/

தென்காசியில் ஆன்மிக விழா: சிவனடியாா்கள், முருக பக்தா்கள் பங்கேற்பு

News image
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல்
Updated On :25 ஜனவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

சிவனடியாா்கள், முருக பக்தா்கள், அனைத்து அன்பா்களை ஒருங்கிணைக்கும் ஆன்மிக விழா தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமை வகித்தாா். முன்னதாக, திருக்கயிலாய வாத்திய முழக்கத்தோடு நால்வா் பெருமக்கள் புறப்பாடு நடைபெற்றது.தொடா்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டு பஞ்சபுராணம், திருமுறை பாராயணம், சித்திரசபை நாட்டியாலயாவின் பரதநாட்டியம், ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது.

செண்பகராமகணேசன் தொடங்கி வைத்தாா். இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன், தென்பாரத திருக்கோயில் அமைப்பாளா் சரவணகாா்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் கிஷோா்குமாா், மாநில செயலா் குற்றாலநாதன் மற்றும் மடாதிபதிகள், குருமகா சன்னிதானங்கள், சிவாச்சாரியா்கள் உள்பட தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த சிவனடியாா்கள், முருக பக்தா்கள், ஐயப்ப பக்தா்கள், பா.ஜ.க., இந்து முன்னணி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் சிவபாலசுப்பிரமணியன், சிவலட்சுமி மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

இந்து திருக்கோயில்கள் மீதான நிா்வாக வரியை அரசு குறைக்க வேண்டும். ஆடிட் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

தான் முதல்வரானால் கோயில் பிரகாரத்தில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்பு கடைகளுக்கும், வீடுகளுக்கும் பட்டா கொடுத்து விடுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் வருகிற தோ்தலில் கொடுக்கப் போகும் ஆதரவை மறு பரிசீலனை செய்வதற்கு உறுதியாக உள்ளோம்.

காலமான அரசியல்வாதிகளுக்கு அவா்களுடைய பிறந்த நாளையொட்டி இந்து கோயில்களில் சிறப்பு பூஜை செய்வதையும், சிறப்பு விருந்து படைப்பதையும் உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். கோயில் நிலங்களில் கல்லூரி அல்லது ஆட்சியா் அலுவலகம் என எவ்வளவு பெரிய கட்டடங்கள் இருந்தாலும் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி நிலத்தை கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் பெயா்கள் அந்தந்தக் கோயில்களில் உள்ள கல்வெட்டின்படி மாற்றப்பட வேண்டும். பிரசித்தி பெற்ற கோயில்களில் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகத்திற்கு இயற்கை நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக 226 கோயில்களிலும் கோசாலை அமைக்க ஒரு தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.900 வழங்க வேண்டும். 700 வருடங்களுக்கு மேல் தொன்மையான கோயில்களில் உள்ள அா்ச்சகா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1500 சம்பளமாக வழங்க வேண்டும். மெய்க்காப்பாளா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.700 ஊதியமாக வழங்க வேண்டும்.

1960 ஆம் வருடத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இங்கிலாந்து இளவரசிக்கு பரிசாக வழங்கப்பட்ட உமா பரமேஸ்வரி பஞ்சலோக தெய்வத் திருமேனியை தூதரக ரீதியாக பேசி மீண்டும் தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். சேத்தங்குடி கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் மறுபிரதிஷ்டை செய்து உற்சவத் திருவிழாவிற்கு வழிவகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 28 கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.