நடிகர் ஜெயப்பிரகாஷ் தினமணி.காமின் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வாயிலாக பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஜெயப்பிரகாஷ், இயக்குனர் சேரனின் மாயக்கண்ணாடி திரைப்படம் மூலமாக ஒரு நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். சேரன் அவரது நெடுங்கால நண்பர் என்ற முறையிலும், ஜெயப்பிரகாஷ் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் ‘பொற்காலம்’ என்றொரு அருமையான திரைப்படத்தை வெற்றிப்படமாகவும் படைத்தளித்த உரிமை மற்றும் பெருமிதம் காரணமாகவும் ஜெயப்பிரகாஷை வற்புறுத்தி நடிகராக மாற்றி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் சேரனையே சேரும். அவரை மட்டுமல்ல இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் தனது நடிப்பை பட்டை தீட்டிக் கொள்ளும் வகையில் சிறந்த குணச்சித்திர வாய்ப்புகளை வழங்கிய இயக்குனர்களாக ஜெயப்பிரகாஷ் நினைவு கூர்ந்தது இயக்குனர் சுசீந்திரன், மிஷ்கின், நவீன் (மூடர் கூடம்) இயக்குனர் அருண்குமார் (பண்ணையாரும் பத்மினியும்) மற்றும் இயக்குனர் சங்கர் (2.o) உள்ளிட்டோரை. இந்த இயக்குனர்களிடம் பணிபுரியும் போது தனது கதாபாத்திரங்கள் பெருமளவில் மக்கள் ரசிக்கத் தக்க விதத்தில் அமைந்திருந்ததால் தான் இன்று தான் மக்கள் தன்னை நடிகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஜெயப்பிரகாஷ்.