ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குதிரை பேரம் என்றால் என்ன?

குதிரை பேரம் என்பது பற்றியும் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றியும்...

TVK vijay with TN governor

ஆளுநர் ஆர்லேகருடன் தவெக தலைவர் விஜய். - ENS

Published On :12 மே 2026, 3:24 pm IST

அரசியலில் நிச்சயமற்ற சூழல் ஏற்படும்போது, அதாவது தேர்தல் முடிந்து ஒரு கட்சி ஆட்சியமைக்க முற்படும்போதோ அல்லது ஒரு ஆட்சியைக் கவிழ்க்க எதிர்த்தரப்பு முயற்சிக்கும்போதோ மக்கள் பிரதிநிதிகளை 'விலைக்கு வாங்குவதே' 'குதிரை பேரம்' என்பதாகக் கூறப்படுகிறது.

குதிரை பேரம் என்பது என்ன?

முந்தைய காலத்தில் போக்குவரத்து, போர் எனப் பல்வேறு விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டவை குதிரைகள்தான். அதனால் குதிரைகள் விலைமதிப்பு மிக்கவை. இந்த குதிரைகளைச் சந்தைகளில் விற்கும்போது விலை நிர்ணயம் செய்ய, வாங்குபவருக்கு விற்பவருக்கும் இடையே விலை பேரம் பேசப்படும்.

அதேபோல குதிரையை விற்பவர்கள் இந்த குதிரை வர்த்தகத்தில் கைதேர்ந்தவர்கள். கழுதையைக்கூட குதிரை என்று சொல்லி விற்றுவிடும் அளவுக்கு இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இது மற்றொரு தரப்பில் 'ஏமாற்று வேலை' என்றும் கூறப்படுகிறது.

அதுபோல அரசியலில் நிச்சயமற்ற நிலை ஏற்படும்போது, ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, அல்லது ஒரு கட்சியை வீழ்த்த நினைக்கும்போது, தனக்கு ஆதரவாக, எதிர்த் தரப்பில் உள்ள எம்எல்ஏக்கள் அல்லது எம்பிக்களை விலைபேசி வாங்குவதே 'குதிரை பேரம்' என்று சொல்லப்படுகிறது.

இதற்காக விலைபோகும் எம்எல்ஏக்களுக்கு அவர்கள் பணமோ அல்லது பதவியோ அல்லது வேறு ஏதேனும் பலன்களை வழங்குவதாகக் கூறலாம். அந்த எம்எல்ஏக்களும் இதற்கு இணங்கி ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குச் சென்றோ அல்லது வேறு ஏதோவொரு வகையிலே ஆட்சியமைக்க அல்லது ஆட்சியைக் கவிழ்க்க ஆதரவு தெரிவிக்கலாம்.

இது மக்களின் வாக்குகளை விலை பேசி வாங்குவது என்பதால் சட்டத்திற்குப் புறம்பானது. புகார்கள், ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட கட்சியின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம்.

விலை கொடுத்து மக்கள் பிரதிநிதிகளை வாங்கியிருப்பதாகக் கருதினால், குறிப்பிட்ட கட்சியின் பதவிப் பிரமாணத்தை ஆளுநர் தள்ளிவைக்கலாம். எம்எல்ஏக்கள் சிலர் புகார் அளிக்கும்பட்சத்தில் அதிகபட்சமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு ஆளுநரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

எப்போது உருவானது?

இந்தியாவில் 1960-க்கு மத்தியில் இந்த "குதிரை பேரம்" என்ற சொல் அறிமுகமானதாகக் கருதப்படுகிறது.

1967-ல் ஹரியாணா மாநில எம்எல்ஏ கயா லால் என்பவர் வெறும் 15 நாள்களுக்குள்ளேயே 3 முறை கட்சி மாறினார். அப்போதுதான் குதிரை பேரம் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது (ஆயா ராம் காயா ராம் என்றொரு சொல்லாடலே உண்டு. ஒருவர் நினைத்தால் திடீரென ஒரு கட்சிக்கு வருவார் - ஆயா ராம்; பின்னர், திடீரென வெளியேறுவார் - காயா ராம் என்பதுதான் பொருள்).

