‘வானம் எனக்கு ஒரு போதி மரம்’ - கவிஞர் வைரமுத்து
நவரத்தினங்களில் இரண்டு இவரிடம் இருக்கின்றன. எண்ணத்தில் இருப்பது வைரம்; எழுத்தில் இருப்பது முத்து!


நவரத்தினங்களில் இரண்டு இவரிடம் இருக்கின்றன. எண்ணத்தில் இருப்பது வைரம்; எழுத்தில் இருப்பது முத்து!
கவிஞர் வைரமுத்து முதுநிலைக் கல்வியில் (எம்.ஏ) கல்லூரியிலேயே முதல்வராகத் தேறி, ‘யாப்’பிலும் ஊறி, இமைத்து விழிப்பதற்குள் கவி பாடும் திறன் பெற்ற பிறகு, புதுக் கவிதை இல்லத்தில் புதுக் குடித்தனம் புகுந்தவர்.
இவருடைய பாட்டாழத்தை ஆயப் புகுந்தால், அங்கு ஒரு பட்டாளம் இருக்கிறது, புதுமையும் பொதுமையும் அதற்குத் தலைமை.
திரை வெக்கைக்கு இளைப்பாறுதல் கொடுத்தது பாரதிராஜாவின் ‘நிழல்கள்’. அந்தத் துறையில் இன்று வரை பேறுகள் (பாடல்கள்) பதினாறைப் பெற்றுவிட்ட வைரமுத்து, பாவை ஆற்றும் பொழுது நுரையும் கனக்கிறது!
உங்களை கவிஞராக வளர்த்த பின்னணி என்ன?
மதுரை மாவட்டத்தில் பெரியகுளத்தை அடுத்து வடுகபட்டித்தான் எனது சொந்த ஊர். எத்தனை முறை நடந்தாலும் வழுக்கை விழாத வரப்புக்கள். எனக்கு நிழல் பிச்சை இட்ட சின்னச் சின்ன தென்னை மரங்கள். என் தனிமையைக் காவல் காத்த ஆற்றங்கரை மேடுகள். தூரத்தில் என் கண்களில் மழைப் பெய்யும் கொடைக்கானல் மலைகள். நான் மனிதர்களை விட அதிகமாக நேசித்த எங்கள் ஊர் நூலகத்துப் புத்தகங்கள்.
திரையுலகிற்கு எப்படி வந்தீர்கள்?
இனிய அண்ணன் ஓவியர் உபால்டு, பாரதிராஜாவிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி அந்த இனிப்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். என் எழுத்துக்களின் இதயத் துடிப்பை அவர் காது கொடுத்துக் கேட்டார். ‘என் படத்துக்கு எழுதுங்கள்’ என்றார். அவர் வீட்டுக்குள் நுழைந்தபோது கால்களோடு போன நான், திரும்பி வரும் போது சிறகுகளோடு வந்தேன். அவர் இல்லை என்றால், என் விலாசத்தை இத்தனை பேர் விசாரித்திருக்க மாட்டார்கள்.
முதல் பாடல் எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?
திரையுலகில் நீங்கள் போற்றும் மற்றக் கவிஞர்கள் யார் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கவிஞர் கண்ணதாசனும் என் வணக்கத்துக்குரியவர்கள். இவர்கள் இருவரும் எழுதியிராவிட்டால், தமிழ்த் திரைப்பாடல் மலட்டு வார்த்தைகளின் மயானமாக இருந்திருக்கும்.
பாடலில் பாலுணர்வு பற்றி உங்கள் கருத்து என்ன?
பாலுணர்வைத் தூண்ட வேண்டாம் என்பதுதான் என் கருத்து. பாலுணர்வே வேண்டாம் என்பதல்ல என் கருத்து. என்னைப் பொறுத்த அளவில், நயமாகச் சொல்லும் எதுவும் நாகரிகம் பெறூம். முதலிரவைப் பற்றிப் பாடும்போது இப்படி எழுதினேன் :
‘கண்ணாடி வளையல் இது
கையெல்லாம் நெறஞ்சிருக்கும்
எந்திரிச்சுப் பார்க்கையிலே
எண்ணிக்கை கொறஞ்சிருக்கும்’
பாடலைக் கேட்பவர்களின் கற்பனைக்கு வழி வகுத்துக் கொடுத்து, கவிஞன் கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டும்.
உங்கள் லட்சியம் என்ன?
கலைகள் மக்களை மேன்மைப்படுத்தும் மாண்பு பெற வேண்டும். தமிழ்த் திரைப்பாடல்கள் இலக்கிய அந்தஸ்து பெற்று, பல்கலைக் கழகத்துப் பாடநூலாக வேண்டும்.
(கேட்டவர் - மருதம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...