/

நிழல்கள் வெற்றிப்படமா?சந்திரசேகர் பேட்டி

அபிராமபுரம் வாரன் ரோட்டில் உள்ள இல்லத்தில் ‘ஒரு தலை ராகம்’ சந்திரசேகரைப் பேட்டி காணச்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

அபிராமபுரம் வாரன் ரோட்டில் உள்ள இல்லத்தில் ‘ஒரு தலை ராகம்’ சந்திரசேகரைப் பேட்டி காணச் சென்றபோது ‘வெற்றி மேல் வெற்றி வரும்’ என்ற பாடலைக் கேட்டுக் கொண்டே நுழைந்தேன்.

என்ன சார்? வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறீர்களே, அதைக் குறித்துத்தான் பாடுகிறீர்களா? எனக் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை சார், சும்மாத்தான் பாடிக் கொண்டிருக்கிறேன் என்று சிரித்தார்.

மதுரை மாவட்டம் கருமாத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த சந்திரசேகருக்கு இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய இரண்டு சகோதர்களுமே சினிமாத்துறை சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மூத்த சகோதரர் சோமு சென்னை சபையர் தியேட்டரில் ஆப்பரேட்டராகவும், இரண்டாவது சகோதரர் பாண்டியன் சினிமாப் படங்களுக்கு விளம்பர ஓவியராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த இருவருக்கும் இளையவர் சந்திரசேகர்.

எஸ்.எல்.சி வரை படித்துள்ள சந்திரசேகரைப் பேட்டி கண்டபோது அவர் கூறியவை.

நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

சிறு வயது முதற் கொண்டே நான் மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் ரசிகன். அவருடைய நகைச்சுவை நடிப்பு, பாடல் முதலியவை என்னைப் பெரிதும் கவர்ந்தன. அது முதற்கொண்டே எனக்கு ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

முதன் முதலில் சினிமாவில்தான் நடித்தீர்களா?

1974-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை எழுதித் தேர்வு பெற்றவுடன் மதுரையில் பல நாடகங்களில் நடித்து இருக்கிறேன். 1975 ஆம் ஆண்டு முதல் சென்னைக்கு வந்து பல டைரக்டர்களைச் சந்தித்து சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டேன். 1977-ல் பாரதிராஜா தன்னுடைய சொந்தப் படமான ‘புதிய வார்ப்புக்கள்’ படத்தில் எனக்கு நடிக்க சந்தர்ப்பம் அளித்தார். தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘கல்லுக்குள் ஈரம்’, ‘நிழல்கள்’ ஆகிய படங்களிலும் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றேன்.

ஒருதலை ராகம் படத்தில் ‘குடிகாரன் ரோலுக்கு’ உங்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள்?

என்னுடைய நண்பர்களான ராபர்ட்-ராஜசேகர் மூலமாக தயாரிப்பாளர் இப்ராகிம் ‘ஒரு தலை ராகம்’ படத்தில் எனக்கு அந்த வேடத்தை அளித்தார். எனக்கு அந்தப் படம் பெரும் புகழைத் தேடித் தந்தது.

தற்போது எத்தனை படங்களில் நடிக்கிறீர்கள்?

சுமை, பாலைவனச் சோலை, பஞ்சமி, ஏ.எஸ்.பிரகாசம் டைரக்ட் செய்யும் ‘எச்சில் இரவுகள்’ மற்றும் பெயரிடப் படாத சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன்.

‘நிழல்கள்’ படம் வெற்றிப்படமா?

என்னைப் பொறுத்தவரையிலும் ‘நிழல்கள்’ படம் ஒரு வெற்றிப் படமாகும். இப்படத்தில் பாரதிராஜா உயர்ந்த டெக்னிகல் ஐடியாக்களையும் சிம்பாலிக் ஷாட்டுக்களையும் கையாண்டு இருந்தார். இது சாதாரண ரசிகர்களுக்குப் புரியாமல் போய்விட்டது. பொதுவாக தமிழ்ப்பட ரசிகர்களுக்குப் புரியாமல் போய்விட்டது. பொதுவாக தமிழ்ப்பட ரசிகர்கள் முதலில் நல்ல கதை, பாடல், நடிகர்கள் இதைத்தான் கவனிக்கிறார்கள். அதன் பிறகுதான் இது போன்ற டெக்னிகல் ஐடியா, போட்டோகிராபி, சிம்பாலிக் காட்சி முதலிய அம்சங்களைக் கவனிக்கின்றனர். அந்த அடிப்படையில் நிழல்கள் படத்தில் அதிக அளவு சிம்பாலிக் காட்சிகளைக் கையாண்டதால் அந்த முறை ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. பாரதிராஜா இப்படத்தின் மூலம் சொல்ல நினைத்த கருத்தை ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இம்மாதிரியான படத்தை சினிமாத் துறையில் பயிற்சி பெற்று வருகின்ற வளரும் கலைஞர்களுக்குக் காட்டலாம். அந்த அளவு உயர்ந்த படம் இது. ஆனால் இது ரசிகர்களுக்குப் புரியாமல் போய்விட்டது. பொருளாதார ரீதியில் ‘நிழல்கள்’ தோல்வி அடைந்த போதிலும் பாரதிராஜா டைரக்ட் செய்துள்ள படங்களில் அவருக்கு முழுத் திருப்தி அளித்துள்ள படம் ‘நிழல்கள்’ என்று அவரே கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.