கருவிகளைவிட, சில்லுகளைப் பெயர்த்தெடுக்க, தனித்த சிறப்பான வடிவமைப்பில் வடிவமைத்துக்கொள்ளும் கருவிகள் தரும் பயன் மிகப்பலவாகும்.

Story image

பழைய கற்காலக் கருவிகளின் பயன்பாடுகள்

முந்தைய அத்தியாயங்களில் கொற்றலை ஆற்றுப் பகுதிகளில் மிகுதியாகக் கிடைக்கும் கற்கருவிகள் குறித்து அகழாய்விடங்கள் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. இவ்வகைக் கற்கருவிகளின் பயன்பாடு, அவனது அறிவு வளர்ச்சியும், வாழ்க்கை நிலை வளர்ச்சியும் தெரிந்துகொள்ள உதவுகின்றன.

கைக்கோடாரிக் கருவிகள், விலங்கு வேட்டையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பெற்றவை என்பதுடன், அவை வேறு உபயோகங்களுக்கும் பயன்பட்டன. இப்பயன்பாடு, அவனது வாழ்க்கை நிலையைக் காட்டுகின்றன. கூம்பிய முனை கொண்ட கற்கருவிகளைக் கொண்டு நிலத்தைத் தோண்டுவது எளிதாகும்; நிலத்துக்கு கீழ் இருக்கும் கிழங்குகளைத் தோண்டி எடுக்க இவை வழி அமைத்தன. இவையே மரத்தைக் குடையவும் உபயோகமாயின.

பக்கவாட்டு விளிம்புடைய கற்கருவிகள், மரத்தைச் சீவவும், தோலைச் சுரண்டவும் பயன்பட்டன. இதே கருவிகளை, மரப்பிடியின் நுனியில் பொருத்தி அல்லது காட்டுக்கொடிகள், நார்போல் கிழித்த தோலால் கட்டி வேல்போல் பயன்படுத்தலாம். கிழிப்பான் வகைக் கருவிகள் மரப்பிடியில் பொருத்தும்போது, தற்காலக் கோடாரிகள் போன்ற பயன்பாட்டையே வழங்குபவை. இவற்றைக் கொண்டு மரங்களை வெட்டலாம், விலங்குகளின் உடலிலிருந்து தோலைக் கிழித்து,  சதைகளை வெட்டி எடுக்க, மரத்தைச் சீவ என பலவகைப் பயனைப் பெறலாம். வட்டு வடிவங்கள் கொண்டவற்றைச் சுழற்றி எறியும்போது, அவை சிறந்த வேட்டைக் கருவிகளாகின்றன.  

முரட்டுத்தன்மையில் இருந்து மென்மைக்கு

காலத்துவக்கத்தில் கரடுமுரடான கைக்கோடாரிகளை உற்பத்தி செய்து பயன்படுத்தியவன், அடுத்த நிலையில் கற்கருவிகளுக்கு அழகிய வடிவத்தைக் கொடுக்க முற்படுகிறான். இச்செயல், அவனது அறிவு வளர்ச்சியைக் காட்டுவதுடன், அவன் முரட்டுத்தன்மையில் இருந்து மென்மைத்தன்மை அடைந்து வருகிறான் என்பதையும் புலப்படுத்துவதாக உள்ளது.

முதலில் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, கற்கருவிகளின் தேவையை உணர்ந்து, மனிதன் தனக்குத் தேவையென்றால், எத்தகைய கடினமானவற்றையும் எளிதில் கற்றுக்கொள்கிறான் என்பது இயற்கை நியதி. அவன் இதற்காகவும், பெற்ற அபரிமிதமான வளர்ச்சிக்கும் அவன் எடுத்துக்கொண்ட காலத்தின் அளவையும், இவ்வறிவு வளர்ச்சிக்காக இழந்த உயிர்களும் பலப்பல என எண்ணும்பொழுது, ஒவ்வொரு கைக்கோடாரி தயாரிப்பின் முன்னும், எவ்வளவு இடைவிடாத கடுமையான முயற்சியும், உழைப்பும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்று யோசிக்கும்போது பிரமிப்பாக உள்ளது.

இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, காலம் செல்லச் செல்ல கற்கருவிகளைத் தயாரிப்பதைக்கூட ஒரு கலைநுணுக்கத்துடன் தயாரிக்கவும், அதற்குத் தேவையான பொறுமையையும் கற்றிருக்கிறான் என்பதை அறியமுடிகிறது. இவன்வழி வந்தவர்களாகத்தான், பிற்காலத்தில் அரசுகளின் உருவாக்கத்தின்போது, கைதேர்ந்த ஸ்பதிகளை நாம் பெற்றோம் போலும் எனக் கருதத் தோன்றுகிறது.

பழைய கற்கால மக்கள் ஒரு கைக்கோடாரியை உருவாக்க எவ்வளவு காலத்தை எடுத்துக்கொண்டார்களோ? எவ்வாறாக இருப்பினும், பழைய கற்கால மக்களின் படிப்படியான வளர்ச்சி மிகவும் வியக்கத்தக்கதாகும். பெருமைப்படும்படியாகவும் இருப்பதாகும்.

பரிக்குளத்தின் முக்கியத்துவம்

பரிக்குளம், மற்றொரு வகையில் பழைய கற்காலப் பண்பாட்டில் முக்கியப் பங்கை வகிக்கிறது. உலகில் வெகு சில இடங்களிலேயே, பழைய கற்காலப் பண்பாட்டின் மூன்று நிலைகளும் அதாவது, 1. கீழ்நிலைப் பழைய கற்காலம், 2. இடைநிலைப் பழைய கற்காலம், 3. மேல்நிலைப் பழைய கற்காலம் என்ற மூன்று காலகட்ட நிலைகளும் வெளிப்படுத்தியுள்ளன. அதில் ஒன்றாகப் பரிக்குளம் உள்ளது.

இந்த வகையில், கொற்றலை ஆற்றுப்படுகை 5,00,000 (சாந்திபப்பு கணக்கீடு 15,00,000) ஆண்டுகள் முதல் பொ.ஆ.மு. 10,000 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக நிலவிய பழைய கற்காலப் பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பழைய கற்காலத்தின் முடிவில், பழைய கற்கால மனிதன் நுண்கற்காலப் பாண்பாட்டில் அடியெடுத்து வைக்கிறான். அதுகுறித்து பின்னர் பார்க்கலாம்.

Story image

(பரிக்குளம் அகழாய்வு மாதிரி திட்டம்)

உலகின் வேறு எப்பகுதியில் கிடைக்கும் கைக்கோடாரிகளைவிட, இந்தியாவில் கிடைக்கும் கைக்கோடாரிகள் நேர்த்தியாகவும், வலிமையாகவும் உள்ளன என்று ஆய்வாளர்கள் குறிப்பதற்கு, இவ்வாறு தொடர்ச்சியாகக் கற்கருவிகளை மேம்படுத்தி உற்பத்தி செய்தமையும், உலகின் பழமையான கடினப் பாறைகள் தென்னிந்தியாவில் உள்ளதுமே காரணம் எனலாம்.

(பார்க்க - இத்தொடரின் தமிழகத்தின் நிலவியல் அமைப்புகள் – 1 பதிவு)

பார்வை நூல்கள் -

1. Gosh.A. Encyclopaedia of Indian Archaeology, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd.

2. Allchin, B & R. 1968, Birth of Indian Civilization

3. Harmondsworth, Jayaswal.V, 1978, Palaeohistory of India, Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.