1970-களில் குதிரை பேரம் தீவிரமடைந்த நிலையில் 1970 - 1974 -க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 1,900 -க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்கள் கட்சிகளில் இருந்து வேறொரு கட்சிக்குத் தாவியதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் தொங்கு சட்டப்பேரவை உருவாகும்போது குதிரை பேரங்கள் நடக்கின்றன. 2019-ல் கர்நாடகம், 2020-ல் மகாராஷ்டிரத்தில் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.

கட்சித் தாவல் தடைச் சட்டம்

இந்தியாவில் குதிரை பேரத்தைத் தடுக்க, 1985 ஆம் ஆண்டில் 52 ஆவது சட்டத் திருத்தம் மூலமாக கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அரசியலமைப்பின் 10 ஆவது அட்டவணையில் உள்ளது.

ஒரு கட்சியின் உறுப்பினர் தனது கட்சிக்குப் புறம்பாக வேறொரு கட்சியில் இணைந்தாலோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டாலோ, தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்தாலோ, தனது கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ பதவியை இழக்க நேரிடும்.

அதுநேரத்தில், ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பிரிந்து வேறொரு கட்சிக்குச் சென்றால் இது கட்சித் தாவலாக கருதப்படாது. இதன் மூலமாகவும் குதிரை பேரம் நடக்கிறது.

குதிரை பேரம் நடப்பதாக எம்எல்ஏக்கள் புகார் அளித்தாலோ அல்லது அதற்கு ஆதாரங்கள் இருந்தாலோ ஆளுநர் அல்லது சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் குதிரை பேரம்?

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவைக் கோரியது. அதன்படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மேலும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில் விசிகவின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இதனிடையேதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. தவெக தலைவர் விஜய், ஆளுநருக்கு அளித்துள்ள கடிதத்தில் அமமுக எம்எல்ஏ ஒருவரையும் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், எம்எல்ஏ காமராஜ் அளித்த கடிதம் போலியானது, தவெக குதிரை பேரம் செய்கிறது, அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

எம்எல்ஏ காமராஜும் தனது ஆதரவுக் கடிதத்தை மறுத்துள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரனும் எம்எல்ஏ காமராஜும் ஆளுநரிடம் நேரடியாகச் சென்று முறையிட்டுள்ளனர். காவல்துறையில் இதுதொடர்பாக டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் அளித்த கடிதம் போலியானது என்றால் அந்த கட்சியின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. குதிரை பேரம் நடப்பதாக மேலும் புகார்கள் எழுந்தால் தவெகவை ஆட்சியமைக்க அழைப்பதை ஆளுநர் தள்ளிப்போடலாம்.

தமிழ்நாடு இத்தனை ஆண்டுகளில் இத்தகைய குதிரை பேரத்தைப் பார்க்கவில்லை என திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்று விமர்சங்கள் எழுந்த நிலையில், 'நிலையான அரசு அமைய வேண்டும், குதிரை பேரத்திற்கு வழிவகுத்துவிடக் கூடாது' என்பதற்காகவே 118 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை கேட்டுள்ளதாக ஆளுநர் கூறியிருந்தார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி கட்சி, பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்து வரும் நிலையில் முதல்முறையாக தொங்கு சட்டப்பேரவை உருவாகி குதிரை பேரம் நடக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மீதான டிடிவி தினகரனின் புகாரும் தவெகவுக்கு ஆட்சியமைக்க இன்னும் போதிய எம்எல்ஏக்கள் கிடைக்காததும் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் தமிழகத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழலில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

Summary

What is horse trading, Is TVK engaging in horse trading in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.