/

சில நினைவுகள் சில சம்பவங்கள் சில சலசலப்புகள்…எம்.ஆர்.ராதா

சாரதா ஸ்டூடியோவில் எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஜி.என்.வேலுமணி வந்தார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

உமா ஷக்தி.

சாரதா ஸ்டூடியோவில் எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஜி.என்.வேலுமணி வந்தார். ‘அண்ணே, நான் தயாரிக்கப் போகும் பாதகாணிக்கை படத்தில் நீங்கள் நடிக்கணும். அட்வான்ஸ் கொண்டு வந்திருக்கேன்’ என்று சொல்லி இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

‘சரி தம்பி’ என்று எம்.ஆர்.ராதா சொல்லிவிட்டு மேக் அப் மேன் கஜபதியை அட்வான்ஸைப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்.

பக்கத்திலிருந்த நான், வேலுமணி அங்கிருந்து போனவுடன் ‘என்ன கேரக்டர் என்று கூட கேட்டுக்கொள்ளாமல் அட்வான்ஸை வாங்கிக் கொண்டீர்களே?’ என்று வியப்போடு கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

‘கேரக்டரைக் கேட்டுக் கொள்ளணுமோ? ஏதாவது வில்லன் வேடமாக இருக்கும். ஏழைக் கதாநாயகனை மிரட்டுகிற ஹீரோயினின் ஃபாதர், அல்லது, பணக்கார ஹீரோவுக்கு அப்பாவாக வந்து, கதாநாயகனை கெட் அவுட் என்று விரட்டுகிற வேடமாக இருக்கலாம். வேறு என்ன கேரக்டரை கொடுத்துவிடப் போகிறார்கள்?’

போ மேன்!

வீட்டு வாசலில் வெள்ளை அரை நிஜார் போட்டுக் கொண்டு உலவிக் கொண்டிருந்தார் ஒரு நாள் மாலை. ஒருவர் வந்து பணிவோடு வணங்கிவிட்டு, தான் தயாரிக்கப் போகும் படத்தில் ராதாவை நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

‘எவ்வளவு அட்வான்ஸ் கொண்டு வந்திருக்கே?’ – கேட்டார் ராதா.

‘ஐந்நூத்து ஒண்ணு’ என்றார் வந்தவர்.

‘பிக்சர் எடுக்க எவ்வளவு பணம் வெச்சிருக்கே?’ என்று அடுத்த கேள்வியைப் போட்டார் எம்.ஆர்.ஆர்.

‘முப்பதினாயிரம் வெச்சிருக்கேன். மேற்கொண்டு அங்கே இங்கே புரட்டணும்.’

‘பேசாமே திரும்பிப் போ. நீ எல்லாம் பிக்சர் எடுக்க வரக்கூடாது. முப்பதினாயிரத்துக்கு டில்லி எருமைங்க வாங்கிப் பால் ‘யாவாரம்’ செஞ்சு பிழைச்சுக்க. அது நல்லா கறக்கும். சினிமா இன்டஸ்டிரி ஒண்ணைக் கறந்து ஒழிச்சுக் கட்டிடும். போ மேன்!’ என்றார்.

வந்தவர் போனதும், ‘பாவம், இவனெல்லாம் சினிமாப்படம் எடுக்க வரான்! காபிடல் முப்பதினாயிரமாம்! என்று அவருக்கே உரிய உச்சக் கீச்சுக் குரலில் சொல்லிவிட்டு இன்னும் இரண்டு தடவை ‘பாவம்! பாவம்!’ என்றார்.

-நவீனன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.