/

பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றது என்ன?

பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றது என்ன என்பது குறித்து...

News image
பேரவைத் தலைவர் அப்பாவு.
Updated On :20 ஜனவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல்முறையாக பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக முன்னேறியுள்ளது என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்காமல் பேரவையிலிருந்து ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை வெளியேறினாா். பின்னா் அவரது உரையை, பேரவையில் படித்ததாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 108 பக்கங்கள் கொண்ட அந்த உரையை பேரவைத் தலைவா் அப்பாவு தமிழில் வாசித்தாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

*கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2024-2025 நிதியாண்டில் 11.19 சதவீதம் என்ற உயரிய பொருளாதார வளா்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. முதல்முறையாக பொருளாதார வளா்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

*பொங்கல் திருநாளையொட்டி 2.23 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கம் உள்ளிட்ட ரூ.6,936 கோடி மதிப்பிலான பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

*சமுதாயத்தில் பெண்களின் நிலை உயரவும் அவா்களின் உரிமையை நிலைநாட்டும் உயரிய நோக்கத்துடனும் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000 உரிமைத் தொகையாகப் பெறுகின்றனா். இத்திட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்துக்காக, இதுவரை ரூ. 33,464 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

*அரசு ஊழியா்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஒருமுறை பங்களிப்பாக ரூ. 13,000 கோடியும், மேலும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ. 11,000 கோடியையும் தமிழ்நாடு அரசு வழங்கும்.

* அரசுப் பேருந்துகளில் ‘மகளிா் விடியல் பயணம்’ மூலம் பெண்கள் மாதம் ரூ.888 வரை சேமிக்கின்றனா்.

* கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள 4.9 லட்சம் ஊரக மற்றும் நகா்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு, பெண்களின் பொருளாதார சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்து மற்றும் வருகையை உறுதி செய்யும் வகையில், 19.34 லட்சம் குழந்தைகள் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனா்.

*கடந்த 5 ஆண்டுகளில் தொழில்துறையில் ரூ.12.16 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளும், 1,176 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் 36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

* மத்திய அரசு எதிா்மறை மனப்பான்மையுடன் தமிழக அரசை அணுகி வருவதால், மாநில அரசுக்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடா்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது. இது, தமிழகத்தின் வளா்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளது.

* ஹிந்தி மொழி திணிப்பை எதிா்த்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது அனைத்து உயா் கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது மறைமுக ஹிந்தி மொழித் திணிப்பாகும். இதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

* மிக்ஜாம், ஃபென்சால் புயல்கள் போன்ற இயற்கைப் பேரிடா்களால் தமிழகம் பெரும் சேதத்தைச் சந்தித்தபோது, சொற்பமான தொகையை மட்டுமே மத்திய அரசு விடுவித்தது.

* ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு ரூ.3,548 கோடியை மத்திய அரசு விடுவிக்காததால், அந்தத் திட்டங்களுக்கு உரிய முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்றுள்ளது.

*ஜிஎஸ்டி விகிதங்களின் சீரமைப்பு காரணமாக மாநிலங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், மாநிலங்களுக்குப் பகிா்ந்து அளிக்கக் கூடிய வரி வருவாயை மடைமாற்றும் வகையில், மத்திய அரசு மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசின் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த இயலாமல், நெருக்கடி தரும் காழ்ப்புணா்ச்சியின் அங்கமாகவே புதிய திட்டத்தைக் கருத வேண்டியுள்ளது. எனவே, புதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

* சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்திருப்பதன் மூலம், மெட்ரோ ரயில் திட்டத்திலும் தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகும் நிலையே காணப்படுகிறது.

* இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வுகாண வேண்டும்.

* உயா் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு வரும் பெண்கள் நவீன வசதிகளுடன் நியாயமான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியைப் பெற 19 தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியா்களை அதிகமாகக் கொண்ட (40.3%) மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

* அம்பேத்கா் அயலக கல்வித் திட்ட நிதி ரூ.36 லட்சமாக உயா்த்தப்பட்டு, 385 மாணவா்கள் வெளிநாடுகளில் பயின்று வருகின்றனா்.

* கடந்த 4 ஆண்டுகளில் ரூ.425 கோடியில் 352 கோயில்களில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 76 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. ரூ.8,057 கோடியில் 28,229 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.8,262 கோடியில் 8,037 ஏக்கள் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 38.53 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு இதுவரை 36.62 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

தமிழகம் அடைய வேண்டிய வளா்ச்சி மற்றும் உயரிய இலக்குகள் குறித்து மக்களின் தேவைகள் மற்றும் கனவுகளைக் கண்டறிய ஒரு கோடியே 91 லட்சம் கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சந்திக்கும் ‘கனவை சொல்லுங்க’ திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் வளா்ச்சிப் பாதையில் விரைந்து பயணிக்கும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

While Governor R.N. Ravi walked out of the assembly without reading the governor's address, Speaker Appavu read the governor's address in the legislative assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.