பள்ளிக்கூடப் படிப்பைத் தொடராமல் பாதியிலேயே விட்டுவிடும் "இடைநிற்றல்' எனும் இடர்ப்பாடு தொடர்கிறது. அதிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் தொடர் கற்றல் பல்வேறு சமூக, பொருளாதார, கலாசாரக் காரணங்களால் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகிறது. ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ நடத்தப்படும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி மக்கள் மத்தியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதற்கு என்ன செய்யலாம் என்று அன்றாடம் கிராம மக்களுடன் பழகுவோரிடம் ஆலோசனை கலந்து அமைப்பு ரீதியான வசதிகளைச் செய்துதந்தால்தான் இடைநிற்றல் என்ற குறை நீங்கும்.
அண்மையில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இறுதிப்பட்டியலின்படி எழுத்தறிவு பெற்றோர் 73 சதவீதம். ஆண்களின் எழுத்தறிவு 5.6 சதவீதமும் பெண்களின் எழுத்தறிவு 11 சதவீதமும் அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலுமே பெண்களின் எழுத்தறிவு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. பெற்றோர்களின் மனமாற்றம், அரசின் பிரசாரம், பள்ளிகள் எண்ணிக்கையும் போக்குவரத்து வசதிகளும் அதிகரித்துவருவது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
பெண்கள் படிப்பதால் பொருளாதார ரீதியாக பல்வேறு சுமைகள் ஏற்படும் என்ற எண்ணம் குக்கிராமங்களில் நிலவுவதால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.
முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நகரத்துப் பிள்ளைகள் பெற்றோருடன் உறவினர் வீடுகளுக்குச் செல்கின்றனர் அல்லது கோடை விடுமுறைக்காலத்தில் சிறப்பு படிப்புகளையும் நீச்சல், பரதநாட்டியம் போன்ற துணைக் கலைகளையும் கற்றுத் தேர்கின்றனர். இத்தகைய வாய்ப்புகளும் பொருளாதார வசதிகளும் அற்ற கிராமத்து மாணவர்கள் தத்தமது பெற்றோரின் தொழில் அல்லது வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளிக்கூடம் திறந்த பிறகு படிப்பைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கும் இருப்பதில்லை, பெற்றோருக்கும் வருவதில்லை.
குழந்தைகள் வேலைக்குப் போய் அதிகம் சம்பாதிப்பதில்லை என்பது நமக்குத் தெரிந்தாலும் அவர்கள் கொண்டுவரும் சொற்ப வருமானமே கிராமப்புற குடும்பங்களுக்குக் கணிசமாகத் தெரிவதால் பெற்றோர் மகிழ்ச்சியடைகின்றனர். பள்ளிக்கூடத்தின் நாலு சுவர்களுக்குள் ஆசிரியரால் கட்டுப்படுத்தப்படுவதைவிட வேலை செய்யும்போது மகிழ்ச்சியாக இருக்க முடிவதாக மாணவ, மாணவிகளும் நினைத்துவிடுகின்றனர்.
கிராமங்களில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் பருவத்தையொட்டிய வேலை செய்யும் இதர கூலித்தொழிலாளர்களும் பிழைப்புக்காக நகரங்களுக்குக் குடிபெயரும்போது தங்களுடைய பிள்ளைகளை வேறு யாரிடமும் விட்டுச்செல்ல வழியில்லாததால் தங்களுடனேயே அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அப்போதும் இடைநிற்றல் ஏற்படுகிறது. இடம் பெயரும் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியைத் தொடர்வதற்கான அதிகாரப்பூர்வ ஏற்பாடு எல்லா பள்ளிக்கூடங்களிலும் செய்யப்பட்டால் இந்தப் பிரச்னை தீரும்.
இந்தியாவில் ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடிப் பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகத் தெரியவருகிறது. இவர்களில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள்தான் அதிகம்.
இடைநிற்றல் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் உண்மைத்தன்மை வாய்ந்ததுதானா என்கிற சந்தேகமும் வருகிறது. குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியப் பணியிடங்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதால் குழந்தைகள் இடை நின்றாலும் அது சரியாகப் பதியப்படுவதில்லை என்கிற சந்தேகம் நிலவுகிறது.
"அனைவருக்கும் கல்வி' என்பதில் அரசும் ஆசிரியர்கள் சமூகமும் கிராமக் குழுக்களும் முழுமனதுடன் ஈடுபாடு காட்டினால்தான் இடைநிற்றல் என்பது படிப்படியாகக் குறைந்து பிறகு அறவே நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


