/

ஸ்பெஷல் நெட்வொர்க்: இது திமுகவின் தேர்தல் வியூகம்!

ஐந்தாண்டுகால ஆட்சிக்குப் பிறகு தேர்தலைச் சந்திப்பது எந்தவொரு ஆளுங்கட்சிக்கும் சவாலான விஷயம். எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகள், மக்களிடையே இருக்கும் அதிருப்தி இவற்றையெல்லாம் மீறி தேர்தல் களத்தில் மு

News image
Updated On :28 ஜூலை 2025, 4:06 am

சிவ. மணிகண்டன்

ஐந்தாண்டுகால ஆட்சிக்குப் பிறகு தேர்தலைச் சந்திப்பது எந்தவொரு ஆளுங்கட்சிக்கும் சவாலான விஷயம். எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகள், மக்களிடையே இருக்கும் அதிருப்தி இவற்றையெல்லாம் மீறி தேர்தல் களத்தில் முந்திச் செல்ல, ஆளுங்கட்சியானது பகீரத முயற்சியை செய்யத் தான் வேண்டும்.

 ஒவ்வொரு கட்சியும் பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து தேர்தல் அறிவிப்புக்காக களத்தில் தயார் நிலையில் இருக்கின்றன. இதில் ஆளுங்கட்சியான திமுக, இந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிய பாணியிலான திட்டத்தை தயாரித்துள்ளது.

 2001 தேர்தலின்போது, "மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம்' என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்த திமுகவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அப்போது தனது ஆட்சியைப் பற்றிக் கூறிய முதல்வர் கருணாநிதி, "நான் கருணாநிதியாக இருக்காமல், காமராஜராக மாறியது தான் தவறு' என்று குறிப்பிட்டார். அத்தகைய சூழல் 2011 தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர் திமுகவினர்.

 "எத்தனையோ திட்டங்கள் 5 ஆண்டுகளில் செயல்படுத்தி இருந்தாலும், தேர்தலின்போது மக்களுக்கு அதை மீண்டும் நினைவூட்ட வேண்டும். இத்தனை திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம், நம்மை மறந்துவிடவா போகிறார்கள் என இருக்கக் கூடாது. எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தில் வாக்காளர்களிடையே மனமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், பிரசாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்பதே திமுக தலைமை கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளது.

 இதன்படி, தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் நேரில் சந்தித்து வாக்குச் சேகரிப்பதற்காக "ஸ்பெஷல் நெட்வொர்க்' திட்டத்தை திமுக வகுத்துள்ளது. இதற்கென பேரவைத் தொகுதி வாரியாக தொகுதி குழு அதற்கு கீழ் பகுதி குழுக்கள், வாக்குச்சாவடிக் குழுக்கள் அதற்கு அடுத்ததாக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 தேர்தலுக்காக பூத் கமிட்டிகள் அமைப்பது வழக்கம். அதிலிருந்து மாறுபட்டு புதிய பாணியில் இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர்களின் பிரசாரம் ஒருபுறம் இருந்தாலும், குழு நிர்வாகிகள் தங்களது பகுதி வாக்காளர்களை தினம் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்பது புதிய பிரசார உத்தியின் அம்சம். அதோடு, கட்சியின் கடைநிலைத் தொண்டனுக்கும் தேர்தல் பணியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுகிறது.

 ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் எம்பி, எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் தொகுதிக் குழுவில் இடம்பெறுவர்.

 அதற்கு அடுத்ததாக பகுதி குழுவில், வட்டச் செயலர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடம்பெறுவர். ஒவ்வொரு தொகுதிக்கும் 10-லிருந்து 15 பகுதிக் குழுக்கள் அமைக்கப்படும்.

 மூன்றாவது குழுவான வாக்குச்சாவடிக் குழு, அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கட்சியைச் சேர்ந்த 10 பேர் இக் குழுவில் இருப்பவர். வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி முகவர்களாக இவர்களே பணியாற்றுவர்.

 கடைசியாகக் கண்காணிப்புக் குழு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். நூறு வாக்காளர்களில் ஒருவராக இந்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் இருக்கும்படி,

 தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதிகபட்சம் 1,600 வாக்காளர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் கண்காணிப்புக் குழுவில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 16 பேர் இடம்பெறுவர்.

 இவர்களுக்கென 100 வாக்காளர்களையும், தினமும் சந்தித்து வாக்குச் சேகரிப்பது தான் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் பணி. இப் பணியை வாக்குச்சாவடிக் குழுவும், பகுதி குழுவும் மேற்பார்வையிடும். தொகுதிக் குழு நிர்வாகிகள் பிரசாரத்தின்போது, அடுத்ததாக இருக்கும் மூன்று குழுக்களும் தங்களது பகுதியில் வாக்காளர் சந்திப்பு இயக்கத்தை ஏற்பாடு செய்யும்.

 "இதுவரை நடந்த பேரவைத் தேர்தல்களில் இல்லாத வகையில் இம்முறை பிரசார உத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. பிரசாரத்துக்கென தனி நெட்வொர்க் ஏற்படுத்தியுள்ளது இந்த தேர்தலில் தான். இடைத் தேர்தல்களில் இந்த அணுகுமுறை சில குழுக்களாக பின்பற்றப்பட்டது. தற்போது பேரவைத் தேர்தலுக்காக நான்கு குழுக்களைக் கொண்ட நெட்வொர்க்கை ஏற்படுத்தியுள்ளோம்' என்கின்றனர் திமுகவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.