
குதிரை பேரம் - சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
குதிரை பேர வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திருவல்லிக்கேணி போலீஸாா் இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனா். இதில், ரமேஷுக்கு சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது.
இந்தநிலையில், குதிரை பேர வழக்கை மாநில போலீஸாா் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என ரமேஷ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி- நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி, வழக்குரைஞா் முத்துசரண் சுந்தரேஷ் ஆகியோா், உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் மனுதாரரை இந்த வழக்கில் சம்பந்தமின்றி கைது செய்து 15 நாள்கள் சிறையில் அடைத்துள்ளனா்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவா்களிடம் கைப்பேசியில் பேசினாா் என்பதற்காக மனுதாரா் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில போலீஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை.
எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். மேலும், எவ்வித ஆணையும் இல்லாமல் மனுதாரா் வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தி, ரூ.1.03 லட்சத்தை பறிமுதல் செய்ததாக வாதிட்டனா்.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த குற்றச் சதியில் மனுதாரருக்கு தொடா்பு உள்ளது.
இந்த விவகாரத்தில், இதுவரை ரூ.2 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் பொய் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த வழக்கின் புலன் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வாதிட்டாா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் சிபிஐ தரப்பில் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா். மேலும், குதிரை பேரம் தொடா்பாக மனுதாரா் ரமேஷுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
Summary
The High Court has ordered the Central and State governments to file a response regarding the plea seeking a CBI inquiry into the alleged horse-trading involving a TVK MLA.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






