/

கமலுக்கு அந்தப் பழக்கம் கிடையாது – வாணி கமல்

ஸ்வீட் அதிகம் பிடிக்கும். நான் அக்கரையாக ஒரு வகையாக தயாரித்துத் தருவேன். அவருக்கு உணவில்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

கமலுக்குப் எந்த வகை உணவு அதிகம் பிடிக்கும்?

ஸ்வீட் அதிகம் பிடிக்கும். நான் அக்கரையாக ஒரு வகையாக தயாரித்துத் தருவேன். அவருக்கு உணவில் தினசரி பல வகைகள் வேண்டும். தினம் எழுந்தவுடன் பல் தேய்த்த பிறகு காரெட் ஜூஸ் ஒரு டம்பள் தருவேன். இது தோலைப் பாதுகாக்கப் பயன் தரும். பெரிய விளக்குகள் முன் நிற்கும்போது தோல் பாதிக்கப்படக் கூடாது இல்லையா? அதுக்காக!

அழகையும், உடம்பையும் பாதுகாப்பதற்கு பிரத்யேக முயற்சிகள் ஏதாவது?

தினசரி காலையில் தேகப் பயிற்சி செய்வார். என்னைக் கூப்பிட்டு சில சந்தர்ப்பங்களில் தேகப் பயிற்சி செய்யச் சொல்வார். அன்று போராக இருந்தாலும் அருமைக் கணவராயிற்றே என்று செய்வேன்!

பம்பாயில் வாழ்ந்த உங்களுக்கு சென்னை வாழ்க்கை….?

என்ன கஷ்டம் இதில்? என் பெற்றோரும் கலையில் நாட்டம் உள்ளவர்கள். இங்கும் எல்லோரும் அப்படித்தான். அதனால் எனக்கு எந்த வித்தியாசமுமே தெரியவில்லை.

நடிகர்களின் மனைவி மனசஞ்சலத்துடன் தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது என்கிறார்கள். உங்கள் அனுபவம் எப்படி?

தவறான எண்ணம்! நடிகர்களின் மனைவி என்பதில் நான் பெருமைப்படுகிறேன். அவருடைய முழுமையான அன்பு எனக்கு இருக்கிறது. நன்றாக இருக்கிறார். நன்றாகச் சம்பாதிக்கிறார். பணத்தோடு மட்டுமில்லாமல் புகழும் உண்டு. இன்னும் என்ன வேண்டும்? ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன். இத்தகைய கலைஞரின் மனைவியாக இருப்பவள் பரந்த நோக்குடன் இருக்க வேண்டும். யாருடன் பேசினாலும் தப்பாக எடை போடக் கூடாது. மேலும் அவருடைய தொழிலில் நம்மையும் பிணைத்துக் கொண்டால் அது இன்பமாகவே இருக்கும். வேலையில்லாத மனைவி தான் சஞ்சலப்படுகிறாள். நான் இப்போது பாலசந்தர் சாரிடம் எடிட்டிங் கற்றுக் கொள்கிறேன். அவருடைய குரு பாலசந்தர் சார் தான். எனக்கும் அவர் தான் குரு. எடிட்டிங் தெரிவதால் அவர் தோற்றத்தை நடிப்பை இன்னும் நன்றாக பளீரிட வைக்க முடியும்.

கமலை எந்த உடையில் அதிகம் நீங்கள் விரும்புகிறீர்கள்?

நான் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். வீட்டில் ஓய்வாக இருப்பதே மிக அபூர்வம். அந்த நேரத்தில் அவர் வெறும் ஜட்டியுடன் தான் உலாத்துவார். எப்போதும் உடைகளும் முகப் பூச்சுக்களுமாக இருப்பதால் இந்த மாறுதலை அவர் விரும்புகிறார். நான் எதைச் சொல்வது?

இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது.

உங்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்த தருணம் எது?

வறுமையின் நிறம் சிவப்பு படத்தை முதலில் நாங்கள் பார்த்துவிட்டோம். பிறகு மக்களின் எண்ணத்தை அறிய தேவி தியேட்டரில் பாக்ஸில் உட்கார்ந்து பார்த்தோம். சீனுக்கு சீன் மக்களின் பாராட்டை நேரில் பார்த்த போது என் மகிழ்ச்சியை அடக்கவே முடியவில்லை. உண்மையிலேயே உயரந்த தருணம் அது.

வாணி, தான் ஒரு வெற்றிகரமான இல்லத் தலைவி என்பதை எவ்வளவு அழகாக நிரூபித்து வருகிறார். கமல் கொடுத்து வைத்தவர் தான்.

-குயிலி ராஜேஸ்வரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.