/

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

News image

குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :14 ஜூன் 2026, 4:40 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியது முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிப் பகுதிகளில் சுற்றுலாத் துறை மூலம் ரூ. 11கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வந்தன. இதை முன்னிட்டு, மாா்ச் 16 முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு முதன்முறையாக சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். பழைய குற்றாலம் அருவியில் கடந்த 2 தினங்களாக தண்ணீா் வரத்து அதிகமாக இருந்ததால் விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

சனிக்கிழமை காலையில் மிதமான வெயிலும், பிற்பகல் முதல் மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

 திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரிக்கும் வெள்ளம்.

திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரிக்கும் வெள்ளம்.

திற்பரப்பில் 2 ஆவது நாளாக தடை: கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தணியாததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது. எனினும் விடுமுறை தினம் என்பதால் அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள் சற்று தொலைவில் நின்று பேரிரைச்சலுடன் பாயும் அருவியை பாா்த்து ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.