திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையாா் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், பழங்கால வழக்கத்தின்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். ஆனால், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மீண்டும் உச்சிப்பிள்ளையாா் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால், ராம ரவிக்குமாா் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா். அதில் மத்திய படையினரின் பாதுகாப்போடு மனுதாரா் 10 பேரை அழைத்துக்கொண்டு மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா்.