வேலி தாண்டிய காற்று : கு.முருகேசன்


கடல் கடந்த அலை
சுனாமியால் வந்தது.
கழுத்தளவு தண்ணீர்
அடைமழையால் வந்தது.
கட்டுக்கு அடங்காத காற்று
புயலால் வந்தது.
மனிதன் குற்றம் செய்தால்
புயலில் அடைக்கிறோம்
புயலே குற்றம் செய்தால்
எங்கே அடைப்பது?
காற்றை தூய்மையாக்க
மரம் வளர்த்தோம்.
காற்றே!
நீ மரத்தையே
தூய்மையாகத்
துடைத் தெறிந்தாய்!
நீருக்கு மட்டுமே
தெரிந்த வேரை
ஊருக்கே தெரிய வைத்தாய்!
காற்றில் மின்சாரம்
எடுக்கலாம் என்றது
விஞ்ஞானம்.
இன்று காற்றுதான்
பல வீடுகளிலிருந்து
மின்சாரத்தை எடுத்தது.
காற்று இல்லாமல்
உயிர்கள் இல்லை!
இன்று
பலத்த காற்றினாலே
பல உயிர்கள் இல்லை!
காற்றே!
நீ கட்டுக்குள் இருக்கும் வரைதான்
மண்
மரத்திற்கு கருவறை!
நீ வேலிதாண்டினால்
மரத்தையே
மண்ணில் சாய்க்கிறாய்!
காற்றே!
நீ மண்ணில் சாய்த்தது
வெறும் மரத்தை அல்ல
இந்த மண்ணின் மைந்தர்களை!
தோட்டத்தில்!
ஆடு மாடுகள் வேலி தாண்டினால்
இலை பறிக்கும்
மனிதன் வேலி தாண்டினால்
கனி பறிப்பான்.
காற்றே! நீ வேலி தாண்டினால்
தோட்டத்தையே பறிக்கிறாய்!
காற்றுக்கு தலையசைத்த மரங்களை
விட்டுச் செல்கிறாய்!
எதிர்த்து நின்ற மரங்களை
வீழ்த்திச் செல்கிறாய்!
அரைமணி நேரத்தில் வீழ்த்தினாய்
எங்கள் அரை நூற்றாண்டு உழைப்பை!
காற்றை வேலியும்
கன்னியை தாலியும்
ஒருபோதும் கட்டுப்படுத்தாது
தானாக அடங்கினால் ஒழிய!
காற்றே!
நீ வேலி தாண்டியதால்
எலக்ட்ரிக் பவரும் இல்லை
செல்போன் டவரும் இல்லை.
எதிரிகள் எல்லை தாண்டினால்
புயலாய் அடிப்போம்!
புயலே எல்லை தாண்டினால்
எப்படி தடுப்போம்!
மனிதனின் வேலி தாண்டிய சிந்தனையால்
கற்காலம் கணினிக் காலம் ஆனது!
வேலி தாண்டிய காற்றால்
கணினி காலமும் கற்காலம் ஆனது!
காற்றே! நீ
மரங்களையும் மனிதர்களையும்
மண்ணில் சாய்க்கலாம் !
ஏன் கூரைகளையும்
குப்பையில் சாய்க்கலாம்!
மனித நேயத்தை
எங்கே சாய்ப்பாய்?
காற்றே! நீ வா
பூவை வருடும் தென்றலாய்!
புல்லாங்குழல் வழியே இசையாய்!
உயிர் மூச்சாய்!
வரவேற்போம் முழு மூச்சாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...