நீதியைத் தேடி: அழகூர். அருண். ஞானசேகரன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

1. நீதிதன்னை தேடித்தேடி மக்களலைவ தெல்லாம் நிறையவே உண்டுநம்மின் நாட்டினிலே எங்கும் ! பாதித்த மக்களவர் அலைவதையே தான்நாம் பார்த்திட்டக் காலம்போய் மாநிலங்கள் தமக்குள் மோதியின்று நீதிதேடும் நிலைமைதனைக் காணல் முன்னேற்றம் எனத்தகுமோ ? அவலமதே அன்றோ ? வேடிக்கைப் பார்ப்பதுவோ மத்திய அர சாங்கம், விரிசல்வரக் காணாதோ இந்தியநற் தேசம் ?2. நதிநீரும் விரைந்தோடும் கடல்தன்னைத் தேடி , நாடுகள் பலகடந்தும் போகும்பல நதிகள் ! குதித்தோடும் அதன்போகை தடுப்பதுவும் முறையோ, குற்றமென்றும் ஆகாதோ இயற்கைதனை மாற்றல் ? சதியதனை செயத்தகுமோ போக்குதனை மாற்ற , சாதனையென் றாகிடுமோ ? சகிக்கத்தான் தகுமோ ? விதிப்படியே அவைபாயும் ; விட்டுவிடல் வேண்டும் வீண்முயற்சி தனைக்கொள்ள விரயமதே விஞ்சும் !3. நதிநீரைப் பகிர்வதிலே பேதங்கொண்டப் போதும் நாம்மன்றத் தீர்ப்புதனை மதித்திடுதல் வேண்டும் ! நேர்மையதும் பிறழ்வதுவோ ? நீதியதும் உறங்குவதோ ? நிலைத்தநல் அமைதிகெட வன்முறையும் படர்வதுவோ ? பாரிதனில் நம்நாடும் பண்பட்டதோர் நாடெனவே பலரும்நமைப் போற்றியதும் பிழையெனவே தகுமோ ? சீர்கொண்டப் பெருமையதும் சிறப்பதுவும் அழிவுறவோ , சிலர்தம்மின் சுயநலத்தால் சிக்கலிங்கே விளைவதுவோ ?4. போராடி நாமன்று சுதந்திரத்தைப் பெற்றோம் , பொன்னான வாழ்வடையும் கனவுதனைக் கண்டோம் ! தீராதப் பிரச்சனைகள் தீர்ந்திடுமாம் என்றோம், திகட்டாநல் வாழ்வேதான் எனமகிழ்வு கொண்டோம் ! சீராகும் வளங்கள்தனை கண்டுய்யத் தானே சிந்தினர்நம் முன்னோர்கள் இரத்தமது தன்னை ! ஆறாகப் பெருகுவதேன் இன்றிந்த நாட்டில், அமைதிக்குப் பங்கம்வரல் அவலமதே அன்றோ ?5. நாடிதனின் உயிர்நாடி சட்டம் ஒழுங்கு நீதி , நாமேஅதை மதியாமை ஆபத்தான வியாதி ! ஓடிவரும் நதிநீரைத் தடுப்பதென்ன முறைமை ? உண்மையிலே நதியெல்லாம் நாட்டின்பொது உடமை ! வேடிக்கைப் பார்ப்பதுவோ அதனைநாம் இழந்தும் , வீண்தரிசாய்ப் போவதுவோ தஞ்சைமா நிலமும் ? பேடிகளென் றாவோமோ , உரிமைதனை மீட்ப்போம் ; பிறர்நம்மை ஏய்ப்பதனைப் பொறுக்கவரும் அழிவே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...