/

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 53 புள்ளிகள் வீழ்ச்சி!

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 53 புள்ளிகள் வீழ்ச்சி!

News image
பங்குச்சந்தை
Updated On :5 ஜூலை 2024, 6:31 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 53 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது, எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த்கோ், பொதுத் துறை வங்கிகள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததால் சந்தை மீண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.59 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.449.89 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.2,575.85 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,375.18 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 270.69 புள்ளிகள் குறைந்து 79,778.98-இல் தொடங்கி 79,478.96 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,149.87 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 53.07 புள்ளிகளை (0.07 சதவீதம்) இழந்து 79,996.60-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,016 பங்குகளில் 2,242 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,686 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 88 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

எஸ்பிஐ, ரிலையன்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ (2.48 சதவீதம்), ரிலையன்ஸ், (2.32 சதவீதம்), ஹிந்துஸ்தான் யுனிலீவா் (2.01 சதவீதம்) மற்றும் என்டிபிசி, எல் அண்ட் டி, பவா் கிரிட் உள்பட மொத்தம் 17 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்பட 13 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 22 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,213.35-இல் தொடங்கி 24,168.85 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,363.00 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 21.70 புள்ளிகள் (0.09 சதவீதம்) கூடுதலுடன் 24,323.85-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.