வேலையில்லாத் திண்டாட்டம் என்ற நிலை மாறி, திறமையான வேலையாள்கள் இல்லாததால் உற்பத்தித் தொழில் துறை திண்டாட்டம் என்று கூறும் அளவுக்கு கோவையில் திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
ஒருகாலத்தில், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்தால் போதும், கோவைக்கோ திருப்பூருக்கோ சென்றால் ஏதாவது வேலை தேடி பிழைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெற்றோர்களின் மனநிலையாக இருந்தது.
ஆனால், நிச்சயமான வேலைவாய்ப்பு, அதிகபட்ச ஊதியம், தங்கும் வசதி, உணவு, வார விடுமுறை என கேட்கும் எந்த சலுகையைக் கொடுத்தாலும் வேலைக்குப் போதிய திறனுள்ள பணியாளர்கள் கிடைப்பதில்லை என்கின்றனர் கோவை, திருப்பூர் தொழில் முனைவோர்கள்.
இந்த இரு மாவட்டங்களிலும் கோலோச்சி வந்த தொழில்கள், திறனுள்ள பணியாளர் பற்றாக்குறையினாலேயே தற்போது அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜவுளித் துறையில் நாட்டிலேயே முன்னணியில் உள்ள கோவை மண்டலத்தில் நிரந்தர தொழிலாளர்கள், திறனுள்ள தொழிலாளர்கள் என்ற நிலைமை மாறி ஆண்டுகள் பலவாகின்றன. அதேபோல முழுக்க உள்ளூர் தொழிலாளர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்த ஆலைகள், தற்போது ஏறத்தாழ முழுவதுமே வட மாநிலத் தொழிலாளர்களால் மட்டும் செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கோவை மண்டலத்தில் ஜவுளித் தொழில் இன்று வரை நிலைத்திருப்பதற்கு வட மாநிலத் தொழிலாளர்களே முக்கிய காரணம் என்கிறார் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் எஸ்.கே.ரங்கராஜன்.
திறனுள்ள தொழிலாளர்கள் என்ற வார்த்தையை ஜவுளித் தொழில் துறையினர் மறந்து நாள்கள் பலவாயிற்று. நூற்பாலைகளில் ஒரு தொழிலாளர் அதிகபட்சம் 5 பக்கம் இயந்திரங்களை கவனித்துக் கொண்ட காலம் போய், தற்போது ஒருவரை இருபக்கம் பார்ப்பதே பெரியதாக உள்ளது.
உள்ளூர் தொழிலாளர்கள் தற்போது இந்தத் தொழிலுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் இரவுப் பணி பார்ப்பதில்லை. இதனால் வட மாநிலத் தொழிலாளர்களை நம்பியே ஆலைகள் இயங்குகின்றன. அவர்களுக்குப் போதுமான திறன் இருப்பதில்லை.
இயந்திரங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மட்டுமே பல மாதங்களுக்கு வழங்குகிறோம். பின்னர், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிற்சியாளர்களை வரவழைத்து அந்தத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்கச் செய்கிறோம்.
கேட்கும் அளவுக்கு ஊதியம், தங்கும் இடம், உணவு, ஊருக்குச் சென்று வர பணம் என்று பல திட்டங்களை செயல்படுத்தினாலும் பலன் கிடைப்பதில்லை. வெகு விரைவில் நூற்பாலைகள் எல்லாம் 3 ஷிப்ட் என்பது மாறி, என்ஜினீயரிங் தொழிற்சாலைகளைப் போன்று பகல் நேரத்தில் ஒரு ஷிப்ட் மட்டுமே செயல்படக் கூடிய நிலை வரலாம்.
தொழிற்சாலைகளை இயந்திரமயமாக்குவதுதான் தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். ஆனால், இயந்திர மயமாக்குவதற்குப் பல நூறு கோடி ரூபாய் தேவைப்படும். இங்குள்ள ஆலைகளால் அது தற்போதைக்கு சாத்தியமில்லை.
ஜவுளித் துறையில் "ஏ, பி, சி' என்று என்று ஆமதாபாத், பம்பாய், கோவையை அழைப்பாளர்கள். இதேபோன்ற பிரச்னையால்தான் ஏ, பி நகரங்களில் இந்தத் தொழில் நலிவடைந்தது. தற்போது அது கோவையையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் ரங்கராஜன்.