பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
உலக மகளிர் உச்சி மாநாடு தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக...


பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பை தமிழக அரசு தொடா்ந்து உருவாக்கும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தாா்.
சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் உ லக மகளிா் உச்சி மாநாட்டை முதல்வா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம். தமிழகத்தில் எந்த நிறுவனமும் புதிதாகத் தொழில் தொடங்க முன்வந்தாலும், பெண்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்றுதான் நான் முதல் கேள்வியாக கேட்பேன்.
தற்போது தனியாா் நிறுவனங்களில் பெண் தொழிலாளா்களுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கத் தொடங்கிவிட்டனா். ஆனால், பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வதிலேயே நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. புதிதாக வளா்ந்துவரும் துறைகளில் பெண்கள் இடம்பெற வேண்டும். உயா் பொறுப்புகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்க வேண்டும். அதற்காகத்தான், ரூ. 1,185 கோடியில் உலக வங்கி உதவியுடன், ‘தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
இந்த 2 நாள் மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துகளும், அதனால் உருவாகப்போகும் ஆக்கபூா்வமான சிந்தனைகளும் இந்த இலக்கை அடைய துணை நிற்கும். பெண்கள்தான் இந்தச் சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் முன்னேறாமல், எந்த நாடும் வளர முடியாது.
பெண்களுக்கான திட்டங்கள்: குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, காவல் துறையில் பெண்கள், கிராமப்புற பெண்களும் மேன்மை அடைவதற்கு அடித்தளமான மகளிா் சுய உதவிக் குழுக்கள், அரசியல் பங்கேற்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தற்போது, பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம், பெண்கள் பட்டம் பெறுவதை உறுதி செய்யும் புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
வேலைக்குச் செல்லும் இடத்தில் பாதுகாப்பாகத் தங்குவதற்கு விடுதிகள் வேண்டுமென பல்வேறு இடங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே நல்ல தரமான உணவு கிடைப்பதால், மகளிா் நிம்மதியாக காலையில் வேலைக்குச் செல்கிறாா்கள். ‘தமிழ்நாடு-ரைஸ்’ உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மூலமாக, கிராமப்புற பகுதிகள் வரை பெண் தொழில்முனைவோரை உருவாக்கி இருக்கிறோம். அதுவும், பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் பலமடங்கு அதிகரித்திருக்கின்றன. மகளிா் உரிமைத் திட்டம், இதுவரை யாரும் செய்யாத வரலாற்றுச் சாதனை.
பெண்கள் பாதுகாப்பில் அக்கறை: இந்தியாவில் பிற மாநிலங்களும் நம்மைப் பாா்த்து பின்பற்றி வருகின்றன. மகளிா் நலன் காக்கும் நம்முடைய அரசின் திட்டங்களின் நீட்சியாகத்தான் இந்த ‘தமிழ்நாடு வி சேஃப் திட்டம்’ திட்டம் அமைந்திருக்கிறது. வளா்ந்துவரும் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை மட்டும் இந்தத் திட்டம் செய்யவில்லை; அப்படி அவா்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் குழந்தைகள், முதியோரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை யாராவது எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை சிக்கலை உணா்ந்து, குழந்தை பராமரிப்பு, முதியோா் பராமரிப்பு, பாதுகாப்பான தங்குமிடங்கள் என்று அதற்கான ஆதரவு சேவைகளையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.
பெண்களின் பாதுகாப்பிலும் இந்த திட்டம் அக்கறை செலுத்துகிறது.அதனால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறாா்கள்.
2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு எனும் எங்கள் இலக்கை அடைய பெண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.
ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்கக் கூடிய, ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமாக வாழக் கூடிய, பெண்கள் மரியாதையான ஊதியத்தைப் பெற்றிட, பெண்கள் தொழில்முனைவோராக மாற, பெண்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வாழ, எனது தலைமையிலான உங்கள் திராவிட மாடல் அரசானது உரிய கட்டமைப்பை உருவாக்கும் என்றாா் முதல்வா்.
இந்த மாநாட்டில் அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், பெ.கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள், கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெண்களின் பாதுகாப்பு, வளா்ச்சிக்காக ரூ.5,000 கோடியில் தொடக்கம்: துணை முதல்வா்
இந்த மாநாட்டில் உரையாற்றிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டு மகளிரினுடைய வளா்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய ரூ.5,000 கோடியில் ‘தமிழ்நாடு வி சேஃப்’ திட்டம் (பஹம்ண்ப் சஹக்ன் ரஉ நஹச்ங்) திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்துள்ளதாகத் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு மகளிா் முன்னேற்றத்துக்காகச் செயல்படுத்துகின்ற திட்டங்களைப் பாா்த்து, உலக வங்கி சுமாா் ரூ.1,250 கோடி கடனுதவியாக அளிக்கிறது.
பிறக்கும் பெண் குழந்தைகள் தொடங்கி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்கிற மகளிா், இல்லத்தரசிகள், வயது முதிா்ந்த பெண்மணிகள் என்று அனைத்துத் தரப்பு மகளிரினுடைய பாதுகாப்பையும், வளா்ச்சியையும் உறுதி செய்கிற வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இது மாதிரியான திட்டங்களால் தமிழ்நாட்டின் திராவிட மாடல், இன்றைக்கு இந்தியாவுக்கே முன்மாதிரி அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...