வண்ண வண்ண ஆடைகளில், மக்களை ஈர்க்கும் விதமாக அலங்கரிக்கப் போடப்படும் விதவிதமான பிரிண்டிங், அதை டிசைன் செய்ய சிஸ்டம் ஆபரேட்டர்கள், டிசைனர்கள், இதிலும் டிஜிட்டல் பிரிண்டிங், கையால் செய்யும் பிரிண்டிங், இயந்திரங்களை சரி செய்யும் மெக்கானிக்குகள், ஆயில் ஸ்டோர், வாகன தொழில், போக்குவரத்து என இன்னும் பல வகையில் பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
பின்னலாடைத் தொழில் கடந்த 15 ஆண்டுகளாகப் படிப்படியாக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் தவிர பல குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால், பல மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு குடும்பத்துடன் வந்து தங்கி வேலைபார்த்து வந்த மக்கள் அன்றாடத் தேவைக்கே கஷ்டப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.