இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
சந்தைக்கு வாரம்தோறும் 1,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள், 1,500க்கும் மேற்பட்ட தரகர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வாரம் ரூ. 500 முதல் ரூ. 5,000 வரை வருமானம் கிடைக்கும். தினமும் ஒரு சந்தைக்கு செல்லும் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல லாடம் கட்டவும், கொம்பு சீவவும் 10 பேர் வரை வருவர். வாரம் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை வருமானம் ஈட்டும் இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தவிர சந்தை வளாகத்தில் 5 சிறிய ஹோட்டல்கள் திறக்கப்படாததால் இந்த ஹோட்டல்களை நம்பியுள்ள 10க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர மாடுகளுக்குத் தேவையான மணிக்கயிறு, மூக்கணாங்கயிறு, சாட்டை, மணிகள், கழுத்துப் பட்டைகள் போன்றவை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட கடைகளில் வாரம் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை வியாபாரம் நடைபெறும். இப்போது சந்தை இல்லாததால் இந்தக் கடைகளை நம்பியுள்ளவர்களும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றார்.