டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்ய துணிந்துவிட்டார்: டிடிவி. தினகரன் விமர்சனம்

ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் என்று அ.ம.மு.க., பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

News image
டிடிவி. தினகரன்
Updated On :21 பிப்ரவரி 2026, 4:46 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் என்று அ.ம.மு.க., பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எம்.எல்.ஏ. ஐயப்பன் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியது, தி.மு.க.வில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பம். தொண்டர் தெய்வமாக போற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியது, கோடானகோடி தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓ.பி.எஸ். மக்கள் பணியாற்ற வேண்டும் என்றால் இன்னொரு கட்சிக்கு செல்லலாம்.

ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக 2017-ம் ஆண்டு தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பி.எஸ்.

இருப்பினும் ஓ.பி.எஸ்.-ஐ பெருந்தன்மையாக பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டு, பழனிசாமியிடம் பேசி துணை முதல்வராக கொண்டு வந்தார். இன்றைக்கு பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். ஓ.பி.எஸ்.-ஐ ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யும் போது கட்சியின் சட்டத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார். ஓ.பி.எஸ். சேரட்டும் தி.மு.க.வில்; பதவிக்கு வரட்டும், வராமலும் போகலாம். இதை மக்கள் தீர்மானிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு கலக்கம் விளைவிப்பதை மன்னிக்க முடியாது. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இதைவிட சிறப்பு துரியோதன கும்பல் போல பேசியதை முதல்வர் கைத்தட்டி ரசித்தது புன்முறுவலாக இருந்தது. இதற்கேற்ப ஓ.பி.எஸ்., ஐயப்பன் இருவரும் நடந்துகொண்டது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் இதைவிட தீங்கை யாரும் இழைக்க முடியாது.

மக்கள் விரோத ஆட்சியை விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி, பணநாயகத்தால் எப்படியாவது வென்றுவிடலாம் என நினைத்தவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமை பெற்று, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரணியில் திரண்ட பிறகு தி.மு.க. அச்சமடைந்து அவசரகதியில் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்துள்ளனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வளர்ச்சி நிதி 11 ஆயிரம் கோடியை மாற்றியுள்ளனர். 50 ஆயிரம் அல்ல, வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் இந்த தேர்தலில் தி.மு.க. உறுதியாக தமிழக மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்.

இந்த பயத்தினால்தான் கேச்சர்ஸ் போல பல கட்சிகளைப் பிடித்துள்ளனர். இதை அரசியல் சந்தர்ப்பவாதமாக பலரும் பேசுகிறார்கள். பணநாயகத்திற்கான வெற்றியே தவிர பொதுநலனுக்கான வெற்றி அல்ல. ஓ.பி.எஸ். தன்னை தர்மராக நினைத்து 1.0 என தர்மயுத்தம் நடத்தினார்.

பின்னர், தர்மயுத்தம் 2.0-வை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் தங்கபாண்டியன் சொன்னதால் தொடங்கியதாக ஓ.பி.எஸ். கூறினார். தற்போது 3.0-வை யார் சொல்லித் தொடங்கினார் என்பது தெரியவில்லை. இது ஓ.பி.எஸ்.-க்கு நல்ல பாடமாகும். தர்மயுத்தம் தர்மர் நடத்த வேண்டும்; அதர்மவாதி நடத்தினால் அதர்மத்தில்தான் முடியும். துரியோதனன் கூட்டத்தில் சென்று சேர்கிறார்கள்.

சட்டப்பேரவை, மாநிலங்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் ஒரணியில் இணைந்து, எங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து, ஜெயலலிதாவின் ஆட்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என உள்ளோம்.

தங்களுக்கு பதவி இல்லை, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஜெயலலிதாவின் கட்சியை ஒன்றிணைப்பேன், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என சொன்னவர்கள் எல்லாம் திடீரென கிளம்பி டம்மி வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். இன்னும் டம்மியாக சிலர் தி.மு.க.,வுக்கு சேவை செய்யவும் கிளம்பிவிட்டனர்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாதான் தெய்வம்; ஆட்சி வேண்டும், கட்சியை ஒன்றிணைப்போம் என கூறியவர்கள் எல்லோரும் தி.மு.க.வின் ஏஜெண்ட்களாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருகிறது.

ஒரு கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய ஆறு மாதங்கள் ஆகும்; மூன்று மாதங்களில் முடியாது. எனவே யாராவது கட்சி ஆரம்பிப்பேன் என்றால் யாரும் ஏமாற வேண்டாம். இன்னொரு கட்சியில் இருந்து ஆட்களைப் பிடித்து வேட்பாளராக தேர்தலில் நிறுத்துவது விந்தையாகும். ஓ.பி.எஸ். பரதனாக காட்டினார்; இன்னும் சிலரின் சொரூபம் விரைவில் வெளிப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை பேசவில்லை. எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் சட்டப்பேரவைக்கு செல்வார்கள். கஞ்சா, ஊழல் புகழ் தி.மு.க. ஆட்சியை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டு வர அமித் ஷா முயற்சி செய்து வருகிறார். அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் தி.மு.க.வின் முதல் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் வழக்கில் வரும் என்பதால் அமைச்சர் நேருவை பாதுகாக்க நினைக்கிறார்கள் என்றார்.

summary

AIADMK General Secretary TTV Dhinakaran has said that OPS has dared to do anything to get a position.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.