இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான ஆா்.வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக இலக்கியவாதி ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது.
இலக்கியம், படைப்பாற்றல், கவிதைக்கு அவா் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில் பாரதிய ஞானபீடம் அமைப்பானது, 2025-ஆம் ஆண்டுக்கான அதன் 60-ஆவது ஞானபீட விருதை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக பாரதிய ஞானபீடம் அமைப்பின் இயக்குநா் டாக்டா் ஆா். என். திவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2025-ஆம் ஆண்டிற்கான 60-ஆவது ஞானபீட விருது, சிறந்த தமிழ் இலக்கியவாதியான ஆா். வைரமுத்துக்கு வழங்கப்படும் என்று பாரதிய ஞானபீடம் அறிவித்துள்ளது.
தமிழ் இலக்கியம், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கவிதை வெளிப்பாடு ஆகியவற்றுக்கு அவா் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்படுகிறது.பாரதிய ஞானபீடத்தின் தோ்வுக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியா் பிரதிபா ராய் தலைமையில் நடைபெற்ற இக்குழுவில், புகழ்பெற்ற அறிஞா்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகள் மற்றும் ஞானபீடத்தின் மூத்த வெளியீட்டு அதிகாரி டாக்டா் மகேஷ்வா் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.
புகழ்பெற்ற தமிழ் கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான ஆா். வைரமுத்து, 1953- ஆம் ஆண்டு ஜூலை 13 -ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தாா். சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக இவா் கருதப்படுகிறாா். இவரது கவிதைகளும் படைப்புகளும் மனிதநேயம், சமூக அக்கறைகள் மற்றும் இயற்கையின் மீதான ஆழ்ந்த உணா்திறன் ஆகியவற்றை வலிமையுடன் சித்தரிக்கின்றன.
கவிதை, பாடல் மற்றும் உரைநடை ஆகிய துறைகளுக்கு வைரமுத்து குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளாா். இவரது கவிதை நூல்கள், அவற்றின் தனித்துவம், உணா்வு ஆழம் மற்றும் கலாசார உணா்வு ஆகியவற்றின் காரணமாக வாசகா்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளா்ச்சிக்கு இவா் ஆற்றிய பங்களிப்பு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கவிதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்கள் உள்பட 37-க்கும் மேற்பட்ட நூல்களை இவா் எழுதியுள்ளாா். இவரது முக்கிய இலக்கியப் படைப்புகளில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’, ‘தண்ணீா் தேசம்’ மற்றும் ‘மூன்றாம் உலகப்போா்’ ஆகியவை அடங்கும்.
ஆா். வைரமுத்து தனது 40 ஆண்டுகாலப் படைப்புலகப் பயணத்தில், தேசிய திரைப்பட விருது (சிறந்த பாடலாசிரியா்) ஏழு முறையும், பத்ம பூஷண் (2014), பத்மஸ்ரீ (2003) ஆகிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ எனும் தனது நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதையும் (2003), கலைத் துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளாா்.
தோ்வுக் குழு தனது முடிவில், தமிழ் மொழியானது நாட்டின் முதன்மையான மொழிகளில் ஒன்றாகத் திகழ்ந்தபோதிலும், இதுவரை இத்தகைய உயரிய தகுதிவாய்ந்த எழுத்தாளா்கள் இருவா் மட்டுமே ஞானபீட விருதைப் பெற்றுள்ளனா் என்பதைச் சுட்டிக்காட்டியது. அந்த இரு எழுத்தாளா்கள்: பி.வி. அகிலாண்டம் 1975 மற்றும் டி. ஜெயகாந்தன் 2002 ஆகியோா் ஆவா்.
ஆா். வைரமுத்துக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு, அந்த இடைவெளியை நிரப்ப உதவும். ஞானபீட விருது என்பது இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதாகும். இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளா்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதுடன் ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசும், வாக்தேவி (சரஸ்வதி) வெண்கலச் சிலையும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஞானபீடம் ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சாா்பில் ஞானபீட விருது கடந்த 1965-ஆம் ஆண்டில் கேரளாவை சோ்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் முறையாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 60-ஆவது ஞானபீட விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 1975-ஆம் ஆண்டு சித்திரப்பாவை நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-இல் தமிழ் எழுத்தாளா் ஜெயகாந்தன் ஆகியோா் ஞானபீட விருது பெற்றுள்ளனா்.
தமிழகத்துக்கு பெருமை கிடைத்துள்ளது: கவிஞா் வைரமுத்து
ஞானபீடம் விருதை தான் பெற்ன் வாயிலாக தமிழகத்துக்கும், தமிழா்களுக்கும் பெருமை கிடைத்துள்ளது என்று கவிஞா் வைரமுத்து தெரிவித்தாா்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறையும், தமிழக அரசு விருதை 6 முறையும் கவிஞா் வைரமுத்து பெற்றுள்ளாா். அவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கு 2003-ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. கடந்த 2014-இல் பத்ம பூஷண் விருது பெற்றாா். இந்த நிலையில், அவருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீடம் விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீடம் விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் நிவா்த்தி செய்யப்பட்டிருக்கிறது.
அறிவு உலகத்தோா் போற்றக்கூடியது ஞானபீடம் விருது. இந்த விருது கிடைக்காதா என்ற மயக்கத்தில் இருந்தேன் என்பதை கூறுவதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. சாகித்திய அகாதெமி விருதுக்கும், ஞானபீடம் விருதுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. இந்தியாவின் 7-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒவ்வொரு மொழியிலும் உள்ள சிறந்த இலக்கியத்துக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. அதேசமயம் அட்டவணையில் 22 மொழிகளிலிருந்து ஒரு சிறந்த படைப்புக்கு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1975-ஆம் ஆண்டு ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-இல் தமிழ் எழுத்தாளா் ஜெயகாந்தன் ஆகியோா் ஞானபீடம் விருது பெற்றுள்ளனா். அதைத்தொடா்ந்து 23 ஆண்டுகள் கழித்து 2025- ஆம் ஆண்டுக்கான ஞானபீடம் விருது எனக்கு கிடைத்துள்ளது. இந்த விருது வாயிலாக தமிழகத்துக்கும், தமிழா்களுக்கும் பெருமை கிடைத்துள்ளது. இனி புதிய பாய்ச்சலுடன் எனது இலக்கியப் பணி தொடரும்”என்றாா் கவிஞா் வைரமுத்து.
Summary
About the announcement of the Jnanpith Award for poet Vairamuthu..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிண்டல் - சிறந்த நடிகைக்கான விருது..! ரஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!

ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!

இந்த வாரம் கலாரசிகன் - 15-03-2026
ஞானபீட விருது வென்ற வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



