ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இனயம் துறைமுகம்

பல ஆண்டுகளாக குளச்சல் துறைமுகத் திட்டம் பேசப்பட்டு வந்த நிலையில், இப்போது குளச்சல் அருகே உள்ள இனயத்தில் வர்த்தகத் துறைமுகம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:28 am

சிவ. மணிகண்டன்

பல ஆண்டுகளாக குளச்சல் துறைமுகத் திட்டம் பேசப்பட்டு வந்த நிலையில், இப்போது குளச்சல் அருகே உள்ள இனயத்தில் வர்த்தகத் துறைமுகம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே இனயத்தில் ரூ. 27 ஆயிரத்து 570 கோடியில் அமையும் இந்த வர்த்தகத் துறைமுகம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் என்று தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சரக்குப் பெட்டகங்களுடன் வரும் பெரிய கப்பல்களைக் கையாளக் கூடிய பெரிய துறைமுகங்கள் இந்தியாவில் இல்லாத சூழலில், இனயம் வர்த்தகத் துறைமுகம் ஏற்றுமதி - இறக்குமதியை பெருமளவு உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை இணைக்கும் சர்வதேச கடல்வழித் தடத்தில் இருந்து 14 கடல் மைல் (சுமார் 26 கி.மீ.) தொலைவில் இனயம் துறைமுகம் அமையவுள்ளது. தற்போது, இந்தியாவுக்கு வரக்கூடிய அல்லது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய சரக்குப் பெட்டகங்கள் சிறிய கப்பல்களில் கொழும்பு துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பெரிய கப்பல்களில் அனுப்பப்படுகின்றன. இதனால் ஏற்படும் செலவு, இனயம் துறைமுகம் அமைவதால் பெருமளவு குறைவதோடு, தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும்.
சரக்குகளை கொழும்பு கொண்டு சென்று மாற்றி அனுப்புவதால் மட்டும் இந்தியத் துறைமுகங்களுக்கு ரூ. 1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இனயம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், இந்த பிரச்னை இருக்காது.
இனயம் வர்த்தகத் துறைமுகம் அறிவிக்கப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி வஉசி துறைமுகப் பொறுப்புக் கழகம், இனயம் வர்த்தகத் துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனமாகச் செயல்படுகிறது. இதற்கிடையே, இனயம் துறைமுகத் திட்டத்தால் அந்தப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று இந்தத் திட்டத்துக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Story image


இனயம் துறைமுகத் திட்டம் குறித்து வ.உ.சி. துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் எஸ். ஆனந்த சந்திரபோஸ் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குப் பெட்டகங்கள் கொழும்பு, சிங்கப்பூர், கெலாங் துறைமுகங்கள் வழியாகவே அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்தச் சரக்குப் பெட்டகங்களில் பெரும் பகுதி தென்னிந்தியாவில் இருந்து செல்பவை. இந்தியாவில் இதுவரை 16 மீட்டர் ஆழமுள்ள சரக்குப் பெட்டகக் கப்பல்களைக் கையாளும் நவீன துறைமுகங்கள் இல்லை. இதனால், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் சரக்குப் பெட்டகங்கள் கொழும்பு சென்று, அங்கிருந்து சிறிய கப்பல்களில் இந்தியத் துறைமுகங்களுக்கு வருகின்றன. இனயம் துறைமுகம் அமையும் நிலையில், நமது சரக்குப் பெட்டகங்கள் அங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளின் துறைமுகங்களுக்கும் நேரடியாகச் செல்லும் நிலை உருவாகும்.
ஏற்கெனவே தூத்துக்குடி, விழிஞ்ஞம், வல்லார்பாடம் துறைமுகங்கள் இருப்பதால், புதிதாக பெரும் செலவில் இனயம் துறைமுகம் தேவையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், உலக அளவில் பல நாடுகளில் பெரிய துறைமுகங்கள் அருகருகே வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. மேலும், அருகருகே துறைமுகங்கள் அமைவது கூட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்.
துறைமுகம் பகுதி மற்றும் சரக்குகள் கொண்டு செல்வதற்கான சாலை, ரயில் வழித்தடங்கள் அமையும்போது, பொதுமக்களின் சொத்துகளுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
சாலை, ரயில் வழித்தடங்களுக்கு 200 ஏக்கர் நிலம் மட்டுமே தேவை. இனயம் பகுதியைச் சேர்ந்த 400 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

3 கட்டங்களாக உருவாகும் துறைமுகம்


இனயம் துறைமுகத் திட்டத்தை 2017-இல் தொடங்கி, 2030-ஆம் ஆண்டுக்குள் 3 கட்டங்களாக நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருக்கிறது. துறைமுகத்துக்கென தனிச் சாலை, ரயில் வசதி ஏற்படுத்தப்படுகிறது. முதல் கட்டப் பணிகளை 2017 முதல் 2020-க்குள் ரூ. 6,575 கோடியில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2.40 கோடி டன் சரக்குகளைக் கையாளும் வகையில் 2 சரக்குப் பெட்டக முனையங்கள் அமைக்கப்படும். இரண்டாம் கட்டமாக 2021-2025-இல் ரூ. 11,537 கோடியில் 5 சரக்குப் பெட்டக முனையங்கள், திடப் பொருள்கள் கையாளும் தளம் என மொத்தம் 6.36 கோடி டன் சரக்குகள் கையாளும் வசதி ஏற்படுத்தப்படும்.
மூன்றாம் கட்டமாக 2026-இல் தொடங்கி 2030-ஆம் ஆண்டில் முடியும் வகையில் ரூ. 9,458 கோடியில் திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 3 சரக்குப் பெட்டக முனையங்கள், திடப் பொருள் கையாளும் தளம் என 4 கோடி டன் சரக்குகள் கையாளும் வசதி ஏற்படுத்தப்படும்.
இனயம் துறைமுகத்துக்கு இப்போது தொழில்நுட்ப செயலாக்க அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் திட்ட அறிக்கையை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.