சிறுநீரகம் நிரந்தரமாக செயல் இழந்தவர்களுக்கு டயாலிசிஸ் ஒரு வரப்பிரசாதம் எனலாம். வயிற்றுக்குள் சொருகப்பட்ட கெதீட்டரில் நோய்த்தொற்று, பெரிட்டோனியத்தில் அழற்சி போன்ற பல காரணங்களால், இவர்களில் நூற்றில் பத்து பேருக்கு நாளாக நாளாக டயாலிசிஸ் சிகிச்சையும் பலன் தராது. அப்போது அவர்களுக்கு ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’ மட்டுமே கைகொடுக்கும். ஆரோக்கியமான சிறுநீரகம் நிமிடத்துக்கு 100 மில்லி லிட்டர் ஆரம்பநிலை சிறுநீரைப் பிரித்தெடுக்கிறது. இந்த வேகம் நிமிடத்துக்கு 5 மில்லி லிட்டர் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டால், சிறுநீரக செயலிழப்பு கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். இதை ‘இ.எஸ்.ஆர்.டி’ (End stage renal disease) என்று கூறுகிறோம். நீந்தும் மீனுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை இவர்களுக்கு அவசியம்.