/

தொழில்கூடங்களில் பயன்பாட்டு மின் யூனிட்டுகளுக்கு மட்டுமே கட்டணம்

ஊரடங்கால் தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில்களின் (விலக்களிக்கப்பட்டவை தவிர) உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தொழில்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட யூனிட்டுகளுக்கு மட்டுமே மின்

News image
Updated On :22 ஜூலை 2025, 9:43 am

ஆர். முருகன்


ஊரடங்கால் தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில்களின் (விலக்களிக்கப்பட்டவை தவிர) உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தொழில்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட யூனிட்டுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில்துறையினரின் மத்தியில்  வலுவடைந்துள்ளது.

நாட்டின் அதிகளவிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்ட  தமிழகம்,  பாதுகாப்புத்துறை  தளவாடப் பொருள்கள் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் பொருள்கள், இலகுரக மற்றும் கனரக பொறியியல் இயந்திரங்கள், பம்புகள் மற்றும் மோட்டார்கள் உற்பத்தி, மின்னணு மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்தி என பல துறைகளில்  சிறந்து விளங்குகிறது.

ஹுண்டாய், ஃபோர்டு, அசோக் லேலண்ட், டிவிஎஸ், நிசான், எல் அண்ட் டி போன்ற பல்வேறு நிறுவனங்கள், தமது உற்பத்தி கேந்திரங்களை தமிழகத்தில் அமைந்திருப்பதே அதற்கு சான்று.

பெருந்தொழில்களில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ள இங்குதான், 37,220 என்ற அதிக  எண்ணிக்கையிலான தொழில்கூடங்களும்   உள்ளன. 12 மாவட்டங்களில் 21 தொழில் பூங்காக்கள், 7 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன.

இதுமட்டுமல்லாது திருச்சி, பெரம்பலூர் மதுரை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 8,785 ஏக்கரில் 11 புதிய தொழில்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி  மாவட்டங்களில் சுமார் 14,090 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை சிப்காட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  
தமிழகத்தின் மின்நிறுவுத் திறன் 31,894 மெகாவாட்டாக உள்ளது.  இவற்றில், 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமும், 28% நிலக்கரி மூலமும், 5 % அணு உற்பத்தி முலமாகவும் பெறப்படுகிறது. 3% எரிவாயு மின் உற்பத்தி வாயிலாகவும், 14 % கொள்முதல் மூலமாகவும் பெறப்படுகிறது.   காற்றாலை மூலம் 11,717 மில்லியன் யூனிட்டுகளும், சூரிய ஆற்றலிலிருந்து 3, 482 மில்லியன் யூனிட்டுகளும் மின்சாரம்   பெறப்பட்டு வருகின்றன.

தொழில்துறை முடக்கம்: கரோனா வைரஸ்  நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட  ஊரடங்கு, ஒட்டுமொத்த தொழில்துறையையும் முடக்கி வைத்துள்ளது.   இதன்காரணமாக தொழில்துறைக்கான மின்சாரப் பயன்பாடு மட்டும் 80% குறைந்துவிட்டது.  மார்ச் 22-ஆம் தேதி சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி தற்போது வரை உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.  பாதுகாப்புக்காக மட்டும் ஒரு சில மின்விளக்குகள் எரிய விடப்பட்டு, நிறுவனக் காவலர்கள் மூலம் தொழில்கூடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மின்வாரியத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த தொழில்துறையினர்:  இந்த சூழலில் மின்வாரியத்திலிருந்து வந்துள்ள அறிவிப்பானது, தொழில்துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.   மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான   மின் கட்டணத்தை சராசரி அளவீடு என்ற வகையில், முந்தைய கட்டணத்தொகை அளவீட்டில் செலுத்துமாறு மின் இணைப்பு பெற்றுள்ளவர்களின் செல்லிடப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், மே மாதத்தில் மின்கட்டணம் செலுத்தவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சாதாரண அச்சுக் கூடத்திலேயே ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்தும் சூழல் உள்ளது. ஆனால், அச்சகமே இயங்காமல் அந்த கட்டணத்தை எப்படி செலுத்துவது என்கின்றனர் தொழில்துறையினர். எனவே பயன்படுத்திய மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில்துறையினர் மத்தியில் வலுத்துள்ளது.  

தோட்டக்கலை மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும் அவதி

தொழில்துறையினர் மட்டுமின்றி தோட்டக்கலை மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். 

ஊரடங்கால் கூலி ஆள் வருவதில் சிரமம் ஏற்பட்டு மலர்கள், பழ வகைகள், காய்கனிகள், பல இடங்களில் அறுவடை செய்யப்படாமலேயே உள்ளன. இச்சூழலில் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.50 மின் கட்டணம் என்பதை செலுத்த முடியாத நிலையில்  விவசாயிகள் உள்ளனர்.

எனவே, தோட்டக்கலை மின் இணைப்பு பெற்றுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் அ.நாகராஜன்.

கட்டணம் செலுத்துவதில்  அவகாசம் வேண்டும்

ஊரடங்கால் தொழிற்சாலைகள் முடங்கி, உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வருவாய் முடங்கியுள்ளது. இந்தச் சூழலில் மின்வாரியத்தின் மூலம் கட்டண வசூல் தீவிரப்படுத்தப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.   

பயன்படுத்தாத யூனிட்டுக்கு கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்வதை ஏற்க முடியாது. 

மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் அனைத்துத் தொழில்களுக்கும் அவகாசம் அளிக்க வேண்டும். தொழில்கூடங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கி வருவாயை ஈட்டும் சூழலில் கட்டணத்தை பெற்றுக் கொள்ள அரசு முன்வர வேண்டும் என்கிறார் திருச்சி தொழில் வர்த்தக மையத்தின் தலைவர் என். கனகசபாபதி.

ஊதியம் வழங்க இயலாத நிலையில் தொழில்கூடங்கள்

பெல் நிறுவனத்தை சார்ந்து 350-க்கும் மேற்பட்ட தொழில்கூடங்கள் இயங்கி வருகின்றன. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பாய்லர் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வகைத் தொழில்கூடங்களும் ஊரடங்கால் முடங்கியுள்ளன.பராமரிப்புகளுக்காக மட்டும் குறைந்தபட்ச அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

 எனினும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தவறாமல் மாதம் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. உற்பத்தி நிறுத்தம், வருவாய் இழப்பு, தொழில் நசிவு ஆகிய கடும் நெருக்கடிகளுக்கு இடையே, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதே இயலாத நிலையில்தான் பல தொழில்கூடங்கள் உள்ளன. இந்த சூழலில், மின்கட்டணத்தை சராசரியாக கணக்கிட்டோ அல்லது முந்தைய பில் தொகை மட்டுமே செலுத்துமாறு கூறுவதை ஏற்க முடியாது. 

மின்பயன்பாட்டுக்கான கட்டணத்தை மீட்டரில் பதிவான யூனிட்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும். அந்த கட்டணத்தையும் ஜூன் மாதத்துக்குப் பிறகு தவணை அடிப்படையில் வசூலித்தால் மட்டுமே சிறு, குறு தொழில்கள் மீண்டும் இயங்க முடியும்.  மாநிலப் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் உரிய தீர்வை காண வேண்டும் என்கிறார் பெல்சியா தலைவரும்,  தமிழ்நாடு பாய்லர்ஸ் அசோசியேஷன் பொருளாளருமான ராஜப்பா ராஜ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.