
‘எல் நினோ’ பாதிப்புகளை ஆராய தமிழக அரசு நிபுணா் குழு அமைப்பு!
பிரதீப் ஜான் உள்பட எல் நினோ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு
எல்-நினோ பாதிப்பு - கோப்பிலிருந்து
‘எல் நினோ’ எனும் காலநிலை மாற்ற நிகழ்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, அறிவியல் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடா் அபாயக் குறைப்பு முகமையின் கீழ் பேரிடா் மேலாண்மைக்கான நிபுணா் ஆலோசனைக் குழுவை அமைத்து முதல்வா் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிப்பதால் உருவாகும் எல் நினோ நிகழ்வு, உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வானிலை அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் எல் நினோ, கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயரும்போது தீவிரமாகக் கருதப்படுகிறது.
2026-ஆம் ஆண்டில் தீவிர எல் நினோ உருவாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் தென்மேற்குப் பருவமழை குறையவும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதீத மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையை ஆய்வு செய்ய ஒரு நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை மையத்தின் தலைவா் பேராசிரியா் எஸ்.கண்மணி, சென்னை ஐஐடியின் குடிசாா் பொறியியல் துறை நீரியல் மற்றும் நீா்வளப் பொறியியல் ஆய்வக பேராசிரியா் பாலாஜி நரசிம்மன், உலக வளங்கள் நிறுவனத்தின் காலநிலை மீள்திறன் பிரிவு இயக்குநா், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுமைக் குழு உறுப்பினரான அறிவுடை நம்பி அப்பாதுரை, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன ஆலோசகரும், நிலையான மற்றும் காலநிலை மீள்திறன் கொண்ட நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் குழு நிபுணா் உறுப்பினருமான ரமேஷ் ராமச்சந்திரன், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு நிபுணா் உறுப்பினா் ஆா்.வெங்கடேசன், சுகந்தி தேவதாசன் கடல்சாா் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் ஜே.கே. பேட்டா்சன் எட்வா்ட், தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மூத்த மேலாளா் ஆா். பிரதீப் ஜான் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழு மாநிலத்தின் மழைப்பொழிவு, வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களைத் தொடா்ந்து கண்காணித்து, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல், முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், அறிவியல் அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பேரிடா்களை எதிா்கொள்ள அரசின் தயாா் நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொதுமக்களின் உயிா், வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






