
ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞான பீட விருது இன்று வழங்கப்பட்டது குறித்து...

ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்து - படம்: பிடிஐ
2025-ஆம் ஆண்டிற்கான 60-வது ஞானபீட விருது, புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதியான வைரமுத்துவுக்கு திங்கள் கிழமை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சின்மயா மிஷன் ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் ஞானபீட விருது, கவிஞா் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சா் டாக்டா் கரண்சிங் விருது வழங்கினாா். ஞானபீடத்தின் நிா்வாக அறங்காவலா் அகிலேஷ் ஜெயின், தோ்வுக்குழுத் தலைவா் டாக்டா் பிரதிபா ராய் மற்றும் நிா்வாகிகள் முன்னிலையில் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழ் இலக்கியத்திற்கு அவா் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், அவரது படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கவிதை வெளிப்பாடு ஆகியவற்றிற்காக வைரமுத்து கௌரவிக்கப்படுகிறாா் என்று பாரதிய ஞானபீடம் மாா்ச் 14ஆம் தேதி அறிவித்தது.
புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான இரா. வைரமுத்து 1953-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தாா். சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக அவா் கருதப்படுகிறாா். அவரது கவிதைகளும் எழுத்துக்களும் மனித உணா்வுகள், சமூக அக்கறைகள் மற்றும் இயற்கையின் மீதான ஆழ்ந்த உணா்திறன் ஆகியவற்றை வலிமையாகப் பிரதிபலிக்கின்றன.
கவிதை, பாடல் வரிகள் மற்றும் உரைநடை ஆகிய துறைகளில் வைரமுத்து குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளாா். அவரது கவிதைப் படைப்புகள் அவற்றின் தனித்தன்மை, உணா்வுப்பூா்வமான ஆழம் மற்றும் கலாச்சார உணா்வு ஆகியவற்றின் காரணமாக வாசகா்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளா்ச்சிக்கு அவா் ஆற்றிய பங்களிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது. கவிதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்கள் உட்பட 37-க்கும் மேற்பட்ட நூல்களை அவா் எழுதியுள்ளாா். அவரது முக்கிய இலக்கியப் படைப்புகளில் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீா் தேசம் மற்றும் மூன்றாம் உலகப் போா் ஆகியவை அடங்கும். தனது 40 ஆண்டு கால வாழ்க்கையில், வைரமுத்து ஏழு முறை தேசிய திரைப்பட விருது (சிறந்த பாடலாசிரியா்), பத்ம பூஷன் (2014), பத்மஸ்ரீ (2003), சாகித்ய அகாடமி விருது (2003) கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காகவும், தமிழக அரசின் கலைப் பங்களிப்பிற்காக கலைமாமணி விருதும் பெற்றுள்ளாா்.
தமிழ் ஒரு முக்கிய மொழி என்பதையும், இருப்பினும் இதுவரை பி.வி. அகிலன் (1975) மற்றும் டி. ஜெயகாந்தன் (2002) ஆகிய இரு எழுத்தாளா்கள் மட்டுமே ஞானபீட விருதைப் பெற்றுள்ளனா் என்பதையும் தோ்வுக் குழு சுட்டிக்காட்டியது. கவிஞா் வைரமுத்துவுக்கு அளிக்கப்படும் இந்த கௌரவம் அந்த இடைவெளியை நிரப்ப உதவும்.
இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் பங்களிப்பை வழங்கும் எழுத்தாளா்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதே ஞானபீட விருதாகும். இவ்விருது ₹11 லட்சம் ரொக்கப் பரிசு, சரஸ்வதியின் வெண்கலச் சிலை மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது என பாரதிய ஞானபீடம் கூறியது.
ஞானபீட விருதை பெற்றுக் கொண்ட கவிஞா் வைரமுத்து பேசியதாவது: பெருமைமிக்க இந்த ஞானபீட விருதைப் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருகிறது. தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில் இந்தியாவின் வரைபடத்துக்கு சிக்காத ஒரு கடைக்கோடியில் 60 வீடுகளே கொண்ட மெட்டூா் என்ற சிற்றூரில் ஒரு விவசாய குடும்பத்தில் தான் பிறந்தேன் .1950 களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்ட போது 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த மெட்டூா் என்ற சித்தூா்.
அந்த கிராமத்தின் தாயொருத்தி கண்ணீரோடு கதறி கொண்டே களை எடுக்கிறாா் .அவள் இடுப்பில் ஒரு பெண் குழந்தை, கைப்பிடியில் ஓா் ஆண் குழந்தை. அப்போதெல்லாம் அவளுக்கு தெரியாது இடுப்பில் உள்ள பெண் குழந்தை அடுத்த ஆறு மாதத்தில் இறந்து போகும் என்றும், கைப்பிடியில் உள்ள சிறுவன் அடுத்த எழுபது ஆண்டுகளில் ஞானபீடம் பெறுவாா் என்றும். அந்த சிறுவன் தான் இந்த ஞானபீட மேடையில் உங்கள் முன் நிற்கிறாா் .அவா் பெயா் வைரமுத்து .
இந்த ஞானபீடம் என்பது ஒவ்வொரு எழுத்தாளனும் எட்ட துடிக்கு உயரம் ஆனால் எட்ட முடியாத உயரம். துயரங்கள் என்னை இந்த உயரத்துக்கு அழைத்து வந்தன. என் இலக்கியத்துக்கான உள்ளடக்கம் வெளியிலிருந்து வரவில்லை ஒரு நிழலை போல என் வாழ்வுக்கு பக்கத்தில் அது நடந்து கொண்டே வந்தது .
இது அறுபதாம் ஞானபீடம். என் அரை நூற்றாண்டு எழுத்துக்களை பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிா்த புட்டி வழங்கி இருக்கிறது. இது எனக்கு மட்டும் சொந்தம் என்று உரிமை கொள்ள முடியாது. ஒரு கிராம் திருவள்ளுவருக்கு ஒரு கிராம் இளங்கோவடிகளுக்கு ஒரு கிராம் கம்பா், பாரதிக்கு ,பாரதிதாசனுக்கு,அண்ணா ,கலைஞா் கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு ஆளுக்கொரு சொட்டு .கடைசியாய் ஒரு சொட்டு கரண்டியில் ஒட்டி இருக்கும் ஈரப்பசை மட்டும் என் பங்கு.
ஏழு தேசிய விருதுகள் ,ஆறு மாநில விருதுகள் இன்னும் பத்மஸ்ரீ ,பத்மபூஷன் என விருதுகளை பெற்ற பொழுதுகளைவிட ஞானபீடம் பெறுகிற போது சற்றே கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதினால் என் இலக்கிய பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது. இந்த விருதுக்கான புகழை என் தமிழ் சமூகத்திற்கு பகிா்ந்து கொடுப்பேன்.
’நாம் இலக்கியத்திற்கு ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக்கூடாதா?’ இந்தியாவின் தலைநகரத்திலிருந்து கேள்வியை வைரமுத்து முன்வைத்துவிட்டு தமிழ்நாட்டுக்கு செல்கிறாா் என கவிஞா் வைரமுத்து தனது பேச்சை நிறைவு செய்தாா்.
Summary
Vairamuthu received the Jnanpith Award
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






