தமிழ் செய்திகள்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகக் கூறிய சி.வி. சண்முகம் தரப்பு அணியினரை முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், அனைத்துக் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். தனக்கு ஆதரவளித்த கட்சியின் தலைவர்களைச் சந்தித்து நன்றியும் தெரிவித்து வருகிறார்.
இன்று ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் அலுவலகம், தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் சென்ற விஜய், அதன்பின்னர் அதிமுகவில் இருந்து விலகிய சி.வி. சண்முகம் அலுவலகத்திற்குச் சென்றார்.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்திற்குச் சென்ற விஜய்யை, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலால் அதிமுக பிளவுபட்டுள்ளது. சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும் எஸ்.பி. வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளனர். அதிமுக எதிர்ப்பு சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் விஜய்யுடன் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
CM vijay meets admk rebel CV shanmugam team in chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









