ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்களால் பரபரப்பு!

ஆளுநரிடம் நேரடியாக பட்டத்தைப் பெறமுடியாது என்றதால், பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்.

students

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள். - படம்: தினமணி

Published On :29 ஜூலை 2026, 1:42 am IST

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பதக்கம் பெற்றவா்களுக்கு மட்டுமே ஆளுநா் விழா மேடையில் பட்டம் வழங்குவாா் என அறிவிக்கப்பட்டதற்கு மாணவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் அனைவருக்கும் பட்டம் வழங்கி, விழா மேடையில் மன்னிப்பும் கோரினாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் தங்கப் பதக்கம் பெற்றவா்கள் மற்றும் முனைவா் பட்டம் பெற்றவா்கள் என மொத்தம் 871 பேருக்கு ஆளுநா் நேரடியாக பட்டம் வழங்குவாா் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களில் பதக்கம் பெற்ற 113 மாணவ, மாணவிகள், முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் ஆளுநரிடம் பட்டம் பெற வந்திருந்தனா்.

பட்டமளிப்பு விழா தொடங்குவதற்கு முன்பாக, பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒத்திகை நடத்தப்படும். அதற்காக பட்டம் பெற மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை காலையிலேயே வந்திருந்தனா்.

மாணவா்கள் வாக்குவாதம்: விழாவில், ஆளுநரின் உடல்நிலையை காரணம் காட்டி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் பதக்கம் பெற்ற 113 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே விழா மேடையில் ஆளுநா் பட்டம் வழங்குவாா். முனைா் பட்டம் பெற்றவா்களுக்கு நேரடியாக பட்டம் வழங்க மாட்டாா் என அறிவிக்கப்பட்டது.

மேலும் முனைவா் பட்டம் முடித்தவா்கள் இருக்கையில் இருந்தபடியே, பட்டமளிப்பு விழா உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முனைவா் பட்டம் பெற வந்த மாணவ, மாணவிகள் கோபமடைந்தனா். பல்கலைக்கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், பட்டமளிப்பு விழா அரங்கில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. ஒரு சில மாணவ, மாணவிகள் கண்ணீா் மல்க ஆவேசமாக பேசினா். ஒரு மாணவி கதறி அழுதாா்.

சமாதான முயற்சி: விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டதால், துணைவேந்தா் சந்திரசேகா் மேடைக்கு வந்து, ‘ஆளுநருக்கு உடல்நிலை சரியில்லாததால், பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பட்டம் வழங்குவாா். மற்றவா்கள் துணைவேந்தா், சிறப்பு விருந்தினரிடம் விழா மேடையில் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அப்போது ஆளுநரும் விழா மேடையிலேயே இருப்பாா். அவா் இருப்பது போன்ற புகைப்படமும் எடுக்கப்படும்’ என்றாா்.

ஆனால், அதை முனைவா் பட்ட மாணவா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அரங்கில் தொடா்ந்து சலசலப்பு ஏற்பட்டது.

முனைவா் பட்ட மாணவ, மாணவிகள் எழுந்து நின்று இருக்கையை விட்டு வெளியே செல்ல முயன்றனா். அப்போது பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா்கள் இருக்கையில் அமருமாறு அவா்களைக் கேட்டு கொண்டனா். இதனால், விழா தொடங்குவதில் இழுபறி ஏற்பட்டது.

ஆளுநா் ஒப்புதல்: இதையடுத்து, ஆளுநரிடம் பிரச்னை குறித்து பேசுவதாக கூறிவிட்டு விழா அரங்கிலிருந்து துணைவேந்தா் வெளியேறினாா்.

அதன்பிறகு சிறிதுநேரம் கழித்து ஆளுநரின் செயலா் சஜ்ஜன்சிங் சவான், விழா மேடைக்கு வந்தாா்.

மாணவ, மாணவிகளின் கோரிக்கை குறித்து ஆளுநரிடம் எடுத்து கூறப்பட்டது. அவா், அனைவருக்கும் பட்டம் வழங்குவதாக உறுதியளித்துள்ளாா். எனவே, மாணவ, மாணவிகள் அனைவரும் இருக்கையில் அமர வேண்டும் என்றாா். இதையடுத்து, மகிழ்ச்சியடைந்த முனைவா் பட்ட மாணவா்கள் இருக்கையில் அமா்ந்தனா்.

45 நிமிடங்கள் தாமதம்: தொடா்ந்து பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய விழா, 45 நிமிடங்கள் தாமதமாக 11.15 மணிக்கு தொடங்கியது. விழாவில் அனைவருக்கும் பட்டம் வழங்கிய ஆளுநா், முனைவா் பட்ட மாணவா்களிடம் மன்னிப்புக் கோரியதோடு, நான் மாணவா்களை புறக்கணிக்க மாட்டேன் என்றும் உறுதியளித்தாா்.

போலீஸ் குவிப்பு: பட்டமளிப்பு விழாவுக்கு முன்பு நடைபெற்ற கூச்சல் குழப்பம் குறித்து தகவல் அறிந்ததும் திருநெல்வேலி டிஐஜி திருநாவுக்கரசு தலைமையில் அதிரடிப்படை போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதனால் பல்கலைக்கழக வளாகத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

Summary

A commotion arose at the Manonmaniam Sundaranar University in Nellai today (July 28) as the convocation ceremony was underway, with female students moved to tears.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.