ஜவுளித் தொழில் பிரச்னைக்கு தீர்வாக நவீன தொழில்நுட்பங்கள்
சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வானளாவிய அளவுக்கு உயர்ந்தும், பாதாள அளவுக்கு இறங்கும் பருத்தி விலையினால் அதைச் சார்ந்த தொழில்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வானளாவிய அளவுக்கு உயர்ந்தும், பாதாள அளவுக்கு இறங்கும் பருத்தி விலையினால் அதைச் சார்ந்த தொழில்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில கொள்கை மாற்றங்களை சேர்த்துப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்கின்றனர் ஜவுளித் தொழில் முனைவோர் அமைப்புகள்.
இந்தியாவில் சுமார் 1,300 சிறு, குறு பஞ்சாலைகள் உள்ளிட்ட மொத்தம் 3,100 பஞ்சாலைகள் உள்ளன. இதில் 47 சதவீத ஆலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. தமிழ்நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்துக்கு அடித்தளமாக இந்த நூற்பாலைகள் உள்ளன. ஜவுளித் துறையின் அடிப்படையாகக் கருதப்படும் நூல் தயாரிப்பில், நூலின் உற்பத்தி விலையில் 65 முதல் 68% வரையிலும் மூலப்பொருளான பஞ்சுக்கே செலவிடப்படுகிறது.
பஞ்சு வர்த்தகம் உலகமயமாக்கப்பட்ட பிறகு, அடிக்கடி ஏறி, இறங்கும் பஞ்சு விலைக்கு ஏற்ப ஆலைகள் அவ்வப்போது நெருக்கடி நிலையை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. கடந்த 2010-11நிதி ஆண்டில் ஏற்பட்ட கடுமையான ஏற்ற, இறக்கத்தால், நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாலைகள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்தன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) சராசரி அளவுள்ள பஞ்சு சுமார் ரூ.33 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த நிலையில், கடந்த வாரத்தில் ரூ.46 ஆயிரமாக விலை அதிகரித்தது. நடப்பு வாரத்தில் இது மேலும் அதிகரித்து விற்பனை விலை ரூ.48,500 ஆக உள்ளது. போக்குவரத்து செலவுகளை சேர்த்தால் ஒரு கேண்டி பஞ்சின் விலை ரூ.50,500 ஆகும். விலை நிலவரத்தை உற்று நோக்கினால், கடந்த ஜூலை 3-வது வாரத்தில் எட்டிய உச்சபட்ச விலையை (ரூ.51 ஆயிரம்) ஓரிரு நாள்களில் விஞ்சும் நிலை இருப்பது தெரிய வருகிறது.
இதனால் நூற்பாலைகள், விசைத்தறிகள், ஆட்டோலூம், நிட்டிங், பிராசஸிங், கார்மெண்ட்ஸ், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தித் துறையின் கட்டமைப்பில் உள்ள அனைவரும் வேலையிழப்பு, வருவாய் இழப்பு, திடீர் நஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தத் தொழில்களின் ஒவ்வொரு படிநிலையிலும் பல லட்சம் தொழிலாளர்கள் உள்ள நிலையில், பருத்தி விலையில் ஏற்பட்டுள்ள இந்த உச்சகட்ட உயர்வு அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. ஒவ்வொரு முறை விலை உயர்வின்போதும் இது தொடர்பாக தீவிரமாக விவாதிக்கும் ஆலை உரிமையாளர்கள், விலை குறைந்ததும் அடுத்த பிரச்னையை நோக்கி கவனத்தை திருப்பிவிடுவதே இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாததற்கு காரணமாக கருதப்படுகிறது. ஆனால், தற்போது ஜவுளித் தொழில் அமைப்பினர் தொழில்நுட்ப உதவியுடன் இவ்விவகாரத்துக்கு தீர்வைத் தேடி வருகின்றனர்.
இந்த ஆண்டு இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) 8.50 லட்சம் பேல்கள் பருத்தியை மட்டுமே விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனர். அவற்றையும் சிசிஐ-யிடம் இருந்து ஏல முறையில் வியாபாரிகளே வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டுள்ளனர். எனவே, வரும் காலங்களில் நேரடியாக ஆலைகளுக்கு மட்டுமே பருத்தியை விற்க வேண்டும்.
அத்துடன் விவசாயிகளிடம் இருந்து பெரும் பகுதியை சிசிஐ கொள்முதல் செய்ய அதற்கு குறைந்த வட்டியில் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார் சைமா தலைவர் எம்.செந்தில்குமார்.
மேலும், ஆலைகளுக்கு சிசிஐ சிறு, சிறு அளவில் பருத்தியை விற்பனை செய்யவும், ஆலைகள் பருத்தி வாங்கியதற்கான கடனை திருப்பிச் செலுத்த உள்ள கால அவகாசத்தை 3 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் பிரச்னை தீரும் என்றார் அவர்.
பருத்தி கழகத்தின் பங்கு: விவசாயிகளிடம் இருந்து பருத்தி கழகம் கொள்முதல் செய்யும் ஆண்டுகளில் பருத்தி விலை உயருவதில்லை. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காத காலங்களில் மட்டுமே அவர்களிடம் பருத்தி கொள்முதல் செய்து வரும் சிசிஐ, இனி ஆண்டுதோறும் 30 சதவீத பருத்தியை கொள்முதல் செய்து, ஆண்டு முழுவதும் பஞ்சாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதனால் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவது தடுக்கப்படுவதுடன், சிசிஐ-க்கும் லாபம் கிடைக்கும். பஞ்சாலைகளும் அதைச் சார்ந்த தொழில்களும் தடையின்றி நடைபெறும்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பம்: தவறான தகவல்களைப் பரப்பி, ஊக வர்த்தக, முன்பேர வர்த்தகத்தை ஊக்கப்படுத்தி இடைத்தரகர்கள் லாபம் சம்பாதிக்கின்றனர். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் பருத்தி விளைச்சல் விவரங்களை சேகரித்து மாதாந்திர புள்ளிவிவர அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பருத்தி உற்பத்திப் பரப்பையும், விளைச்சலையும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விலை உயர்வு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் அவர்.
அறிவியல் ரீதியான புள்ளி விவர சேகரிப்பு
இந்தியாவில் அறிவியல் ரீதியான புள்ளிவிவர சேகரிப்பு முறைகள் இல்லை. விலை உயர்வு பிரச்னைக்கு நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிரந்தரத் தீர்வு காண்பது சாத்தியமானது என்கிறார் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பிரபு தாமோதரன். நாடு முழுவதிலும் உள்ள சுமார் 2,000 பஞ்சாலைகளிலும் நாளொன்றுக்கு எத்தனை பேல்கள் தயாராகின்றன என்ற விவரங்களை ஜவுளித் துறை ஆணையர் அலுவலகத்தில் சேகரிக்கும்படியாக ஏற்பாடு செய்தால், தேவையைக் கருத்தில் கொண்டு உற்பத்தியை திட்டமிட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...