ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடா்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என மத்திய , மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் சட்டம் இயற்றவில்லை என்பது கவலையளிக்கிறது.
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை செய்ய கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அப்போதைய திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.
ஆகவே, தவெக அரசு ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் தொல். திருமாவளவன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







