சூடுபிடிக்கும் "அடகு நகை மீட்பு' வியாபாரம்!
வங்கிகள் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்படும் தங்க நகைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் மீட்காவிட்டால் அவை ஏலத்துக்கு சென்றுவிடும்.


வங்கிகள் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்படும் தங்க நகைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் மீட்காவிட்டால் அவை ஏலத்துக்கு சென்றுவிடும். அவ்வாறு ஏலத்துக்கு செல்லும் நகைகளை மீட்டு அதை கொள்முதல் செய்ய இப்போது தமிழ்நாடு முழுவதும் முகவர்கள் பெருகி வருகின்றனர். அது ஒரு பெரும் தொழிலாகவும் மாறி வருகிறது.
நகர்ப்புறங்களில் இலைமறை காயாக நடைபெற்று வந்த இந்த தொழில் இப்போது, பெரிய மற்றும் சிறிய நகரங்களின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சுவரொட்டிகளில் ""அடகு வைத்துள்ள தங்க நகைகளை மீட்டு நல்ல விலைக்கு விற்றுத் தருகிறோம்'' என்ற வகையிலான வாசகத்துடன் ஒன்றிரண்டு செல்போன் எண்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அந்த எண்களில் தொடர்பு கொண்டால், ஒரு நபர் பணத்துடன் வருவார். அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைக்கான அசல் மற்றும் வட்டியை அவற்றின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாசலில் நிற்பார். உரிமையாளர் பணத்தை செலுத்தி நகையை மீட்டுக் கொண்டு வந்ததும் அதை பெற்றுக் கொண்டு நகையின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து அதை கொள்முதல் செய்து கொள்வார். அடகு நகையை மீட்க அவர் கொடுத்த பணம்போக மீதித் தொகையை உரிமையாளரிடம் அளித்து விடுவார். கமிஷன் எதுவும் கிடையாது.
இந்த வர்த்தகம் ஒரு பெரிய வலைப் பின்னலுடன் நடைபெற்று வருகிறது. பொதுவாக வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வோர் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஆனால், இந்த அடகு நகை வர்த்தகத்தில் சிக்கல் எதுவும் இல்லை என்பதால் பல பெரும்புள்ளிகள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் நிதித் தொழில் செய்வோர் நேரடியாகவோ அல்லது முகவர்களை வைத்துக் கொண்டோ இந்த அடகு நகை கொள்முதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக நிதித்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தொழில் செழிப்புக்கு காரணம் என்ன?
அடகு நகைகளை மீட்டு கொள்முதல் செய்யும் தொழில் செழிப்புக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது, வங்கிகள் நகைகளை ஏலம்விடும்போது அவற்றின் அன்றைய சந்தை மதிப்பில் அதிகபட்சம் 80 சதவீத விலை மட்டுமே கிடைக்கும். இரண்டாவது முக்கிய காரணம், வெளிநபர்கள் ஏலத்தில் பங்கேற்று நகைகளை அதிக விலைக்கு ஏலம் கேட்க முடியாது. நகைகளை ஏலம் எடுக்கும் தொழில் முறையிலானவர்கள் "சிண்டிகேட்' அமைத்துக் கொண்டு செயல்படுவதே இதற்கு காரணம். அதற்கு சில வங்கி அதிகாரிகள் துணை போவதும் உண்டு. தனியார் நிதி நிறுவனங்களில் அவர்களே வேற்று ஆள்களை ஏலத்தில் பங்கேற்க வைத்து நகைகளை குறைந்த தொகைக்கு ஏலம் கேட்டு எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் நகை உரிமையாளர்களுக்கு நஷ்டமே மிஞ்சும்.
அடகு நகைகளை கொள்முதல் செய்வோர் சாதாரண தங்க நகையாக இருந்தால் அதிகபட்சம் கிராமுக்கு ரூ. 2,600 வரையும், 916 (91.6 சதவீத சுத்த தங்கம்) நகை என்றால் கிராமுக்கு ரூ. 2,900 வரையிலும் கொடுக்கின்றனர். இது வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் ஏலத்தில் கிடைப்பதைவிட 10 முதல் 20 சதவீதம் கூடுதல் ஆகும். எனவே, நகைகளின் உரிமையாளர்கள் இவர்களை நாடுகின்றனர்.
வங்கிகளில் ஏலத்துக்கு வரும் நிலையில் உள்ள நகைகளின் உரிமையாளர்களை அடகு நகை கொள்முதல் செய்வோர் அடையாளம் கண்டு, நேரில் சந்தித்துப் பேசியும் வர்த்தகம் செய்து வருகின்றனர். அதற்கு சில வங்கி அதிகாரிகள் "உதவி' செய்கின்றனர். நகைகளை ஏலம்விடுவதில் உள்ள நடைமுறைகளால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க சிலர் இதை செய்வதாக வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சுழற்சி முறை வர்த்தகம்
தமிழ்நாட்டில் தங்க நகைகளுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களில் கேரளத்தை தலைமையிடமாக கொண்டுள்ள நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. அடகு நகைகளை மீட்டு கொள்முதல் செய்வோரும், ஏலத்தில் நகைகளை கொள்முதல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்களும் அந்த தங்கத்தை கேரளத்து நகைத் தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. அவை நவீன வடிவ நகைகளாக மறுரூபமாக்கப்பட்டு மீண்டும் தமிழ்நாட்டு சந்தைக்கே விற்பனைக்கு வருகின்றன. கேரள நிறுவனங்களின் இந்த சுழற்சி முறை வர்த்தகத்தின் மையப்புள்ளியாக தமிழ்நாடு இருக்கிறது என்கிறார்கள் வங்கியாளர்கள்.
தேவை - வங்கிகளின் கரிசனம்
வங்கிகளில் தங்க நகைகளை "விவசாயக் கடன்' பெயரில் அடகு வைத்தால் அதற்கு 7% வட்டி. இதில் 3 சதவீத வட்டியை மத்திய அரசு மானியமாக வழங்கும். எஞ்சிய 4% வட்டியை மட்டுமே அடகு வைத்தவர் செலுத்த வேண்டும். ஆனால், வங்கிகளில் இந்த 4% வட்டி விகிதத்தில் எல்லோருக்கும் கடன் கிடைத்துவிடாது. அதற்கு சிபாரிசு தேவை. இல்லையென்றால் 9.6% முதல் 11.80% வரையிலான வட்டிக்குதான் வங்கிகளில் நகைக் கடன் கிடைக்கும். அதுவும் தேவையான நேரத்தில் கிடைப்பது அரிது.
வங்கிகளின் இந்த மந்த நிலையை தனியார் நிதி நிறுவனங்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. தனியார் நிதி நிறுவனங்களில் கூடுதல் வட்டி என்றாலும் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கையாளும் முறையால் கடன் பெற விரும்புவோர் அவற்றை நாடிச் செல்கின்றனர். ""100 ரூபாய்க்கு மாதத்துக்கு 1 ரூபாய் மட்டுமே வட்டி'' என்ற விளம்பரத்தை கேட்போரில் அது 12% வட்டி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? மேலும், தனியார் நிதி நிறுவனங்கள் 5 அல்லது 10 நிமிடங்களில் பணத்தை கொடுத்துவிடுவதாக பரப்புரை செய்து மக்களை ஈர்க்கின்றனர். எனவே, வங்கிகள் குறைந்த வட்டியில், விரைவாக கடனுதவிகளை வழங்கினால் தனியார் நிதி நிறுவனங்களின் சுரண்டலை தடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...