தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கோடை காலம் வந்தாலே தமிழகத்தின் மின்தேவை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்தது. பகல் நேரங்களில் வீட்டு மின் உபயோகம் அதிகரிக்கும். அதேநேரம், தொழிற்சாலைகளின் மின் உபயோகமும் கூடுதலாகும். அதிமுக ஆட்சிக் காலங்களில், ஆண்டுதோறும் கோடைகால மின் தேவையைச் சமாளிக்க முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
2011-ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, தமிழகம் முழுவதும் தினமும் 10 மணி நேரத்துக்குமேல் மின்வெட்டு என்ற கடுமையான நிலைமையை இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே மாற்றி, கழக ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது.
மேலும், கோடை காலத்தில் கூடுதல் மின்தேவை ஏற்படுவதை கணக்கிட்டு காற்றாலை, சோலார் மற்றும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவர்களின் மேம்போக்கான மற்றும் உறுதியற்ற நடவடிக்கைகளால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்படுள்ளது. இரவு நேரங்கள் மக்களுக்கு தூங்கா இரவுகளாக மாறியுள்ளது கொடுமையான ஒன்றாகும்! பகல் நேர மின் வெட்டால் சமையல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்களின் தினசரி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாத மின்வெட்டை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மக்கள் மின்சார அலுவலகத்தை முற்றுக்கையிடுவதையும், சாலைகளில் போராடுவதையும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன. சென்னை புறநகர்ப் பகுதிகளில் இரவில் பலமுறை மின் வெட்டு ஏற்படுவதாகவும், குறிப்பாக சென்னை தண்டையார்பேட்டையில் இரண்டாவது நாளாக இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் புறநகர்ப் பகுதிகளில் சாலையில் இறங்கி போராடுவதாகச் செய்திகள் வருகின்றன.
இந்த அரசின் அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு வணிகர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பொருளாதார பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, ‘இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்' என்று சாக்கு போக்கு சொல்லாமல் மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
Summary
ADMK Leader Edappadi Palanisami urges State Government to take action on Power Cuts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோட்-சூட்-போட்டோஷூட் மாடல் ஆட்சி: சிறுவன் பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

எம்எல்ஏ- வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி! | EPS |







