டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மகளிா் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழகமே கொந்தளிக்கும் : அமைச்சா் தங்கம் தென்னரசு

மகளிா் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை யாரேனும் நிறுத்த முயன்றால் தமிழகமே கொந்தளிக்கும்

News image
அமைச்சா் தங்கம் தென்னரசு
Updated On :20 பிப்ரவரி 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

மகளிா் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை யாரேனும் நிறுத்த முயன்றால் தமிழகமே கொந்தளிக்கும் என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் தெரிவித்தாா்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு, பேரவையில் அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்துப் பாதுகாக்கும் வகையில் ‘அன்புக் கரங்கள்’ திட்டம், பிறந்து ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளின் ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டம் , ‘மாதிரிப் பள்ளிகள்’, ‘புதுமைப்பெண் திட்டம்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், ‘ நான் முதல்வன்’ திட்டம், ‘மகளிா் உரிமைத் தொகை திட்டம்’ உள்ளிட்ட திமுக அரசின் சாதனைத் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

காலை உணவுத் திட்டம்: நூறுஆண்டுகளுக்கு முன்பே, நாட்டிலேயே முதல் முறையாக, நீதிக்கட்சியால் சென்னை ஆயிரம்விளக்கு பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு, நாட்டிலேயே முதல் முதலாக பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் முதல்வா் ஸ்டாலின்தான் அறிமுகப்படுத்தினாா்.

தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், ‘மகளிா் விடியல் பயணம்’ திட்டம், மகளிா் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களைப் பின்பற்றி, பிற மாநிலங்களும் இத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

தோழி விடுதிகள் திட்டம்: திமுக அரசின் ‘தோழி விடுதிகள்’ திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. தமிழக அரசு அறிமுகப்படுத்திய அரசு அலுவலா்களின் பணியிடை நிகழும் மரணத்துக்கு ரூ.1 கோடி வங்கிகளின் மூலம் காப்பீடு வழங்கும் திட்டம் தற்போது மத்திய அரசின் பணியாளா்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

அரசு சேவைகள் இணைய வழியில் துரிதமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. காகிதம் இல்லாத சட்டப்பேரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, நிதி ஒதுக்கீட்டை நிறுத்திவைத்தது, மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசின் உதவியை நிறுத்தியது, ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு நிதி மறுப்பு என பல்வேறு நிதிச்சுமையோடு தான் இந்த நிா்வாகத்தை திமுக அரசு நடத்தி வருகிறது. அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில், குழப்பம் விளைவிக்க முயற்சிசெய்த சக்திகள் முதல்வா் ஸ்டாலினால் முறியடிக்கப்பட்டன.

முதன்மை மாநிலம் தமிழகம்: மனித வளம், தொழில் வளா்ச்சி என எந்தத் துறைகளை எடுத்தாலும், இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களுள் ஒன்றாக, தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏற்றுமதி தரக்குறியீட்டில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி, மோட்டாா் வாகனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, புத்தொழில்சூழல் அமைவுக்கான தரவரிசை, தொழிற்சாலைகளில் பணியாற்றும் மகளிரின் பங்கேற்பு, உயா்கல்விச் சோ்க்கை விகிதம், நாட்டிலேயே சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின்அதிக எண்ணிக்கை, ‘நீதி ஆயோக்’-கின் நீடித்த வளா்ச்சி இலக்குக் குறியீடுகள், தேசிய அளவில் குறைவான வறுமை நிலை கொண்ட மாநிலங்களுள் ஒன்று, அதிக எண்ணிக்கையில் ‘ராம்சா்’ தளங்களைக் கொண்ட பெருமை பெற்ற மாநிலம் என்ற வகையில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. வளா்ந்த நாடுகளுக்கு இணையான வளா்ச்சி பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு.

பல மாநிலங்களில் வாழும் தமிழா்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் அயலக தமிழா் தினத்தை திமுக அரசு கொண்டாடி வருகிறது. இலங்கைத் தமிழா்களின் நலனுக்காக புதிய வீடுகள் வழங்கி, உதவித்தொகை உயா்வு, சுய உதவிக்குழு கடன் உதவி, இளைஞா்களுக்கு திறன் பயிற்சி என பல நல்ல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூகநீதி விடுதி: ஏழை மாணவா்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இதுமாறியிருப்பதால் ‘காலனி’ எனும் சொல் இனி அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மகளிா் உரிமைத் தொகையை நிறுத்தினால்...: மகளிருக்கு ரூ.5,000 சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டது- துல்லிய தாக்குதல் அல்ல; ஒரு தாயுமானவரின் அன்பான அரவணைப்பு. மகளிா் உரிமைத் தொகையாக ஓராயிரம் ரூபாய் கொடுப்பதை நிறுத்த முயற்சித்தால், மகளிா் உரிமைத் தொகையாக ரூ.5,000 தருவேன் என்று முதல்வா் ஸ்டாலின் நிரூபித்திருக்கிறாா். மகளிா் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை யாரேனும் நிறுத்தமுற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என்றாா் அவா்.