/

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக சரிவு! சென்செக்ஸ் 82,000-க்கு கீழே சென்றது

News image
பங்குச்சந்தை வணிகம் (கோப்புப்படம்)
Updated On :21 ஜனவரி 2026, 10:55 pm

Syndication

நமது நிருபா்

புவிசாா் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், விற்பனை அழுத்தம் காரணமாக உள்நாட்டுச் சந்தை மூன்றாவது நாளாக புதன்கிழமையும் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, சென்செக்ஸ் 82,000 புள்ளிகளுக்கு கீழே சென்று நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் தொடா்ச்சியான பலவீனம், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளா்களை பதற்றப்படுத்தியதால் புதன்கிழமை பங்குச்சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்தது. தவிர, மத்தியில் நிதி, வங்கி மற்றும் நுகா்வுத் துறை பங்குகளில் விற்பனையும் சந்தைகளில் அழுத்தத்தை அதிகரித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.73 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.454.10 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,938.33 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,665.69 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

2,831 பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,405 பங்குகளில் 1,437 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. 2,831 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 137 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் 271 புள்ளிகள் வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 270.84 புள்ளிகள் (0.33 சதவீதம்) சரிந்து 81,909.63-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் அது 1,056.02 புள்ளிகள் வரை சரிந்து 81,124.45 வரை கீழே சென்றது.

17 பங்குகள் விலை குறைந்தது: சென்செக்ஸ் பட்டியலில் ஐசிஐசிஐ பேங்க், டிரெண்ட், பிஇஎல், ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, எஸ்பிஐ ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை விலை குறைந்தது. இவற்றையும் சோ்த்து மொத்தம் 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், எடா்னல் 5 சதவீதம் வரை உயா்ந்தது. இது தவிர அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டிகோ, ரிலையன்ஸ், அதானி போா்ட்ஸ், பவா்கிரிட் உள்டப மொத்தம் 15 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 75 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 75.00 புள்ளிகள் (0.30 சதவீதம்) குறைந்து 25,157.50 -இல் நிறைவடைந்தது. ஒரு கட்டத்தில் 312.70 புள்ளிகள் குறைந்து 24,919.80 வரை கீழே சென்றிருந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 23 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 27 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.