பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி செலுத்தியிருப்பது பற்றி...

News image
ஜெயலலிதா- படம்: இபிஎஸ்/எக்ஸ்
Updated On :24 பிப்ரவரி 2026, 5:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவானது மாநிலம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”நம் உள்ளங்களிலும், தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும் 'தங்கத் தாரகை' ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், 'ஜெயலலிதாவின் புகழ் ஓங்குக' என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும் இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில், பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், அனைத்து நேரங்களிலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம் போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதாவை தமிழ் நாட்டு மக்கள் ஒரு நாளின் ஒவ்வொரு நகர்விலும் நினைத்துப் பார்க்கின்றார்கள்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலும், இதய ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்ட, எனது தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலும், மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம், ஏராளம்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை, ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டு மக்களின் நலன்களை பேணிப் பாதுகாத்திட, மாநில அரசை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் மிகச் சிறந்த நிர்வாகியாகவும், தெளிவான சிந்தனையோடும், தெளிவான திட்டங்களைக் கொண்டு வந்து அதை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதிலும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், ஒரு தீர்க்கதரிசியாகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா.

பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்திய நம் ஜெயலலிதா, பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா தி.மு.க. அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது, மத்தியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளைக் கொடுத்தும், மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டு, பல்வேறு நெருக்கடிகளைத் தந்தபோதிலும், தனது மதிநுட்பத்தாலும், நிர்வாகத் திறமையாலும் அனைத்து சாவல்களையும் எதிர்கொண்டு எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்பட்ட அதிமுக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், இந்த தி.மு.க. அரசு தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றிடவும், இருமொழிக் கொள்கைகளை நிலைநாட்டிடவும், திறனற்ற அரசாக இருந்துகொண்டிருக்கிறது.

விடியா தி.மு.க. அரசின் இந்த அலங்கோல ஆட்சியில் நாள்தோறும் தமிழ் நாட்டில், பெண் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண் காவலர்களுக்கும்கூட பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், பட்டப் பகலில் அரங்கேறும் கொலை, கொள்ளை என சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உண்மைகளைச் சொல்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது.

இந்த அவலங்களையெல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாய் திகழ வேண்டும். தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.

தமிழக மக்களின் நலன் கருதி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற உயரிய லட்சியத்துடன் நான் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணங்களின்போது, நான் செல்லும் இடங்களில் எல்லாம் அலைகடல் எனத் திரண்டு வரும் அதிமுக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு மக்களையும் பார்க்கின்றபோது, அதிமுக ஆட்சியே மீண்டும் மலரப் போகிறது என்கிற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று ஜெயலலிதா சொன்னதைப் போல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது. "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் ஜெயலலிதா சூளுரைத்தார்கள். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் ஜெயலலிதாவின் பிறந்த நாள்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். அந்த எழுச்சி, வருகின்ற 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் வெற்றியை பிரதிபலிக்கின்ற வகையில் அமைய வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள வெற்றிக் கூட்டணியில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டாலும், அவர்களின் வெற்றிக்காக முழுமூச்சுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.