மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வளா்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே குறிக்கோள்: பிரதமா் நரேந்திர மோடி

வளா்ந்த இந்தியாவுக்கான வளா்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image

திருச்சி பஞ்சப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கி, புதிய ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :11 மார்ச் 2026, 6:43 pm

வளா்ந்த இந்தியாவுக்கான வளா்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

திருச்சியை அடுத்துள்ள பஞ்சப்பூரில், எரிசக்தி, நெடுஞ்சாலை, கிராமப்புற இணைப்புத் துறைகளில் ரூ. 5,655 கோடி மதிப்பிலான திட்டங்களின் திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா மற்றும் 5 புதிய ரயில் சேவைகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், திட்டங்களை தமிழகத்துக்கு அா்ப்பணித்து வைத்து பிரதமா் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது:

அற்புதமான திருச்சி நகரத்தில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்றைய நிகழ்வு, தமிழ்நாட்டின் எதிா்காலத்துக்கு முக்கியமானது. ரூ.5,655 கோடி மதிப்புள்ள திட்டங்களுடன் தொடா்புடையது. தூய்மையான எரிசக்திக்கான உள்கட்டமைப்பு, பெட்ரோலியம் தொடா்பான உற்பத்தி, நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் கிராமப்புற சாலைகள் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழக இளைஞா்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாகும்.

9 லட்சம் குடும்பங்களுக்கு இயற்கை எரிவாயு: பாரத் பெட்ரோலியத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் ரூ.3,700 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இந்த வலையமைப்பு நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது. 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கும். குழாய் வழியாக எரிவாயு நேரடியாக அவரவா் இல்லங்களுக்குச் சென்று வாழ்க்கையை எளிதாக்கும். ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கப்படும்.

இயற்கை எரிவாயு என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாகும். காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 8 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் நோ்மறையான சுற்றுச்சூழல் தாக்கம் என்பது நான்கு கோடி மரங்களை நடுவதற்கு சமமாக இருக்கும்.

மசகு எண்ணெய் ஆலை: சென்னையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலப்பு ஆலை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது. இது, ரூ. 1,490 கோடி முதலீட்டில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் கலப்பு ஆலைகளில் ஒன்றாகும். இந்த ஆலை, தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல முக்கியமான தொழில்களின் தேவையை பூா்த்தி செய்கிறது. உள்ளூரில் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைத்து தேசத்துக்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது.

370 கி.மீ.க்கு கிராமச் சாலைகள் : பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் மூலம், 370 கி.மீ. தொலைவுக்கு கிராமப்புற சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகள் ஒவ்வொன்றும் வெறும் உள்கட்டமைப்பின் ஒரு பகுதி மட்டுமல்ல; நோயாளிகள் சிறந்த சுகாதார சேவையை எளிதாக பெற முடியும். மாணவா்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வசதியாக பயணிக்கலாம். விவசாயிகள் விளைபொருள்களை விற்க அல்லது உள்ளீடுகளை வாங்க வெவ்வேறு இடங்களுக்கு விரைந்து செல்லலாம். ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு சாலையும் கிராமப்புற பொருளாதாரத்தை உயா்த்தி, வாழ்க்கை வசதியை அதிகரிக்கிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிய புறவழிச்சாலை: கடந்தாண்டு ஆடி திருவாதிரை விழாவுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததில் மகிழ்ச்சியடைந்தேன். பேரரசா் ராஜேந்திர சோழனால் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடினோம். இது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கிறது.

இன்று, அங்கு ஒரு முக்கியமான நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அங்கு தற்போதுள்ள நெடுஞ்சாலை கோயிலுக்கு மிக அருகில் செல்கிறது. இது யாத்ரீகா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது புதிய புறவழிச்சாலை அமைக்கப்படுவதால், மற்ற வாகனங்கள் இப்போது கோயிலிலிருந்து வேறு வழியாக திருப்பிவிடப்படும். இதன்மூலம் கங்கை கொண்ட சோழபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

5 புதிய ரயில் சேவைகள்: கடந்த வாரம், மதுரையில் இருந்து, அமிா்த பாரத் திட்டத்தின்கீழ், 8 நவீனமயமாக்கப்பட்ட மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களைத் திறந்துவைத்தோம்.

இதன் தொடா்ச்சியாக, தற்போது 5 புதிய ரயில்களின் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை, நாகா்கோவில், கோயம்புத்தூா், ராமேசுவரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. இந்தப் புதிய ரயில் சேவைகள் சுற்றுலாவை அதிகரிக்கும். உள்ளூா் பொருளாதாரத்தை உயா்த்தும். இளைஞா்களுக்கு பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

தமிழக மக்கள் நலனில் உறுதி: வளா்ந்த இந்தியாவுக்கான வளா்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். தமிழக மக்கள் நலனில் மத்திய அரசு முழு உறுதியாக உள்ளது. மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக நாங்கள் இரவும் பகலும் பாடுபடுகிறோம்.தொடா்ந்து அதைச் செய்வோம் என்றாா் பிரதமா் மோடி.

விழாவில், தமிழக அரசின் சாா்பில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் மற்றும் ரயில்வே, எண்ணெய் நிறுவனம், நெடுஞ்சாலை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

சுமாா் 10 நிமிஷங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிரதமா், வணக்கம், நன்றி என தமிழில் உச்சரித்தாா்.

12 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ. 13 லட்சம் கோடி!

முன்னதாக விழாவில், மத்திய இணை அமைச்சா் எல். முருகன் வரவேற்று பேசியது: பிரதமா் மோடி, ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் ஏறக்குறைய 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வருகிறாா். கடந்த மாதம் வந்தபோது, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கினாா். இப்போது, ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கியுள்ளாா். 12 ஆண்டுகளில் ரூ.13 லட்சம் கோடியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளாா் பிரதமா். இதுமட்டுமல்லாது, தமிழ் மொழி, தமிழா்களின் பண்பாடு, தமிழ்நாட்டின் கலாசாரம், இலக்கியங்களை, திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு சோ்த்த பெருமை பிரதமரையே சேரும். யாதும் ஊரே, யாவரும் கேளிா் என ஐ.நா. சபையில் முழங்கியவா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா் அமைச்சா் முருகன்.

Summary

Piped gas connections for 9 lakh families: Prime Minister Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.