ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வரலாறு காணாத வெப்பம்: எல் நினோ தாக்கமா?

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு எல் நினோ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பம் பதிவானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published On :16 ஜூலை 2026, 9:00 am IST

எம்.சங்கர்

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு எல் நினோ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பம் பதிவானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மேல்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிகளவில் வெப்பமாவதால் ஏற்படும் காலநிலை மாற்றம் எல் நினோ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலநிலை மாற்றம் ஏறத்தாழ 7 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை நீடிக்கும் எனவும், இந்தக் காலங்களில் சராசரி அளவைவிட 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும், பருவமழை குறையும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த மே மாதம் பசிபிக் பெருங்கடலிலும், அரபிக் கடல், வங்கக் கடல் பகுதிகளிலும் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை காணப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எல் நினோ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் தென்மேற்குப் பருவழை குறையும், வெப்பம் அதிகரிக்கும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவில் 14 மாநகரங்கள்: உலகளவில் எல் நினோ தாக்கத்தால் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் 205 மாநகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்ற ஆராய்ச்சிப் பிரிவு அண்மையில் வெளியிட்டது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்கள் என்ற அடிப்படையில், மாநகரத்தின் மக்கள்தொகை அடர்த்தி, ஈரப்பதம், நகரமயமாக்கல், வனங்கள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்தப் பட்டியலின் முதல் 50 இடங்களில் இந்தியாவின் 14 மாநகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், மதுரை 7-ஆவது இடத்திலும், சென்னை 49-ஆவது இடத்திலும், பெங்களூரு 33-ஆவது இடத்திலும் உள்ளன.

மக்கள்தொகை அடர்த்தி, ஏரிகள், குளங்கள் அழிப்பு, வனங்கள், மலைகள் அழிப்பு, நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் காலநிலை பெரிய அளவில் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. எல் நினோ எச்சரிக்கைப்படியே நிகழாண்டில் தென்மேற்குப் பருவழமை தாமதமானது. மேலும், வழக்கமான மழை அளவில் 50 சதவீதம்கூட பெய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து தென்மேற்குப் பருவமழைக் காலத்திலேயே அதிகரிக்கும். ஆனால், நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை பெருமளவு குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 4 ஆயிரம் மில்லியன் கன அடியாக இருக்கும்போது மதுரை, தேனி மாவட்டங்களின் முதல்போக (குறுவை) நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால், நிகழாண்டில் மே மாதம் முதல் ஜூலை 15 வரை போதுமான நீர் இருப்பு இல்லாததால் மதுரை, தேனி மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடி பொய்த்துப் போனது.

இதேபோல, தென் மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையாததால், கடந்த சில நாள்களாகவே தென் தமிழகத்தின் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மதுரையில் பகல் நேரத்தில் மட்டுமல்லாமல், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. மேலும், ஆனி மாதத்தின் 15-ஆம் தேதியிலிருந்தே அதிகரிக்கும் ஆடிக் காற்றின் தாக்கம், ஆனி மாதத்தின் இறுதி வரை உணரப்படவில்லை.

அதிகபட்ச வெப்பம்: மழையின்மை, காற்றின் ஈரப்பதம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் மதுரையின் வெப்பத் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில், மதுரையில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவாக கடந்த செவ்வாய்க்கிழமை 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது, இயல்பைவிட 5.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

இதேபோல, கரூர், திண்டுக்கல், நீலகிரி, வேலூர் மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை இயல்பைவிட 5.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகப் பதிவானது. திருத்தணி, வேலூர், பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இயல்பைவிட 5.3 சதவீத அதிக வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக உதகையில் 7.4 சதவீதம் வெப்பம் உயர்ந்திருந்தது. இதுபொதுமக்களிடையே எல் நினோ அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

வறட்சி அபாயம்: இதுதொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் த. ராஜா தெரிவித்ததாவது: இந்தியாவில் தமிழகத்தைத் தவிர, பெரும்பாலான மாநிலங்கள் பெருமளவில் தென்மேற்குப் பருவமழையையே நம்பியுள்ளன. இந்த நிலையில், எல் நினோ காரணமாக இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வெகுவாகக் குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை பொய்த்துப் போனால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை குறைந்துவிடும். இதனால், தென் மாவட்ட அணைகளுக்கான நீர்வரத்து குறைந்து, குடிநீர்ப் பற்றாக்குறை, வறட்சி ஏற்படும் அபாயம் தலைதூக்கியுள்ளது.

தற்போதைய சூழலில் ஈரப்பதமற்ற வறண்ட மேற்குத் திசை காற்றின் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை மேலும் கடுமையாக உயரும். இதனால், தமிழகத்தில் கடுமையான வறட்சி, வெப்ப அலைகள், வேளாண்மை பாதிப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். எனவே, அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எல் நினோ காலநிலை மாற்றும் குறித்து விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. சுரேஷ் தெரிவித்ததாவது: எல் நினோ காரணமாக வெப்பநிலை கடுமையாக உயரும். எனவே, அதிக தண்ணீர் தேவை கொண்ட நெல், வாழை, கரும்பு, தென்னை சாகுபடிகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும். இதற்கு மாற்றாக, குறைந்த தண்ணீர் தேவை கொண்ட கம்பு, வரகு, சோளம், மக்காச்சோளம், எள் போன்றவற்றைப் பயிரிடுவதே சிறப்பாக இருக்கும். இதேபோல, சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலும், பயிர்ச் சிலந்திகளின் தாக்குதலும் அதிகமாகும். வருகிற ஒரு மாதத்துக்குள் பருவமழை தீவிரமாகி மழை பெய்தால் இந்த பிரச்னைகளை ஓரளவு சமாளிக்கலாம் என்றார்.

கடந்த 1877-78ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் மிகப் பெரிய பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்டன. இரு ஆண்டுகள் நீடித்த இந்தப் பஞ்சம் தென்னிந்தியாவின் பல பகுதிகளை கடுமையாகப் பாதித்தது. இது, அப்போது "தாது வருடப் பஞ்சம்' எனப்பட்டது. தற்போது, "சூப்பர் எல் நினோ' எனக் குறிப்பிடப்படுகிறது. இதேபோல, 1982- 83, 1997-98, 2015-16 ஆகிய ஆண்டுகளிலும் வெப்பத்தின் தாக்கத்தால் வறட்சி ஏற்பட்டது.

அதிகரித்துவரும் வெப்பமயம், அதிகமாகிவிட்ட மக்கள்தொகை அடர்த்தி, வனங்கள், இயற்கை வளங்கள் அழிப்பு போன்ற சூழல்களில் இனி வரும் காலங்களில் ஏற்படும் எல் நினோ பாதிப்புகளை சமாôளிப்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எல் நினோ போன்ற அசாதாரண காலநிலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே எல் நினோ பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.